8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடும் » Sri Lanka Muslim

8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடும்

Contributors
author image

Editorial Team

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான செயற்குழுக் கூட்டத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

எதிர்வரும் 08 ஆம் திகதி சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயற்திறன் அறிக்கை, மற்றும் வருட நடுப்பகுதி அரச நிதி நிலைமை தொடர்பான அறிக்கை என்பன குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

8 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 6.30 வரை பாராளுமன்றம் கூடும்.  மறுநாள் 09 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் இராவு 7.30 வரையும் பாராளுமன்றம் கூடும். இதன்போது உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் கீழ் வரும் இரண்டு ஒழுங்கு விதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வரும் 10 அறிவிப்புக்கள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வரும் 03 ஒழுங்கு விதிகள் மற்றும் சுங்க கட்டளைச் சட்டத்திற்கு உட்பட்ட 06 யோசனைகள் என்பன விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.  10 ஆம் திகதி காலை 10.30 முதல் முதல் இரவு 7.30 வரையும் பாராளுமன்றம் கூடவுள்ளது.

இறுதிநாள் 11 ஆம் திகதி அமைச்சர் அமரர் ஆருமுகன் தொன்டமான் தொடர்பான அனுதாபக் கூற்று யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இதற்காக அன்று காலை 10.30 முதல் மாலை 6.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமரர் தொன்டமான் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்சக்தி அமைச்சருடன் இந்திய உயர் ஸ்தானிகர் சந்திப்பு

இந்திய உயர் ஸ்தானிகர் காபால் பாக்லே மின் சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை 2020 செப்டெம்பர் 02 ஆம் திகதி சந்தித்தார்.

அமைச்சராக பதவியேற்றமைக்காக அமைச்சரை வாழ்த்திய இந்திய உயர் ஸ்தானிகர், மின் சக்தி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கையுடனான பன்முக பங்குடமையை மேலும் விருத்தி செய்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் வலியுறுத்தியிருந்தினார்.
இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது பேசப்பட்டுவரும் இருதரப்பு மின்சக்தி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை துரிதப்படுத்துதல் போன்ற பரஸ்பர நலன்கள் அடிப்படையிலான விடயங்கள் குறித்து இருவரிடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.

2018 மார்ச்சில் புது டில்லியில் இடம்பெற்ற சர்வதேச சூரியக்கல கூட்டணியின் ஸ்தாபக மாநாட்டில் மூன்று சூரியக்கல திட்டங்களுக்காக அறிவிக்கப்பட்ட 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி திட்டத்தினை வழங்கும் கடிதம் இந்திய உயர் ஸ்தானிகரால் கையளிக்கப்பட்டது.

இலங்கையில் 20,000 வீடுகள் மற்றும் 1000 அரச கட்டடங்களின் கூரைகளில் சூரியக் கலத்தினை பொருத்துவதற்காக இந்த கடனுதவி வழங்கப்படுகிறது.

இதன் மூலம் 60 மெஹா வாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யமுடியுமென எதிர்பார்க்கபடுவதுடன் இந்த திட்டத்தின் மூலம் மிதக்கும் சூரியக்கல தொகுதி ஒன்றினையும் நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினரும் இந்த கடனுதவி திட்டத்தில் கைச்சாத்திட்டதும் இந்த திட்டங்கள் அமுல்படுத்தப்படும்.

ஒட்டுமொத்த மின்சக்தி உருவாக்கத்தில் புதுப்பிக்கத்தக்க மற்றும் சூரியக்கல மின்சக்தியின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை – இந்தியா ஆகிய நாடுகளின் தேசிய முன்னுரிமை அடிப்படையில் இந்த 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்படுவதாக உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.

 அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka