கொரோனா வைரசால் மாறிய கல்வி: இணையம் இல்லாத மாணவர்களின் எதிர்காலம் என்ன? » Sri Lanka Muslim

கொரோனா வைரசால் மாறிய கல்வி: இணையம் இல்லாத மாணவர்களின் எதிர்காலம் என்ன?

Contributors
author image

BBC

செஸ் விளையாட்டு பயிற்சியாளர் அனுராதா பெனிவால் வெவ்வேறு கண்டங்களில் உள்ள பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தனது நேரத்தை பிரித்து செலவிடுகிறார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய பிறகு லண்டனில் இருக்கும் வசதி மிக்க மாணவர்கள் படிக்கும் தனியார் பள்ளிகள் மற்றும் இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் பழங்குடியின மாணவர்கள் பயிலும் பள்ளிகள் ஆகியவற்றுக்கு அவர் அளிக்கும் பயிற்சிகள் சவால் மிகுந்தவையாக மாறியுள்ளன.

இணையதள வசதியை அனைவராலும் பெற முடியாத, சூழல் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய பிறகு இந்திய மாணவர்களின் கல்வியில் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

லண்டனில் இருக்கும் அனுராதா தொலைபேசி மூலம் பிபிசியுடன் உரையாடினார். “இந்த வைரஸ் தொற்று தற்போது இருக்கும் கல்வி கொள்கைகள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பதையும் மறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் உலகெங்கிலுமுள்ள கல்வியாளர்களை சிந்திக்க வைத்துள்ளது ,”என்கிறார் அவர்.

“லண்டனில் அதிகபட்சமாக 8 மாணவர்களுக்கு நான் ஜூம் செயலி மூலம் பாடம் நடத்துகிறேன். இங்குள்ள பெரும்பாலான மாணவர்களுக்கு தனியறை உள்ளது; நல்ல இணையதள வசதி, லேப்டாப் வசதி உள்ளிட்டவை உள்ளன; அவர்களுக்கு தொழில்நுட்ப அறிவும் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கிறது,” என்கிறார் அவர்.

ஆனால் டெல்லியில் இருக்கும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இப்போதுதான் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் இங்குள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கான அனுபவங்கள் மிகவும் கலவையாகவே இருக்கின்றன.

ஆசிரியர் மாணவர்படத்தின் காப்புரிமைBBC / நிகிதா தேஷ்பாண்டே

“எங்களில் பெரும்பாலானவர்களுக்கு இணையதளம் மூலம் வகுப்புகளைத் தொடங்குவது சுமூகமானதாகவே இருந்தது; வசந்த கால விடுமுறையின்பொழுது இங்கு முடக்கநிலை அமல்படுத்தப்பட்டது; விடுமுறைக்கு பிறகு நாங்கள் இணையதள வகுப்புகள் எடுக்க தொடங்கிவிட்டோம். கூகுள் மீட் அல்லது ஜூம் போன்ற செயலிகளில் நாங்கள் வகுப்பு எடுத்து வருகிறோம் ,” என்கிறார் டெல்லியில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாய்கத் மஸூம்தார்.

“இந்தியாவிலுள்ள சில பல்கலைக்கழக மாணவர்கள் இணையதள வசதி குறித்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்; குறிப்பாக காஷ்மீர் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் இதை எதிர்கொள்கிறார்கள்,” என்கிறார் அவர்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளும் ஜூம் செயலியின் மூலம் வகுப்பெடுக்க தொடங்கிவிட்டனர்.

ஆனால் இது கால இடைவெளி இல்லாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தற்காலிக ஏற்பாடுதான் என்கிறார்கள் பெற்றோர்கள்.

“குழந்தைகள் தொடர்ச்சியாக ஜூன் செயலி மூலம் பாடங்களை படிக்கிறார்கள். இணையதளம் மூலம் என் குழந்தைகள் கல்வி கற்பதும் ஏதோ பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் ஆசிரியர்கள் நேரடியாக சந்தித்து அவர்களை மேம்படுத்திக் கொள்ள உதவுவது இன்னும் பிரச்சனையாகவே நீடிக்கிறது,” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத, இரு பள்ளிக் குழந்தைகளின் தந்தை ஒருவர்.

ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என யாரிடம் பேசினாலும் இந்த எண்ணம் அவர்களிடமும் பிரதிபலிக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் மாணவர்களுக்கு கல்வி நிறுவன வளாகங்களில் ஏற்படும் அனுபவத்தை முற்றிலும் மாற்றியுள்ளது.

