முஸ்லிம் சமூகம்: சில குறிப்புகள் » Sri Lanka Muslim

முஸ்லிம் சமூகம்: சில குறிப்புகள்

IMG_20200919_095549

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Abdul Gafoor

1)
1992 / 1993 களில் நான் நளீமிய்யாவில் இருந்த காலப் பகுதியில் அறிமுகமானவர்களுள் முக்கியமான ஓர் ஆளுமை மாத்தளையைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.எம். மன்ஸூர் அவர்கள். அல்ஹஸனாத் மற்றும் ப்ரபோதய இதழ்களின் அப்போதைய ஆசிரியர். எளிமை, ஆழ்ந்த சிந்தனை, செம்மையான தமிழ், ஆங்கில, சிங்கள மும்மொழியாற்றல், எவரையும் சீண்டாத எழுத்துக்கள், பேச்சுக்கள் மற்றும் அனைத்துக்கும் மேலாக மனிதாபிமானத்தின் மொத்த வடிவம். இருபத்து நான்கு மணிநேரமும் சமூகம், இஸ்லாமியப் பணி குறித்தே சிந்தித்தவர், செயற்பட்டவர். சிங்களப் புத்திஜீவிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சிந்தனை – கருத்துப் பரிமாற்ற உறவுப் பாலமாகத் திகழ்ந்தவர்.
இவ்வளவும் இருந்தும் மன்சூர் நானாவின் தனிப்பட்ட வாழ்க்கை மிகத் துயரமானதாகவே இருந்தது. அல்லாஹ்வின் பேரருளும் ஜமாத்தே இஸ்லாமியும் எழுத்தின் மீது அவருக்கிருந்த எல்லையற்ற வெறியுமே அவரை வாழச் செய்துகொண்டிருந்தன. பிரச்சினை, பிரச்சினை, ஓயாத பிரச்சினைகள்…

நாம் அந்த அற்புதமான மன்சூர் நானாவை – அவருடைய பிரச்சினைகளை – அவர் வாழும் காலத்தில் கண்டுகொள்ளவே இல்லை. அவரை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவே இல்லை.

2)
அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்த The Island இதழின் மூத்த ஊடகவியலாளர் மர்ஹூம் Zacky Jabbar. 60 வயதுவரை தன்னந்தனியாகவே வாழ்ந்துள்ளார். நல்ல தோற்றமுடையவர், ஆரோக்கியமானவர், ஓரளவுக்கு நல்ல தொழில், இருந்தும் திருமணம் செய்துகொள்ளாமலேயே, அதுவும் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். இறுதியில் உயிரிழந்து சில நாட்களின் பின்னரே பழுதாகிய நிலையில் உடலம் கண்டெடுக்கப் படுகிறது… இத்தனைக்கும் மிகச்சிறந்த ஆங்கிலமொழி ஊடகவியலாளர்… ஏதேதோ காரணங்கள் இருக்கலாம், ஆனால் அவரது குடும்பத்தார், நண்பர்கள் இவரில் கருணைகாட்டி, வழிப்படுத்தி, செம்மைப் படுத்தி, முறையாக வாழவும் சமூகத்துக்கு உச்சக்கட்ட பயனளிக்கக்கூடிய ஒரு வளமாகவும் மாற்றத் தவறியுள்ளனர் என்றே எனக்குத் தோன்றுகிறது…

3)
யூனுஸ் என்றொரு புகழ்பெற்ற அரசியல் கேலிச் சித்திரக்காரர் இருந்தார். அவர் குறித்து அதிகம் தெரியவில்லை. ஆனால் அவரது காலத்தில் மிகச்சிறந்த துணிச்சலான ஓர் அரசியல் கேலிச்சித்திரக்காரராக இருந்தவர். அவரது அந்தத் துறைசார் ஆற்றலை அவரிடமிருந்து நமது எத்தனை இளைஞர்கள் கற்றுக்கொண்டார்களோ அவரைப் பயன்படுத்திக் கொண்டாரோ தெரியவில்லை.

