புத்தளம்; வேட்பாளர் நியாஸ் மீது தாக்குதல் » Sri Lanka Muslim

புத்தளம்; வேட்பாளர் நியாஸ் மீது தாக்குதல்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் தராசு கூட்டணியில், மு.கா சார்பில் போட்டியிடும் வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், சில குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில்,  புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம்- மதுரங்குளி மற்றும் நுரைச்சோலை ஆகிய பகுதிகளில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக,  மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று முன்தினம் (28) புத்தளத்துக்கு விஜயம் செய்தார்.

இதன்போது, நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில், புத்தளம் ஹூதா பள்ளிக்கருகில், புத்தளம் நகர பிதா , தராசு கூட்டணி வேட்பாளர் கே.ஏ.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, தராசு கூட்டணி வேட்பாளரான எஸ்.எச.எம்.நியாஸ், மு.கா தலைரவர் ரவூப் ஹக்கீமுடன் வருகை தந்தார்.

இதன்போது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் வேட்பாளரான எஸ்.எச்.எம்.நியாஸை கூட்டம் நடைபெறும் பிரதான மேடையில் ஏறுவதற்கு அனுமதி வழங்க முடியாது எனத் தடுத்து நிறுத்தியதுடன், அவரை கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் கோஷம் எழுப்பினர்.

இதனால், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த புத்தளம் பொலிஸாருடன் இணைந்து மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமின் பாதுகாப்புக்காக வருகை தந்திருந்த பொலிஸாரும் ஒன்றிணைந்து வேட்பாளரான எஸ்.எச்.எம்.நியாஸை மு.கா தலைவரின் வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அங்கு நடைபெற்ற சலசலப்பின்போது,  வேட்பாளரான எஸ்.எச்.எம்.நியாஸ் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன்,  கடும் உடல் உபாதைக்கு உள்ளான அவர் இரவு 11 மணியளவில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஸீன் ரஸ்மின்

Web Design by Srilanka Muslims Web Team