கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு? முதல்வர் எடப்பாடி யோசனை » Sri Lanka Muslim

கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு? முதல்வர் எடப்பாடி யோசனை

Contributors
author image

BBC

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்துகிறார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

தற்போது சென்னையில் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் வீரியம் பெற தொடங்கி உள்ளது என்று கூறும் தினத்தந்தி செய்து பின் வருமாறு விவரிக்கிறது.

தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவி வரும் வேளையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது. தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் கலந்துகொள்கின்றனர்.

தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சருடன் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

பல மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆய்வுக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்டங்களை தொடர்ந்து மதுரையிலும் முழு ஊரடங்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே தொற்றை தடுக்க மேலும் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா? அல்லது மாநிலம் முழுவதுமே முழு ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதா? என்பது இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தெரியவரும்.

Web Design by The Design Lanka