கல்முனையை தளமாக்கி கருணா போட்டியிடுவது ஏன்? - எஹியாகான் அறிக்கை » Sri Lanka Muslim

கல்முனையை தளமாக்கி கருணா போட்டியிடுவது ஏன்? – எஹியாகான் அறிக்கை

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தேர்தல் திகதி அறிவிப்புடனேயே தேர்தல் களமும் சூடுபிடித்து விட்டது.  அம்பாரை மாவட்டத்தில் – குறிப்பாக கல்முனை தொகுதியை இதற்காக குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கருணா அம்மான் , அம்பாரை மாவட்டத்தில் – அதிலும் கல்முனைத் தொகுதியை மையப்படுத்தி தேர்தல் களமிறங்கியிருப்பதே இந்தச் சூட்டுக்குக் காரணமாகவுள்ளது.

காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் இன்னோரன்ன முஸ்லிம் படுகொலையின் சூத்திரதாரியான கருணா அம்மானின் அடுத்த இலக்கு கல்முனையை முஸ்லிம்களிடமிருந்து பறித்தெடுப்பதே. அதனை அவர் உப பிரதேச செயலக விவகாரத்தில் ஆரம்பித்து வைத்ததை நாம் அறியாமலில்லை.

அந்த முன்னேற்பாடோடுதான் – தனக்கு சிறிதளவேனும் வாக்கு வங்கியில்லாத அம்பாரை மாவட்டத்தின் கல்முனையை , இனவாதக் கும்பல்களின் ஆசிர்வாதத்தோடு தேர்தல் களத்துக்காக தெரிவு செய்திருக்கிறார் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

முஸ்லிம் சமுகம் இனவாதிகளால் நசுக்கப்பட்டு, அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பாதிப்புகள் அம்பாரை மாவட்டத்தையும் இங்கு வாழ்ந்து வரும்  முஸ்லிம்களையும் அபாயத்துக்குள் தள்ளாமல் விடவில்லை.

இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்புக் கேடயம் என்று சொல்லப்படும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறிவருகின்றது .

குறிப்பாக கிழக்கின் முக வெற்றிலை என்று பேசப்படும் கல்முனை பிராந்தியமானது இன்று பல பக்க அபாய சூழலுக்குள் அகப்பட்டுள்ளது .

பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப்  அவர்கள் ஆட்சி செய்த கல்முனைப் பிராந்தியத்தை தோற்கடிப்பதன் மூலம், இப்பிரதேசத்தின் பிரதிநிதித்துவமான முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸை அழிப்பதன் மூலம், அஷ்ரப் என்ற தலைவனின் சித்தாந்தத்தையும் கொள்கையையும் – அவரின் கட்சியையும் குழிதோண்டி புதைப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பமாக இனவாதிகள் கருணா அம்மான் மூலம் கங்கணம் கட்டியுள்ளனர்.

அஷ்ரப் எனும் மாமனிதன்  ஆட்சி செய்த கல்முனைப் பிராந்தியத்தை அரசியலிலிருந்து ஓரம் கட்டுவதன் மூலம் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அவர்களின் உரிமை கோஷங்களையும் சின்னாபின்னமாக சிதைத்து விட முடியும் என்ற இனவாதிகளின் கற்பனாவாதத்துக்கு, அவர்களின் நயவஞ்சக சூழ்ச்சிகளுக்கு, எமது  பிராந்தியத்திலும் எமது இனத்தை சேர்ந்த பல கோடரிக்காம்புகளும் உதவி புரிய முன்வந்துள்ளமைதான் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வேதனைக்குரிய விடயமாகும்.

ஒரு பக்கம் –  கருணா அம்மான் போன்ற புலி பயங்கரவாதிகளின்  அடக்குமுறை , மறுபக்கம் சில கல்முனை தமிழர்களின் பிரதேசவாத  அதிகார கோஷங்கள், விசேடமாக எமது முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கும் மாற்று கட்சியினர், குறிப்பாக பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களை எதிர்த்து வந்தவர்கள் என பலதரப்பட்டோர் அற்பத்தனமான அரசியல் அதிகாரங்களுக்காக  கல்முனையின் தனித்துவத்தை அழிப்பதன் மூலம் அஷ்ரப் அவர்களின் அரசியல் தத்துவத்தை ஒழிக்க முடியும் என்ற இறுமாப்புடன் கல்முனையின் பிரதிநிதித்துவமான ஹரீஸை ஒழிப்பதற்கு சதி செய்துகொண்டு வருகின்றனர்.