4) இக்பால் அத்தாஸ். உலகப்புகழ்பெற்ற ராணுவப் புலனாய்வு ஊடகவியலாளர். இவரிடமிருந்து நமது எத்தனை இளைஞர்கள் பயிற்சிபெற்றுள்ளார்கள் ? முதலில் இவரைப் பற்றி எவ்வளவு பேருக்குத் தெரியும் ? அரச உயர் பீடங்களே இவரிடம் ஆலோசனைகள் பெறுகின்றன. இவர் ஒரு விடயத்தைச் சொன்னால் அதற்குத் தனியான ஒரு பெறுமதியும் கனதியும் உண்டு. நமது சமூகத்தின் உண்மையான பிரச்சினைகள் குறித்து இவர் மூலமாகப் பேச வைத்தால் நிறைய விஷயங்களை இலகுவாகக் கையாளலாம். சமூகம், இக்பால் அத்தாஸைப் பயன்படுத்திக்கொள்ளவே இல்லை.

5)
லத்தீப் பாரூக். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதும் உலகத்தரம் வாய்ந்த ஊடகவியலாளர். சர்வதேச விவகாரங்களில் மிகுந்த புலமை கொண்டவர். மிகச் சிரமப்பட்டுத் தனது கட்டுரைகளில் ஒருபகுதியைச் சில நூல்களாகவும் வெளியிட்டுள்ளார். நான் ஒரு முறை அவரது வீட்டுக்குச் சென்று சில ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டபோது அவர் சொன்ன வார்த்தைகள் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டுள்ளன. Mr. Ajaaz, don’t worry too much about our society and people, nothing will happen, only you will be depressed and disappointed என்று புத்திமதி சொன்னார். அவரைப் பொறுத்தவரை புத்திசாலித்தனமாகத் தன்வாழ்வை ஓரளவுக்கு சிறப்பாக அமைத்துக்கொண்டுள்ளார். மத்திய கிழக்கில் சில பத்திரிகைகளில் பணியாற்றியதால் அவரது பொருளாதார நிலை பரவாயில்லை. சமூக சேவையென்று இலங்கையில் குந்திக்கொண்டு எழுதிக்கொண்டிருந்திருந்தால் இன்று அவரின் நிலைமையும் கவலைக்கிடமாகவே இருந்திருக்கும். விஷயம் அதுவல்ல. இவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை நூல்களாக வெளியிட வேண்டுமெனவும் யாரும் எந்த அமைப்பும் முன்வருகிறார்கள் இல்லையென்றும் என்னிடம் கவலைப் பட்டார். இந்த அப்துல் லத்தீபிடம் நமது முஸ்லிம் இளைஞர்கள் எத்தனை பேர் பயிற்சி பெற்றிருப்பார்கள் ? அவரை நமது சமூகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளதா ?

சில உதாரணங்களை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன். இப்படியான ஆளுமைகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றனர்.

6)
Ramzy Razeek ஒருமாதிரியாக 161 நாட்களின் பின்னர் பிணையில் வந்துவிட்டார். அவர் என்ன செய்துகொண்டிருந்தார் ? ஏன் அவர் சிறைக்குப் போக நேர்ந்தது ? அவரது எழுத்துக்களின் முக்கியத்துவம் என்ன ? என்பன குறித்துப் பெரும்பாலானவர்களுக்கு எந்த அபிப்பிராயமும் கிடையாது. அவர் கைதாகியதற்குப் பிறகுதான் இப்படியொருவர் இருந்தாரென்பதே தெரிய வந்தது. நாம் போதிய அளவுக்கு மீண்டும் மீண்டும் எழுதியும் தனிப்பட்டோர் பலரோடு பேசியும்கூடப் போதுமான அளவுக்கு அவரது விடுதலையில் அக்கறையோ அர்ப்பணிப்போ காட்டப்படவில்லை. ஆர்வமும் கவலையும் இருந்தாலும் வெளிப்படையாகப் பேச அஞ்சினர். அதில் சில நியாயங்களும் இருந்தன. எப்படியோ விரல்விட்டெண்ணக்கூடிய சிலர் இந்த விடயத்தில் கவனம் செலுத்தினர். சரி, இனி அவற்றைக் கிளறிப் பயனில்லை. எப்படியோ அவர் வந்துவிட்டார். அது போதும்