“ஒருவேளை எங்களது அடுத்த செமஸ்டர் தேர்வுகளை இணையம் மூலமாகவே நடத்த வேண்டியிருக்கலாம். நாங்கள் இப்பொழுதே படிப்பதற்கான பாடங்களை மாணவர்களுக்கு இணையம் மூலமாக கொடுத்த தொடங்கிவிட்டோம்,” என்கிறார் சாய்கத்.

“ஆனால் இது அறிவியல் பாடங்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். ஏனென்றால் அந்தப் பாடங்களைப் பயில ஆய்வக வசதிகள் தேவைப்படும். இணையதளம் மூலமாக மட்டுமே படிப்பது போதாது,” என்கிறார் அவர்.

கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் எவ்வாறு இயங்குவது என்பது குறித்து பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் ஆராய்ந்து வருகின்றன. கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்ட பின்பு மிகவும் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று அந்த இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது என்பதுதான்.

ஐரோப்பிய நாடுகள், தென் கொரியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கு ஒருவேளை இவர்களுக்கு வாய்ப்பு இருக்கலாம்.

சில பள்ளிகள் கண்ணாடிகளை எழுப்பி மாணவர்களை பிரிக்கின்றன. சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒவ்வொரு முறையும் மாணவர்கள் உள்ளே நுழையும் பொழுது அவர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

ஆனால் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் இந்தியா போன்றதொரு நாட்டில் இப்படிப்பட்ட தவறான அணுகுமுறைகள் மாணவர்களுக்கு வெவ்வேறு அனுபவத்தை உண்டாக்கலாம்.

கண்ணாடி மறைப்பில் மாணவர்கள்படத்தின் காப்புரிமைBBC / நிகிதா தேஷ்பாண்டே

இணையதளம் மூலம் கல்வி கற்பது புதிய போக்காக உருவெடுத்து இருக்கலாம். ஆனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வர்க்கங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இது எப்படிப்பட்டதாக இருக்கும்?

“பெரும்பாலான பெண் குழந்தைகளுக்கு வீட்டு வேலைகளில் இருந்து தப்பிப்பதற்கான மிக முக்கியமான வாய்ப்பாக பள்ளி செல்வது இருக்கிறது; அங்கு அவர்கள் படிப்பதைத் தவிர நண்பர்களைச் சந்திப்பது, அவர்களுடன் உரையாடுவது, மதிய உணவுத் திட்டம் மூலம் பயன் அடைவது போன்ற வேறு பலன்களையும் அனுபவிக்கிறார்கள்; இப்பொழுது அவை அனைத்தையும் இழந்து விட்டார்கள்,” என்று கூறுகிறார் அனுராதா.

இத்தகைய மாணவர்களை சந்திப்பதற்காக இந்தியாவின் பின்தங்கிய கிராமப் புறங்களில் உள்ள பகுதிகளுக்கு நீங்கள் செல்ல வேண்டியதில்லை.

அனுராதா பாடம் நடத்திய ஜார்க்கண்ட் , ஹரியானா கிராமங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. நாட்டின் தலைநகர் டெல்லியிலேயே இவற்றைப் பார்க்க முடியும்.

வளம் மிகுந்த பகுதியாக கருதப்படும் தெற்கு டெல்லியில் உள்ள ஓர் அரசு ஆரம்பப் பள்ளியில் படிக்கிறார் ஒன்பது வயதாகும் ராணி ராஜ்புத்.

முடக்கநிலை அமல்படுத்தப்பட்டது முதல் தன்னுடைய குழந்தை வீட்டிலேயே எதுவும் செய்யாமல் முடங்கிக் கிடக்கிறாள் என்கிறார் அவரது தாய் ராதா ராஜ்புத்.

“வேலை தேடி நாங்கள் உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு குடி பெயர்ந்தோம். என்னுடைய கணவர் ஆட்டோ ஓட்டுகிறார்; நான் பணிப்பெண்ணாக வீடுகளில் வேலை செய்கிறேன். பெரிய பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் கம்ப்யூட்டர் மூலம் பாடம் படிக்கிறார்கள் என்று நாங்கள் கேட்கிறோம். ஆனால் எங்களிடம் திறன்பேசி கூட இல்லை. முடக்கநிலை அமல்படுத்தப்பட்து முதல் மூடப்பட்டுள்ள எனது மகளின் பள்ளியில் இருந்தும் அது குறித்த செய்தி எதுவும் இதுவரை வரவில்லை. நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் அவள் மிகவும் மனரீதியாக சோர்வுற்று இருக்கிறாள்,” என்கிறார் ராதா.

