எமது கல்வி மறுசீரமைக்கப்படுவது அவசியமானது - ஜனாதிபதி » Sri Lanka Muslim

எமது கல்வி மறுசீரமைக்கப்படுவது அவசியமானது – ஜனாதிபதி

Contributors
author image

Editorial Team

“எதிர்கால உலகிற்கு பொருத்தமான பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய பிரஜைகளை உருவாக்கும் வகையில் எமது கல்வி மறுசீரமைக்கப்படுவது அவசியமானது.

பல்கலைக்கழகங்கள் ஆனவை, வெறுமனே பட்டங்களை வழங்கும் நிறுவனங்களாக மட்டும் இல்லாமல், நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும், அதேபோல் பட்டம் பெறுவோருக்கும் பயன் தருபவையாகத் திகழ வேண்டும்.

அதனால், நடைமுறைத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி, புதிய பாடவிதானங்களை உடனடியாக கல்வி அதிகாரிகள்அறிமுகப்படுத்த வேண்டும்.

பல வருடங்களாக நாட்டுக்குப் பொருத்தமான கல்வி மறுசீரமைப்பு ஒன்று இடம்பெறாமை தற்போதைய தொழில் சந்தையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும், பல்வேறு துறைகளில், தொழில் வாய்ப்புகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

ஆனாலும் அவற்றுக்கு அவசியமான மனித வளத்தை எமது கல்வி முறைமை மூலம் நாம் உருவாக்க வில்லை.

நாட்டின் எதிர்கால சமூகம் பயனுள்ள பிரஜைகளாக உருவாகுவதற்கு, புதிய அறிவு திறமைகள் மற்றும் திறன்களை அவர்களிடத்தில் விருத்தி செய்வது அவசியமாகும்.

இளைஞர், யுவதிகள் கல்வித்துறையில் கைவிடப்படாமல் இருப்பதற்கு முன்பள்ளி கல்வி முதல் உயர் கல்வியை நிறைவு செய்யும் வரை தெளிவான வழிகாட்டல்களை நாம் திட்டமிட வேண்டும்.

அதன் மூலம் தொழில்நுட்ப கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கவும் கல்வி பொறிமுறையில் தொழிநுட்ப பாவனையை விரிவுப்படுத்தவும் முடியும்.

கல்விசார் அனைத்து நிறுவனங்களையும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டு வந்ததன் காரணம் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கே ஆகும்.

சாதி, மத பேதங்களின்றி அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பை வழங்குவது கட்டாயமாகும். அந்த வகையில், நாட்டுக்குப் பொருத்தமான பயனுள்ள பிரஜைகளை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமையாகும்.

கல்வியை தொடர முடியாது போன பிள்ளைகள், வயதெல்லைகள் இன்றி, மீண்டும் தாம் எதிர்பார்க்கும் கல்வி இலக்கை அடைந்து கொள்வதற்குப் புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் உரிய பின்புலம் தயாரிக்கப்பட வேண்டும்.

பரீட்சையை மையப்படுத்திய கல்விக்கு மாற்றமாக மாணவர் மையக் கல்வி முறை ஒன்றே நடைமுறை ரீதியாகச் செயற்படுத்தப்பட வேண்டும்.

பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதிபெறும் அனைத்து மாணவர்களும் பட்டம் பெறும் வரை செல்வதற்கு அவசியமான நடவடிக்கையுடன், பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதிக்கு இறங்காத – தொழிற்சந்தை பட்டதாரிகளைத் தேடிச் செல்லக்கூடிய – கல்வி முறைமை ஒன்றே எமக்கு உடனடி அவசியமாக உள்ளது.

எதிர்வரும் வருடத்தில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 31,000 இலிருந்து 41,000 வரை அதிகரிக்கப்படும்.

திறந்த பல்கலைக்கழகத்திற்கு மேலதிகமாக 10,000 பேர் உள்வாங்கப்படுவர்.

தகவல் தொழிநுட்ப பட்டத்தை பயிலுவதற்காக 10.000 பேரை இணைத்துக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தெரிவுசெய்யும்போது அபிவிருத்தி அடைந்த நாடுகள் பின்பற்றும் – பல்கலைக்கழகங்களுக்கே உரித்தான முறைமையை நமக்கு ஏற்ற விதத்தில் மாற்றித் தயாரித்தல் வேண்டும்.

உள்நாட்டு வர்த்தகர்கள் சர்வதேச சந்தைக்கு.. ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையை உடனடியாகக் கருத்தாடலுக்கு உட்படுத்திச் செயற்படுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”

— கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைக் கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கடந்த 24ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது….

அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்க்ஷ, எனது செயலாளர் பீ. பி. ஜயசுந்தர ஆகியோருடன் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மற்றும் துறைசார் நிறுவனங்களின் தலைவர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

#கோட்டாபயராஜபக்‌ஷ #gotabayarajapaksa #GR

Web Design by Srilanka Muslims Web Team