ரம்ஸி ராஸிக் என்பவர் ஸ்டார் ராசிக் எனும் பேர்போன ஊடகவியலாளரின் மகனாவார். எனவே எழுத்தென்பது ரம்ஸியின் ரத்தத்தில் கலந்திருப்பது இயற்கையே. மும்மொழி ஆற்றலும் பரந்த வாசிப்பும் தெளிந்த சிந்தனையும் கொண்டவர். சிங்கள – முஸ்லிம் புத்திஜீவித்துவ உறவுப் பாலமாகத் திகழ்ந்து வருபவர். ஏறக்குறைய இன்னொரு மர்ஹூம் மன்ஸூர் நானாவைப் போன்றவர். பல்வேறு நெருக்கடிகள் நிறைந்தவர்.
ICCPR சட்டத்தின் கீழான ஆபத்தான வழக்கொன்றில் சிக்கியுள்ளவர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பகட்ட வழக்குத் தொடர்ந்து வருகிறது. அந்த வழக்கில் போதியளவு சாட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டால் அடுத்த கட்டமாக மேல்நீதிமன்றத்தில்தான் ICCPR வழக்குத் தொடுக்கப்படும். இதற்கெல்லாம் அவர் இனித் தொடர்ந்து நிறையவே அலைய வேண்டி வரும். சிலவேளை வக்கீல்களுக்குக் காசு கொடுக்கவேண்டியும் வரலாம்.

ரம்ஸி ராஸிக்கை ஒரு நிறுவனமாகக் கட்டியெழுப்ப வேண்டும். அவரின் ஆற்றல்களைச் சமூகத்தின் நலன்களுக்குப் பயன்படுத்த ஒரு குழு உருவாக்கப்பட வேண்டும். அவரது தேவைகளை முடியுமான அளவுக்கு நாம் நிறைவுசெய்து கொடுக்க வேண்டும். அவர் தளர்ந்துபோக விடக்கூடாது. வழக்கில் குற்றவாளி ஆகாமல் காப்பாற்றியாக வேண்டும்.
அவரும் தன்னுடைய நிலைமை என்ன, தன்னுடைய எல்லைகள் எவை, தான் எழுதும் விடயங்களால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது பற்றியெல்லாம் ஆழமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். குறிப்பாகத் தனக்கென நல்ல ஆலோசகர்கள், ஆத்மார்த்த நண்பர்களை அவர் எப்போதும் தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும். காரணம் என்னவென்றால், முஸ்லிம் சமூகத்தை நம்பிச் செயற்பட முடியாது. அவர்களின் கவலையெல்லாம் எனக்கு என்ன கிடைக்கும், எவனுக்கு வால்பிடித்தால் லாபம் கிடைக்கும், அடுத்தவனுக்கு என்ன நடந்தாலும் கவலையில்லை நான் நன்றாக இருக்க வேண்டும், நமக்கெதுக்கு ஊர் / சமூக / நாட்டு வம்பு ? சத்தமில்லாமல் இருந்துவிட்டுப் போய்விடுவோம், யாரையுமே பகைத்துக்கொள்ளக் கூடாது என்று வாழும் செத்துப்போன ஒரு சமூகம் நாம். சமூகத்தை மட்டும் நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கிவிடக்கூடாது. இது ரம்ஸி ராசிக் அவர்களுக்கு மட்டுமல்ல, அவரைப் போல செயற்பட்டுக்கொண்டிருக்கும் வெகுசிலருக்கும் ஏன் எனக்கும் நானே சொல்லிக்கொள்வதும் ஆகும்.

Web Design by The Design Lanka