அனுராதா பாடம் நடத்தும் முறை மற்றும் ராதாவின் மகள் படிக்கும் முறை ஆகியவற்றுக்கிடையே கோவிட்-19 நோய்தொற்றுக்கு பிந்தைய கல்விமுறையின் கட்டமைப்பும் எதிர்கால சவால்களும் சிக்கிக் கொண்டிருக்கின்றன.

நகர்ப்புறங்களில் இருக்கும் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே சாத்தியமானதாக அமைந்துள்ள இந்த ஆன்லைன் கல்விமுறை, பெரும்பாலான மாணவர்களை சென்று சேர வேண்டும் என்பதற்கான வழிவகைகளை ஆராய இந்தியாவிலுள்ள கல்வியாளர்களை கட்டாயப்படுத்துகிறது.

எக்கோவேஷன் எனும் கற்றல் தளம் ஒன்றின் நிறுவனர் ரித்தேஷ் சிங். “ஆன்லைன் கல்வி என்பது இனி தொடரத்தான் போகிறது. ஆனால் அது ஒருபொழுதும் பள்ளிகளுக்கு மாற்றாக அமையாது,” என்கிறார் சிங்.

இவர் உருவாக்கிய உன்னயான் எனும் செயலி மூலம் 8 இந்திய மாநிலங்களில் 12 லட்சம் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்.

இந்த செயலியை உருவாக்கியதற்காக இந்திய பிரதமரின் அறிவியலில் புதுமை புகுத்தி அதற்கான விருது ஒன்றையும் இவர் பெற்றுள்ளார்.

இணையம் மூலம் பாடம் நடத்துவது வெற்றிகரமானதாக அமைய வேண்டுமென்றால் ஒவ்வொரு குழந்தையின் தேவை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களுக்கு பாடம் நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார் அவர்.

“உதாரணமாக இந்தியாவின் தொலைதூர கிராமங்களில் இருந்து பயிலும் குழந்தை ஒன்றுக்கும் இணையதள வசதி மிகுந்த டெல்லியில் பயிலும் குழந்தை ஒன்றுக்கும் காணொலிக் காட்சி மூலமாக பாடம் நடத்துவது சமமானதாக தெரியாது; அதுபோல கற்றல் திறனில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இணையதளம் மூலம், நேரில் சந்திக்காமல் பாடம் நடத்துவது பெரிய அளவில் உதவியாக இருக்காது,” என்கிறார் ரித்தேஷ்.

ஒவ்வொரு பிராந்தியத்தின் தேவைக்கு ஏற்ப ரித்தேஷ் மற்றும் அவரது குழுவினர் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை உருவாக்குகிறார்கள். “என்னுடைய செல்பேசியே என்னுடைய பள்ளி” எனும் முழக்கத்துடன் இயங்கும் இந்த செயலி மாணவர்களின் தேவைக்கு ஏற்ப பாடங்களை வழங்குகிறது.

ஆன்லைன் கல்விபடத்தின் காப்புரிமைBBC / நிகிதா தேஷ்பாண்டே

இந்தியா முழுவதிலும் உள்ள அனைவரிடத்திலும் திறன் பேசிகளும் இணையதள இணைப்பு இல்லாத சூழலில் இணையம் வாயிலாக கல்வி கற்பது நோய்த்தொற்று பரவலுக்கு பிந்தைய உலகில் எந்த அளவுக்கு இந்திய மாணவர்களை சென்றடையும் என்ற கேள்வியும் எழுகிறது.

இதன் காரணமாக ரித்தேஷ் மற்றும் அவரது குழுவினர் தொலைக்காட்சியை தங்களது தளமாக பயன்படுத்த தொடங்கினர்.

இவர்களது பாடத்திட்டங்கள் வெவ்வேறு மாநிலங்களில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான எங்களது பாடத்திட்டங்கள் பிகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தூர்தர்ஷன் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதன் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது இதன் காரணமாக நடுநிலைப்பள்ளி நடுநிலை வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கும் தற்பொழுது நாங்கள் பாடத்திட்டங்களை ஒளிபரப்பும் நோக்கில் நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறோம் என்கிறார்.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்துவது தொடர்பாக ராஜஸ்தான் மாநில அரசுடன் நாங்கள் இப்போது பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறோம் என்கிறார் ரித்தேஷ்.

தொலைக்காட்சியில் பாடம்படத்தின் காப்புரிமைBBC / நிகிதா தேஷ்பாண்டே

ஆனால் தொலைக்காட்சி முன்பு மாணவர்களை அமர வைத்து அவர்களை பாடம் படிக்க வைப்பது நடைமுறை ரீதியில் பிரச்சனைக்குரியதாக இருப்பது தெரிய வருகிறது .

