கொரோனா வைரஸ் மாஸ்க்: குழந்தைகளில் யார் முகக்கவசம் அணிய வேண்டும்? - Sri Lanka Muslim

கொரோனா வைரஸ் மாஸ்க்: குழந்தைகளில் யார் முகக்கவசம் அணிய வேண்டும்?

Contributors
author image

BBC

பெரியவர்கள் போல 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

குழந்தைகள் முகக்கவசம் அணிவது தொடர்பாக விதிமுறைகளை வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், குழந்தைகள் எவ்வாறு வைரஸ் தொற்றை பரப்புகிறார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் இல்லை; ஆனால் பெரியவர்கள் எவ்வாறு பரப்புகிறார்களோ அதே போல பதின் வயதினரும் வைரஸை பரப்ப முடியும் என்பதற்கான ஆதாரம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஐந்து அல்லது அதற்கு குறைவான வயதுடைய குழந்தைகள் முகக்கவசம் அணியக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளவில் இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.

அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் முழுவதுமாக முடிய இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.

ஆனால், இத்தொற்று என்றும் முடிவுக்கு வராது என்று பிரிட்டனை சேர்ந்த மூத்த அறிவியல் ஆலோசகர் எச்சரித்துள்ளார்.

குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள் என்ன?

குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள் என்ன?

ஒரு மீட்டர் இடைவெளி கடைபிடிக்க முடியாத இடங்கள் மற்றும் கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டும்.

6 மற்றும் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாக இருந்தால், அவர்கள் இருக்கும் பகுதியில் எந்தளவிற்கு வைரஸ் தொற்று பரவல் இருக்கிறது மற்றும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் பெரியவர்களுக்கு அருகில் அக்குழந்தைகள் இருக்கிறார்களா என்பதை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிந்து கொள்ளலாம். அவர்கள் முகக்கவசம் அணியும்போதும் நீக்கும்போதும் பெரியவர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியக்கூடாது.

குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் முகக்கவசம் தொடர்பாக அறிவுரை வழங்கியுள்ளது.

“கொரோனா தொற்று அதிகம் இருக்கும் இடங்களில், ஒரு மீட்டர் இடைவெளி கடைபிடிக்க முடியாது எனில் நல்ல உடல்நலத்துடன் இருக்கும் 60 வயதுக்குட்பட்ட அனைத்து பெரியவர்களும் துணியால் ஆன முகக்கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளுடன் சேர்ந்து இருக்கும் பெரியவர்கள் இதனை பின்பற்றுவது முக்கியம்”

உடல்நலப் பிரச்சனைகள் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் மருத்துவ ரீதியான மெடிக்கல் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

Web Design by Srilanka Muslims Web Team