இனவாதிகளுக்குத் தெரியும் அஷ்ரபின் மண் தோற்றால் அஷ்ரபை நேசிக்கும் மனிதர்களும் தோற்று விடுவார்கள் என்று.

இவர்களுடைய நாசகாரச் சதிலிருந்து கல்முனையை மீட்டெடுத்து மீண்டும் மாமனிதர் அஷ்ரப் அவர்களின் புதிய யுகத்தை அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் அனுபவிப்பதற்கும் குறிப்பாக அம்பாரை மாவட்டத்தின் முக வெற்றிலை என போற்றப்படும் கல்முனையின் அதிகாரத்தை உறுதிப் படுத்துவதற்கும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஒன்றிணைந்து கல்முனையில் அதிகாரத்தை பாதுகாப்பதற்கு முன்வரவேண்டும்.

ஏனெனில், கல்முனைப் பிராந்தியத்தின் இருப்பும் அரசியல் அதிகாரமும்  அம்பாரை மாவட்ட முஸ்லிம்களுக்கு கேடயமாக இருந்து வந்துள்ள வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு போக வேண்டியுள்ளது.

கல்முனை நகரை – விடுதலைப் புலிகள் எரியூட்ட முனைந்ததையும் அதனை தடுக்க தனதுயிரை துச்சமென நினைத்து முன்னாள் எம்பி ஹரீஸ் முன்னின்றதையும் அடுத்த தலைமுறையினர் வரை வரலாறாக எழுதி வைக்க வேண்டிய அரிய தருணங்கள்.

கல்முனையை துண்டாட , கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தை கருணாவும் இனவாதிகளும் கையிலெடுத்த போது – எதிர்த்தரப்பாக இருந்து கொண்டே அரச கோட்டைக்குள் நுழைந்து உண்மைகளை ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறி இனவாதிகளின் வாயை மூட வைத்த ஹரீஸின் துணிச்சலை இன்றே எழுதி வைப்போம் அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக.

இவ்வாறு , மாற்றுக் கட்சிகளின் வேட்பாளர்களைப் போல் பத்திரிகை அறிக்கை விடாது – துணிச்சலாக , நேரடியாக கல்முனையின் காவலனாக ஹரீஸ் செயற்பட்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு.

கிழக்கின் முக வெற்றிலையாம் கல்முனை மண்ணை பாதுகாக்க துணிச்சலாகவும் ஹரீஸ் செயற்படுவார் ; அதேநேரம் , சமூகத்தின் உரிமையை மீட்டெடுக்க – தேவைப்பட்டால் சமுகத்துக்காக வேண்டி எந்தவொரு பேய், பிசாசுகளின் கால்களிலும் வீழ்ந்தாவது வென்றெடுப்பார் என்ற யதார்த்தத்தையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது.

எனவே , கல்முனையின் வெற்றி – மர்ஹூம் அஷ்ரபின் புதிய யுகத்துக்கான நம்பிக்கையை இந்த மண்ணில் வேரூன்ற வைப்பதற்கு,
எமது வாக்குகளில் ஒன்றை ஹரீஸின் 9 வது இலக்கத்துக்கு வழங்கி கல்முனையின் அரசியல்  பிரதிநித்துவத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.

அது  மாமனிதரின் கனவுகளை மீட்டுருவாக்கம்  செய்யும் ; அந்த மனிதனின் நினைவுகளையும் அந்த மனிதனின் சேவைகளையும் அந்த மனிதனின் நல்ல எண்ணங்களையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும். இதனை முன்னெடுப்பதற்கான தார்மீகப் பொறுப்பு எமது ஒவ்வொருவரின் கைகளிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்தியத்தின் வெற்றி
அஷ்ரபின் வெற்றி. அஷ்ரபின் வெற்றி ஒட்டுமொத்த அம்பாரை முஸ்லிம்களினதும் வெற்றி என்பதில் நாங்கள் திடமாக உறுதி கொள்வோம்.

இவ்வாறு – முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளர் ஏ.சி.எஹியாகான் , ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

Web Design by The Design Lanka