பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை » Sri Lanka Muslim

பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை

Contributors
author image

Editorial Team

மினுவங்கொடை பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள கொவிட் 19 தொற்றாளர்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் மறு அறிவித்தல் வரை பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, கண்காட்சிகள், கருத்தரங்குகள், விருந்துபசாரங்கள், உட்புற மற்றும் வெளிப்புற நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மதம் சார்ந்த ஊர்வலங்கள் உட்பட அனைத்து விதமான ஊர்வலங்களுக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, திவுலபிடிய, மினுவங்கொடை மற்றும் வெயாங்கொடை ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் பணி புரியும் ஊழியர்கள் தாம் தங்கியுள்ள இருப்பிடங்களிலேயே தொடர்ந்தும் இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலைகளின் நிர்வாகம் தமது ஊழியர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் செயற்பாட்டை தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதேபோல், மினுவங்கொடை Brandix தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இலங்கையின் எந்த பிரதேசத்தில் வசித்தாலும் வீடுகளை விட்டு வௌியேறாமல் தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேபோல், தற்போது கொவிட் 19 தொற்றுக்குள்ளான நபர்களின் குடும்ப உறுப்பினர்களை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த நபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு செல்ல தயாராக வேண்டும் என அரசாங்கம் தொற்றுக்குள்ளான நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னர் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட திவுலபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka