ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை இன்று » Sri Lanka Muslim

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை இன்று

Contributors
author image

Editorial Team

அரசியல் யாப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தமது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதியின இந்த உரை இன்று பிற்பகல் மூன்று மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்திற்காக கடந்த 5ஆம் திகதி (5.07.2020) நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது இதற்கமைவாக சமகால அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை உரையை ஜனாதிபதி நிகழ்த்த உள்ளார்.

இதேவேளை ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று காலை 9:30 மணிக்கு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பமாகவுள்ளது. அதனைத் தொடர்;ந்து சபாநாயகர் நியமிக்கப்படுவார். சபாநாயகரின் முன்னிலையில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழியை வாசித்து, சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்கள்.

இதனைத் தொடர்ந்து, பிரதி சபாநாயகரும், குழுக்களின் பிரதித் தலைவரும் நியமிக்கப்படுவார்கள். பிற்பகல் 3,00மணிவரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார். அதனையடுத்து மீண்டும் பாராளுமன்றம் பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் ஆரம்பமாகும்.

பிற்பகல் மூன்று மணிக்கு ஜனாதிபதி தலைமையில் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகும்.  அதற்கிணங்க புதிய பாராளுமன் றத்தின் ஆரம்ப அமர்வில் கலந்துகொள்ளவுள்ள அதிதிகள் பிற்பகல் 2:15 மணிக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களில் அமர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றியே பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது.

2.25 மணியளவில் அனைத்து அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆசனத்தில் அமரவுள்னர்.ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலும் அபே ஜனபல கட்சியின் சார்பிலும் தேசியபட்டியலில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் தொடர்பில் அக்கட்சிகள் இதுவரை பெயர்களை அறிவிக்காத நிலையில் அவர்களுக்கானஆசனம் வெறுமையாகவே காட்சியளிக்கும். அந்த இரு கட்சிகளின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களுக்கான பெயர்கள் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் ஆணைக்குழு அதற்கான வர்த்தமானியையும் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில் 2.30 மணியளவில் புதிய சபாநாயகரின் வருகை இடம்பெறும்.பிற்பகல் 2 .35 மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் அவரது பாரியாரும் பாராளுமன்ற கட்டிடத்திற்கு வருகை தருவர்.அதனையடுத்து 2.40 மணியளவில் ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்சவும் அவரதுபாரியாரும் வருகை தருவர்.

ஜனாதிபதிக்கான வரவேற்பு நிகழ்வு எளிமையான முறையில் இடம்பெறவுள்ளது. வாகனத் தொடரணி ஊர்வலமோ, மரியாதை வேட்டுக்களோ இடம்பெற மாட்டாது. ஜனாதிபதியை வரவேற்க முப்படைகளின் பங்கேற்புடன் சில கலாசார அம்சங்கள் இடம்பெறும். புதிய சபாநாயகரும், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவும் பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயில் ஜனாதிபதியை வரவேற்பார்கள்.

அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களால் ஜெய மங்கள கீதம் இசைக்கப்பட்டு ஜனாதிபதியின்கொடி ஏற்றப்பட உள்ளது.  பிரதமர்,சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி சபைக்கு அழைத்துச் செல்லப்படுவார். அதனையடுத்து ஜனாதிபதியின் தலைமையில் சபை அமர்வு ஆரம்பமாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது கொள்கை பிரகடன உரைக்குப் பின்னர் பாராளுமன்றம் பிரிதொரு தினத்திற்கு ஒத்தி வைக்கப்படும்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka