சென்னை மற்றும் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் ஜூன் 19 முதல் மீண்டும் முழு ஊரடங்கு » Sri Lanka Muslim

சென்னை மற்றும் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் ஜூன் 19 முதல் மீண்டும் முழு ஊரடங்கு

IMG_20200616_092043

Contributors
author image

BBC

சென்னையில் கொரோனா பரவல் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், ஜூன் 19ஆம் தேதி முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. திங்களன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 19ஆம் தேதி அதிகாலை 00.00 மணி முதல் ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை சென்னை, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் மாவட்டம் , செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் பேரூராட்சிகள், பூவிருந்தவல்லி, ஈக்காடு, சோழவரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து இடங்களிலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் நகராட்சி, நந்திவரம் – கூடுவாஞ்சேரி பேரூராட்சி, காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து இடங்களிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை காவல் வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளிலும் இந்த ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

கொரோனாபடத்தின் காப்புரிமைFACEBOOK

இந்த ஊரடங்கின் போது சில அத்தியாவசியப் பணிகளுக்குத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

1. மருத்துவமனைகள், மருத்துவ சோதனைக்கூடங்கள், மருந்துக் கடைகள், ஆம்புலன்ஸ்கள், அமரர் ஊர்திகள், மருத்துவம் தொடர்பான பிற பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

2. வாடகை டாக்ஸி, ஆட்டோ ஓட்டுவதற்கும் தனியார் வாகனங்களை இயக்குவதற்கும் அனுமதி கிடையாது. ஆனால், அவசர மருத்துவப் பணிகளுக்கு இவற்றைப் பயன்படுத்தலாம்.

3. மாநில அரசுத் துறைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். தலைமைச் செயலகம், சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை, பேரிடர் மேலாண்மை, மின்சாரத் துறை, உள்ளாட்சித் துறை போன்ற அத்தியாவசியத் துறைகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.

4. மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசியத் துறைகளில் தேவையான பணியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

5. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. அதற்கான அனுமதியை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும்.

6. வங்கிகள் ஜூன் 29, 30 ஆகிய இரு நாட்களில் மட்டும் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். ஏடிஎம் போன்றவை தொடர்ந்து இயங்கும்.

7. பொது விநியோகக் கடைகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்.

8. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அரசு அறிவித்த நிவாரணங்கள் நியாயவிலைக் கடைகளின் பணியாளர்களால் நேரடியாக வீடுகளில் வழங்கப்படும்.

9. காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை செயல்படும்.

10. அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்லும் பொதுமக்கள் வாகனங்களைப் பயன்படுத்தாமல் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளிலேயே வாங்க வேண்டும்.

கொரோனாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

11. உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணிவரை அனுமதிக்கப்படும். ஆனால், பார்சல் விற்க மட்டுமே அனுமதி. தேநீர் கடைகளுக்கு அனுமதி கிடையாது. உணவுகளை வீடுகளுக்குச் சென்று அளிக்கும் சேவைகளுக்கு அனுமதி உண்டு.

12. அம்மா உணவகங்கள், கம்யூனிட்டி சமையலறைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

13. தொண்டு நிறுவனங்கள், என்ஜிஓக்கள் அரசின் அனுமதி பெற்று இயங்கலாம்.

14. அச்சு மற்று மின்னணு ஊடகங்கள், நீதிமன்றங்கள் ஆகியவை இயங்கலாம்.

15. பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து செயல்படும் பணியாளர்களை வைத்து கட்டுமானப் பணிகளை நடத்தலாம்.

17. தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவர அனுமதி கிடையாது. தொழிலாளர்கள் ஒரு முறை ஆர்டிபிசிஆர் சோதனை செய்து, தொழிற்சாலைகளுக்கு அருகிலேயே தங்கியிருந்து வேலைக்குச் செல்லலாம். தொடர் செயல்பாடுகள் உள்ள, அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும்.

18. இந்த காலகட்டத்தில் சரக்குப் போக்குவரத்திற்கும் அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் அனுமதி உண்டு.

19. சென்னையிலிருந்து திருமணம், இறப்பு, மருத்துவம் சார்ந்த காரணங்களுக்கு மட்டும் ஊரைவிட்டு செல்ல ஈ – பாஸ் வழங்கப்படும்.

20. வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் ரயில்களுக்கும் விமானங்களுக்கும் பழைய நடைமுறை தொடரும்.

ஜூன் 21, ஜூன் 28 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் கடுமையான ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், பால் கடைகளைத் தவிர வேறு எந்தக் கடைகளும் திறக்கப்பட மாட்டாது. மருத்துவ வாகனங்களைத் தவிர வேறு எந்த வாகனங்களும் இயங்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் நிவாரணத் தொகையாக அரிசி வாங்கக்கூடிய பொது விநியோக அட்டைத் தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்தப் பகுதிகளில் வசிக்கும் பல்வேறு நலவாரிய உறுப்பினர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

பொதுமக்களும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka