டொனால்டு டிரம்ப்: அமெரிக்க அதிபரை கடுமையாக விமர்சிக்கும் நூலுக்கு தடைவிதிக்க நீதிபதி மறுப்பு » Sri Lanka Muslim

டொனால்டு டிரம்ப்: அமெரிக்க அதிபரை கடுமையாக விமர்சிக்கும் நூலுக்கு தடைவிதிக்க நீதிபதி மறுப்பு

IMG_20200621_100601

Contributors
author image

BBC

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக சீனாவின் உதவியை நாடினார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தும் அமெரிக்க முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனின் நூலுக்குத் தடைவிதிக்க மறுத்தது நீதிமன்றம்.

பணி தொடர்பான ஒப்பந்தத்தில் பணிக்காலம் தொடர்பாக புத்தகம் எழுதினால், வெளியிடுவதற்கு முன்பாக அரசின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்று இருக்கும் ஷரத்தை அவர் மதிக்கவில்லை என்று டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டியது.

ஏற்கெனவே நூற்றுக்கணக்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஜான் போல்டன் புத்தகத்துக்கு தடை விதிப்பதால் எந்த சேதாரம் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியதால், தடை கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று வாஷிங்டன் டிசி மாவட்ட நீதிபதி ராய்ஸ் லேம்பர்த் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அதே நேரம், ஜான் போல்டன் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புடன் விளையாடிவிட்டார் என்றும், நாட்டுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார் என்றும் நீதிபதி குற்றம்சாட்டினார்.

ஏற்கெனவே கசியவிடப்பட்ட இந்த புத்தகத்தை தடை விதித்திருந்தாலும் எந்தப் பயனும் ஏற்பட்டிருக்காது என்று குறிப்பிட்ட டிரம்ப், போல்டனுக்கு நீதிபதி தெரிவித்த கண்டனங்களை மிகப் பெரிய வெற்றி என்று டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

ஜான் போல்டன் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக 2018 ஏப்ரல் மாதம் இணைந்தார். இரான், ஆப்கானிஸ்தான், வடகொரியா போன்ற முக்கிய சர்வதேச விவகாரங்களில் டிரம்ப்பின் முடிவோடு முரண்பட்டு 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணியில் இருந்து விலகினார்.

இந்த முரண்பாடுகள் எழுந்த உரையாடல் நடந்த அறையில், டிரம்ப் பிழையாகவும், கோபமாகவும், அதிர்ச்சியூட்டும் வகையில் விஷயம் தெரியாதவராகவும் நடந்துகொண்டார் என்று போல்டன் குற்றம்சாட்டுகிறார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரங்களின் அடிப்படையில் வைக்கப்படவில்லை. தனிப்பட்ட உரையாடல்களின் அடிப்படையில் வைக்கப்பட்டது. எனவே, இதனை சரிபார்க்க முடியாது.

போல்டன் வைத்த சில குற்றச்சாட்டுகள்:

மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் உதவியை நாடினார் டிரம்ப் என்பது அதில் மிகவும் தீவிரமான குற்றச்சாட்டு.

தென்னமரிக்க நாடான வெனிசுவேலா மீது படையெடுப்பது இனிமையான ஒன்றாக இருக்கும் என்று டிரம்ப் கூறியதாகவும், அது ஐக்கிய அமெரிக்க நாட்டின் ஒரு பகுதிதான் என்று கூறினார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் வீகர் முஸ்லிம்களுக்காக நன்னடத்தை முகாம்களை அமைத்த அந்நாட்டு அரசின் செயலை டிரம்ப் சரி என்று கூறினார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

Web Design by The Design Lanka