எல்லோரிடத்திலும் தொலைக்காட்சி இருக்க வேண்டும் .தொலைக்காட்சி இருந்தாலும் அந்த மாணவர்களின் குடும்பச்சூழல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களைப் படிப்பதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

“வாட்ஸ்அப் செயலி மூலம் மாணவர்களை சென்றடைந்து அவர்களுக்கு அதில் பாடத்திட்டங்களை அனுப்புவதை எங்களது எதிர்கால திட்டமாக உள்ளது. ஆனால் இதன் மூலம் சுமார் 30 சதவிகித மாணவர்கள் மட்டுமே சென்றடைய முடிகிறது,” என்கிறார் குஜராத்தில் உள்ள சிகோதரா எனும் கிராமத்தில் அமைந்துள்ள பெண்களுக்கான அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக இருக்கும் சாயா பென்.

“எங்கள் பள்ளியில் படிக்கும் 380 மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் பின்தங்கிய பொருளாதார சூழலில் இருந்து வருகிறார்கள். அவர்களது பெற்றோரிடம் திறன்பேசிகள் எதுவுமில்லை; தங்களது குழந்தைகளின் கல்வி குறித்த பெரிய விழிப்புணர்வும் அவர்களுக்கு இல்லை,” என்று சாயா பென் கூறுகிறார்.

“சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் இத்தகைய மாணவர்களுக்கு இந்த கோவிட்-19 பெருந்தொற்று என்பது கல்வியிலும் வாழ்க்கையிலும் முழுமையாக இழக்கப்பட்ட ஓராண்டு அல்லது கல்வியில் நீண்ட கால அடிப்படையில் நேர்ந்த வாய்ப்புகள் இழப்பு,” என்கிறார் அவர்.

ஏழை மாணவர்கள்படத்தின் காப்புரிமைBBC /நிகிதா தேஷ்பாண்டே

24 வயதாகும் ஆனந்த் பிரதான் ஓர் இளம் கல்வியாளர். இன்டென்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் ஆஃப் ரூரல் இன்னோவேஷன் எனும் பள்ளியை அவரது சொந்த மாநிலமான ஒடிசாவில் அவர் நிறுவியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவளுக்கு பின்பு பள்ளிகள் தங்களது வழிமுறைகள் அனைத்தையும் முற்றிலும் மாற்றவேண்டும் என்று அவர் கருதுகிறார்.

ஆன்லைன் மூலமாக கல்வி கொடுப்பது என்பது இன்று இயல்பானதாகிவிட்டது. இதன்மூலம் குழந்தைகளின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை இனி பள்ளிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார் இவர்.

இவர் நடத்தும் பள்ளியில் திறன் மேம்பாடு மற்றும் புதுமையாக சிந்தித்தல் ஆகியவற்றிற்கு முக்கிய கவனம் தரப்படுகிறது.

அறிவியல்பூர்வமாக விவசாயம் செய்தல், தொழில் முனைவு, கலைப்படைப்புகள் ஆகியவற்றை இங்குள்ள மாணவர்கள் செய்முறை வாயிலாக கற்றுக்கொள்கிறார்கள்.

வேலைதேடும் மாணவர்களைவிட வேலைகளை உருவாக்கும் மாணவர்களை உருவாக்குவது இப்பொழுது அதிக தேவையாக இருக்கிறது என்று அவர் நம்புகிறார்.

“பிரச்சனை என்ன என்பதை அறிந்து கொள்ளும் திறன் வாய்ந்த தனிநபர்களை உருவாக்கி, தீர்வை நோக்கி அவர்களை பயணிக்க வைப்பது எங்களுடைய முக்கிய நோக்கமாக இருக்கிறது ,” என்று அவர் கூறுகிறார்.

இப்போது வேறொரு முக்கியமான கேள்வியும் எழுகிறது. பாடத்திட்டம் அல்லாத பிற நடவடிக்கைகளில் மாணவர்கள் இணையதளம் வாயிலாக எவ்வாறு தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள் ?

கலை, கைவினை, நடனம், விளையாட்டு ஆகியவற்றில் அவர்கள் எவ்வாறு ஈடுபடுவார்கள்? அல்லது இணையதளம் வாயிலாக படிக்கும் பொழுது தற்போதைய வழிமுறைகளில் இருந்து அவர்களின் அந்த விருப்பங்களை நோக்கி அவர்கள் எவ்வாறு மாறுவார்கள்?

