புலமைப்பரிசில் பெறுபேறுகள்: அழுத்தங்களை விதைக்குமா? » Sri Lanka Muslim

புலமைப்பரிசில் பெறுபேறுகள்: அழுத்தங்களை விதைக்குமா?

scholer

Contributors
author image

M.M.A.Samad

மிகவும் பரபரப்பாகவும், பெற்றோர்களின் அதிக எதிர்பார்ப்புமிக்கதானதொரு பரீட்சையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட ஏறக்குறைய 3050 பரீட்சை நிலையங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நடந்து முடிந்திருக்கிறது. இப்பரீட்சை நாளில் நடந்தேறிய நிகழ்வுகளும், பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றிய சூழ்நிலைகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை வியக்க வைத்து பொதுக் கூட்டத்தில் உரையாற்றுமளவிற்கு ஆக்கியதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

இலங்கையின் கல்வி வரலாற்றில் இலவசக் கல்வியின் தந்தை எனப் போற்றப்படுபவர் கலாநிதி சி. டபிள்யூ. டபிள்யூ கன்னங்கரா.. அவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலவசக் கல்வித் தொடரில் வருமானம் குறைந்த, திறமைமிக்க மாணவர்களின் எதிர்காலக் கல்வி வாழ்க்கையை ஊக்கப்படுத்தவே 1952ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்;பரிசில் பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டது.

பரீட்சை என்பது ஒரு மாணவனின் அறிவுமட்டத்தை, ஞாபத் திறனைப் பரீட்சிப்பதாகும். மாணவரிடையே தனியாhள் வேறுபாட்டுப் பண்புகள் ஒரே விதமாக அமைவதில்லை. இதனால், அவர்களின் பரீட்சை பெறுபேறுகளும் வேறுபட்டதாகக் காணப்படும்.
பரீட்சையில் சாதித்தவர்கள் வாழ்த்தப்படுவதும் சாதிக்காதோர் சாதிப்பதற்காக ஊக்கப்படுத்தப்டுவதும்தான் பரீட்சைப் பெறுபேறுகளின் எதிர்பார்ப்பாகும். மாறாக சித்தியடைந்தோரின் சார்பில் புகழின் உச்சிக்குச் செல்வதோ அல்லது சித்தியடையாதோரின் சார்பாக உடைந்துபோவதோ ஏற்றுகொள்ளத்தக்கதல்ல. அது அழுத்தங்களையே உருவாக்கும். இவ்வாறானதொரு நிலைமையைத்தான் கடந்த காலங்களில் தரம் ஐந்து புலமைப்;பரிசில் பரீட்சை பெறுபேறுகள்; உருவாக்கியது. ஏனெனில் இப்பரீட்சையானது பிள்ளைகளின் அறிவுத் திறனை பரீட்சிக்கும் பரீட்சை என்பதற்கு மாறாக பெற்றோர்களின் கௌரவப் போட்டிக்கான பரீட்சையாக நோக்கப்படுகிறது.

புலமைப்பரிசில் பரீட்சையும் பின்னணிகளும்
வசதி குறைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கும், திறமையான மாணவர்களை பிரபல்ய பாடசாலைகளில் அனுமதிப்;பதற்குமாக அறிமுகப்படுத்தப்பட்ட இப்பரீட்சையில், தகைமை பெறும் மாணவர்கள் வசதி குறைந்திருப்பின், உதவித் தொகையாக ஆண்டொன்றுக்கு 5,000 ரூபா வரை 15,000 மாணவர்களுக்கு இப்புலமைப் பரிசில் சகாயக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அத்துடன், கல்வி அமைச்சினால் நிர்ணைக்கப்படும் பாடசாலைகளுக்குரிய வெட்டுப் புள்ளிகளுக்கு ஏற்ப 15 ஆயிரம் மாணவர்கள் பிரபல்ய பாடசாலைகளில் 6ஆம் தரத்தில் அனுமதியளிக்கப்படுகின்றனர்.

கற்றலின்பால் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இப்புலமைப்பரிசில் பரீட்சை, மாணவர்களுக்கு தோல்வி மனப்பாங்கையும், சாதிக்க முடியவில்லை என்ற குற்ற உணர்வையும், மன அழுத்தங்களையும் உருவாக்குவதுடன், கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மனச்சோர்வையும், கௌரவப் பிரச்சினைகளையும,; தாழ்வு மனப்பாங்கையும் ஏற்படுத்திமையை கடந்தகாலங்களில் இப்பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்களை அவதானிக்கின்றபோது அறியக்கூடியதாகவுள்ளது.

