விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? - Sri Lanka Muslim

விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் தொடர்ந்து அதிகரிப்பது ஏன்?

Contributors
author image

BBC

உலக அளவில் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஜூனாட்டிக் வகை நோய்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக ஐ.நா. அமைப்பை சேர்ந்த நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் இது மேலும் தொடரும் என்றும் இந்த நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விலங்குகளின் புரதம் தொடர்பாக நிலவும் அதிக அளவு தேவை, ஏற்றுக் கொள்ள இயலாத சில விவசாய நடைமுறைகள் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் கோவிட்-19 போன்ற நோய்கள் அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் புறக்கணிக்கப்படுவதால் 20 லட்சம் பேர் உயிரிழப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

உலக பொருளாதாரத்தில் கோவிட்19 பாதிப்பால் கிட்டத்தட்ட 8 ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

இபோலா, வெஸ்ட் நைல் வைரஸ் மற்றும் சார்ஸ் போன்றவை ஜூனாட்டிக் வகை நோய்களே. இவை விலங்குகளில் தோன்றி பின்னர் மனிதர்களுக்கு பரவின.

ஐ.நா. நிபுணர்களின் அறிக்கை கூறுவது என்ன?

ஆனால் இந்த அதிகரிப்பு இயல்பாக நடந்தது அல்ல. ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி கழகம் ஆகியவை இணைந்து வெளியிட்ட இந்த அறிக்கையில் சில முக்கிய காரணங்களை குறிப்பிட்டுள்ளனர்.

பருவநிலை மாற்றம், தொடர்ந்து நடக்கும் நில சீரழிப்பு, இயற்கை வளங்களை அதிகளவில் பிரித்தெடுத்தல், லாபங்களுக்காக வனவிலங்குகளை அதிகளவு வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் விலங்குகள் மற்றும் மனிதர்களின் வாழ்வு சீர்குலைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி அதிகமாக விவாதிக்கப்படும் சூழலில் கடந்த காலங்களிலும் இது போன்ற பாதிப்புகள் தோன்றி கடுமையான தாக்கத்தையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.

சார்ஸ் கிருமி புனுகுப் பூனையிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியது.

2012ல் உருவாகிய மெர்ஸ் நோயால் 2,494 பேர் பாதிக்கப்பட்டதில் 858 பேர் உயிரிழந்தனர். இது ஒற்றைத் திமில் கொண்ட ஒட்டகங்களிடம் இருந்து பரவியது.

”கடந்த இரண்டு தசாப்தங்களிலும், கோவிட்-19 வைரஸ் பரவலுக்கு முன்பாகவும் ஜுனாட்டிக் வகை நோய்கள் 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உலக அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது,” என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் நிர்வாக இயக்குநரான இங்கர் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

”நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் பல லட்சம் மக்கள் ஓவ்வொரு ஆண்டும் இது போன்ற நோய்களால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

“விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களை பெருமளவில் தடுக்க இயற்கை வளங்களை பாதுகாப்பது மிகவும் அவசியம்,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொற்றுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கொரோனா வைரஸின் மையமாக அறியப்பட்ட சீனாவில், தற்போது மீண்டும் ஒரு கொடிய தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம்தான் பன்றிகள் வழியாக மனிதர்களுக்குப் பரவும் புது வகை வைரஸை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். தற்போதைக்கு அந்த வைரஸால் பாதிப்பு இல்லை என்றாலும், அதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சீனாவின் தன்னாட்சி பகுதியான இன்னர் மங்கோலியாவின் உட்பகுதியில் புபோனிக் என்ற பிளேக் தொற்று உறுதியாகியுள்ளது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சீன அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Web Design by Srilanka Muslims Web Team