இவையெல்லாம் நிகழ வேண்டுமானால் பள்ளி வளாகத்திலும் பள்ளியின் விளையாட்டு மைதானங்களிலும் மாணவர்கள் நேரடியாக வந்து பங்கெடுப்பது அவசியமானதாகிறது. அப்போது அவர்கள் தங்கள் நண்பர்களிடம் கருத்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்

விளையாட்டுபடத்தின் காப்புரிமைBBC /நிகிதா தேஷ்பாண்டே

ஹரியானா மாநிலத்தில் ரோத்தக் மாவட்டத்திலுள்ள மேகம் எனும் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய கல்வி அதிகாரியாக இருக்கிறார் விஜயேந்திர ஹூடா.

தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஆசிரியர்களை வெவ்வேறு நோக்கங்களுக்காக பணியமர்த்துவதன் மூலம் இணையதள வசதி இல்லாத பற்றாக்குறையை அவர் சமாளிக்க முயல்கிறார்.

“எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு மாணவர்களை வாட்ஸ்அப் வாயிலாக தொடர்பு கொள்கிறோம். அவர்களுக்கு நாங்கள் காணொளி வடிவத்திலும், ஒலிப்பதிவுகளாகவும் பாடங்களை அனுப்பி வைக்கிறோம்,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார் .

ஆனால் பெரும்பாலான குழந்தைகள் மிகவும் பின்தங்கிய பொருளாதார சூழலில் இருந்து வருகிறார்கள். அவர்களது பெற்றோர் வேலைக்குச் செல்லும் பொழுது செல்பேசியையும் அவர்களுடன் எடுத்துச் செல்வதால், அந்த மாணவர்களால் மாலை நேரங்களில் மட்டுமே இணையம் வாயிலாக அனுப்பப்படும் கல்வியைப் படிக்க முடிகிறது.

“வேலைநேரம் முடிந்ததும் இரவு வரை நாங்கள் வேலை செய்கிறோம் . ஏனென்றால் அப்பொழுதுதான் மாணவர்களின் கங்களை தீர்த்து வைக்க முடியும். காணொளி மற்றும் ஒலி வடிவத்தில் பாடங்களை எவ்வாறு தயாரிப்பது, அதன்மூலம் எப்படி பாடம் நடத்துவது என்பதை எங்கள் ஆசிரியர்களும் கற்றுக்கொண்டு வருகிறார்கள்; இது மிகவும் கடுமையான பணிதான்; ஆனால் இப்போது இருக்கும் ஒரே வாய்ப்பு அதுதான்,” என்கிறார் ஹூடா.

குழந்தைகளுக்கு பால் பவுடர் மற்றும் மதிய உணவு திட்டத்திற்கான உணவுப்பொருட்களை விநியோகிக்கும் பொழுது அந்தந்த கிராமங்களில் இருக்கும் குழந்தைகளின் கல்வி வசதி எந்தளவுக்கு இருக்கிறது என்பதையும் இவரது குழுவினர் தெரிந்து கொண்டனர்.

“ஏதாவது ஒரு மாணவருக்கு இணைய வசதி இல்லை என்றால் எங்களுடன் தொடர்பில் இருக்கும் வேறு நபர்கள் மூலம் அவர்களுக்கு கல்வியை எவ்வாறு சென்று சேர்ப்பது என்பதை நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம். ஆனால் ஆசிரியர்கள் நேரடியாக சென்று அவர்களை மேம்படுத்த உதவுவது என்பது இன்னும் சவாலாக இருக்கிறது,” என்கிறார் ஹூடா.

பள்ளிக்கூடம் பெரியதோ சிறியதோ, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நேரடியான தொடர்பு இல்லாமல் மாணவர்களின் தேவைக்கு ஏற்ப அவர்களுக்கான திறன் மேம்பாட்டை வழங்குவது கோவிட்-19 தொற்றுக்கு பிந்தைய உலகத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றே கல்வியாளர்களும் வல்லுநர்களும் கருதுகிறார்கள்.

தற்போது கல்வி ஒரு புரட்சியை எதிர்கொண்டு இருக்கிறது. ஆனால் இதனால் உண்டாகும் மாற்றங்கள் நீண்டகால அடிப்படையில் மாணவர்கள் மீது எத்தகைய தாக்கங்களை செலுத்தும் என்பது இனி வரும் காலங்களில்தான் தெரியும்.

படங்கள் – நிகிதா தேஷ்பாண்டே

Web Design by Srilanka Muslims Web Team