கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீள திறப்பதில் தாமதம் » Sri Lanka Muslim

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீள திறப்பதில் தாமதம்

IMG_20200629_204839

Contributors
author image

Editorial Team

ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கு பின்பு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காகவும், இதர சேவைகளுக்காகவும் விமான நிலையத்தை மீள திறக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருவதற்கு அனுமதி வழங்கும் விதமாக ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி விமான நிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் சுற்றுலாப்பிரயாணிகள் நாட்டுக்கு வருவதற்கு இதுவரையில் பதிவு செய்துள்ளார்கள்.

வெளிநாடுகளில் தொழில் புரியும் 50 ஆயிரம் இலங்கையர்கள் நாட்டுக்கு வருவதற்கு தூதரகத்தின் ஊடாக பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் அனைவரையும் நாட்டுக்கு கொண்டு வருவது அரசாங்கத்தின் கொள்கையாகும். இவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், நாட்டில் தற்போது உள்ளோர் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த நிலையினை அரசாங்கம் மிகவும், அவதானத்துடனும், பொறுப்புடனும் கையாள்கிறது.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீள திறப்பதற்கு எதிர்பார்த்தோம். ஆனால், சுகாதார தரப்பினரது அறிவுறுத்தலுக்கு அமைய தீர்மானம் காலதாமதமாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயிலும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி விமான நிலையத்தை முழுமையாக திறக்க எதிர்பார்த்துள்ளோம்.

சுற்றுலா துறையினை ஊக்குவிப்பதும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதுமே இதன் பிரதான நோக்கமாகும். நாட்டுக்குள் வரும் சுற்றுலா பயணிகள் அவர்களது நாட்டில் முதலில் பி. சி. ஆர். பரிசோதனையை செய்து அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் அவர்கள் எமது நாட்டுக்கு வந்தவுடன் விமான நிலையத்தில் பி. சி. ஆர் பரிசோதனையை செய்துக் கொள்ள வேண்டும்.

பரிசோதனையின் முடிவு கிடைக்கும் வரையில் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள். சுற்றுலாத்துறை அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் மாத்திரமே சுற்றுலா பிரயாணிகள் தங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka