குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு இம்முறை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் » Sri Lanka Muslim

குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு இம்முறை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும்

Contributors
author image

Editorial Team

பல மாவட்டங்களில் மக்கள் முகங்கொடுத்து வருகின்ற குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு இம்முறை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களில் ஜனாதிபதி நாடு பூராகவும் மேற்கொண்ட விஜயங்களின்போது மக்கள் முன்வைத்த பிரதான பிரச்சினை குடிநீரின் அவசியமாகும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் இப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அதனடிப்படையில் மிக முக்கிய தேவையாக கருதி குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் நேற்று (01) பதுளை மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் ரோஹித திலகரத்ன பண்டாரவளை, தோவ ரஜமகா விகாரைக்கு அருகில் விளையாட்டரங்கொன்றில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி, மாவட்டத்தில் மக்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

உதித லொக்குபண்டார ஹாலி எல பிரதேச சபை விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதுளை சோனாநாயக்க பூங்காவிற்கு அருகில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி, வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

பதுளை விஹாரமகா தேவி வித்தியாலயத்தில் தரம் 3 இல் கல்வி கற்கும் திதுலி லெசன்யா மாணவி கொவிட் நிதியத்திற்கு தனது சேகரிப்பில் இருந்த பண உண்டியல் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

பண்டாரவளை சென்தோமஸ் வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி கற்கும் எசல கஜநாயக்க என்ற மாணவன் உருவாக்கிய தானியங்கி கிருமி தொற்று நீக்கி திரவத்தை வெளியிடும் இயந்திரத்தைப் பற்றி ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார்.

டி.எம். உபதிஸ்ஸ தான் உருவாக்கிய நினைவுச் சின்னமொன்றை ஜனாதிபதிக்கு கையளித்தார்.

வேட்பாளர் செந்தில் தொண்டமான் பசறை நமுனுகுல சந்தியிலும் வேட்பாளர் சாமர சம்பத் தசநாயக்க பசறை பொது விளையாட்டரங்கிலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team