ஒவ்வொரு வருடமும் சாராசரி 3 இலட்சம் மாணவர்கள் இந்த ஐந்தாம்; தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். கடந்த 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் முறையே 313,450 பேரும்; 321,427 பேரும் பரீட்சைக்குத் தோற்றியதுடன் 2012ஆம் ஆண்டு 318,416 மாணவர்களும் 2013ல் 322,455 மாணவர்களும் தோற்றியிருந்தனர். 2014ல் 334,600 பேரும், 2015ல் 340,926 2016ல் 343,757 மாணவர்களும் 2017ல் 356,728 பேரும் தோற்றியிருப்பதுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான இப்பரீட்சைக்கு 355,321 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததில் தமிழ் மொழி மூலமாக 87,556 மாணவர்கள்; நாடு பூராகவும் இப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இப்பரீட்சையில் ஏறக்குறைய 32 ஆயிரம் மாணவர்கள் புலமைப் பரிசில் நிதிக்காகவும், பிரபல்ய பாடசாலைகளின் அனுமதிக்காவும் தகைமை பெறுகின்றனர். இப்பரீட்சையில் இரு வினாத்தாள்களுக்குமாக 70 புள்ளிகளைப் பெறுகின்றவர்கள் ஏறக்குறைய 75 வீதமாகவுள்ளனர் இருப்பினும், பெரும்பாலானோருக்கு புலமைப் பரிசில் உதவித் தொகை கிடைப்பவதில்லை. ஏனெனில், அவர்களில் அதிகமானோர்; வருமானம் கூடியவர்களினதும், அரச உத்தியோகத்தர்களினதும் பிள்ளைகளாகும்.

பரீட்சையும் விமர்சனங்களும்
இப்பரீட்சைக்கான பாடத்திட்டம் இம்மாணவர்களின் உளக் கொள்ளளவுக்கு உகந்ததல்லவென்றும், இவ்வயதுக் குழுவினருக்கு இத்தரத்தில் இப்பரீட்சை பொறுத்தமற்றது என்றும், புலமைப் பரீசில் பரீட்சைக்கான வினாக்கள் அப்பரீட்சைக்கான பாடவிதானப் பரப்புக்குள் இல்லையெனவும், பாடவிதானத்தை முழுமையாக பூர்த்தி செய்யப்படாது வினாக்கள் எடுக்கப்படுவதாகவும், தரம் 7இல் அல்லது தரம் 8இல் தான் இப்பரீட்சை நடாத்தப்படல் வேண்டும், இப்பரீட்சை இனிவரும் ஆண்டுகளில் நடத்தப்படக் கூடாது என்றும் பல்வேறு வாதப் பிரதிவாதங்களுடனும், விமர்சனங்களுடனும் பல கோரிக்கைகள்;; புலமைப் பரிசில் பரீட்சையின் அறிமுக காலந்தொட்டு ஆசிரிய தொழில்சங்கங்கள் உட்பட பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இப்பரீட்சை சமூகத்தின் மத்தியில் பலத்த செல்வாக்கைச் செலுத்தி உள்ளது. க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சை ஆகிய தேசிய பரீட்சைக்கு அப்பால் இப்பரீட்சை முக்கியத்துவம் பெற்றுள்ளது. கல்வி வர்த்தகத்துக்கான சிறந்த தளமாக இப்பரீட்சையும் இப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் வகுப்புக்களும்; மாறியுள்ளன. வருடா வருடம் நடைபெறும் இப்பரீட்சைக்காக மாணவர்கள் தரம் மூன்றிலிருந்தே பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்களினால் இப்பயிற்சியளிக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் பணத்தை அதற்காகச் செலவளித்துக் கொண்டுமிருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு சில பாடசாலை அதிபர்கள் தங்களது பாடசாலை மாணவர்கள் கூடிய புள்ளிகளைப் பெறுவதோடு அதிகளவிலாக மாணவர்களை சித்தியடையச் செய்ய வேண்டுமென்பதற்காக கடும் பிரயத்தனங்களை ஒவ்வொரு வருடமும் முன்னெடுத்துவருவதையும் அவதானிக்க முடிகிறது.

ஒரு சில பிரதேசங்களில் வெளிமாவட்டங்களிலிருந்து பரீட்சை வினாத்தாள்கள் கொள்வனவு செய்யப்பட்டு, அவை திகதி மாற்றப்பட்டு, பிரதி எடுக்கப்பட்டு, புலமைப் பரிசில் பரீட்சைக்கான பாட விடயங்களைக் கற்பிக்கும் ஒரு சில ஆசிரியர்களின் எவ்வித ஆக்க முயற்சிகளும், தேடல்களும் இன்றி, வருமானத்தை மாத்திரம் ஒரே நோக்காகக் கருதி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு பரீட்சை நடாத்தப்படுகின்றமையும், பரீட்சை நடாத்தப்பட்ட வினாத்தாள்கள் அவ்வகுப்பு மாணவர்களிடையே பரிமாறப்பட்டு மதிப்பீடும் செய்யப்படுகின்றமையும் என்ற அவல நிலைகள்; கடந்த அரங்கேறிய வரலாறுகளும் நம்முன் காணப்படுகின்றன.

அது மாத்திரமின்றி, கௌரவத்தின் அடிநாதமாக, கௌரவப் பிரச்சினையின் புதிய பரிணாமமாக இப்பரீட்சை பெற்றோர்களிடையே வளர்ச்சி பெற்றுள்ளது. எத்தகைய செலவு ஏற்பட்டாலும் தனது பிள்ளை பரீட்சையில் தோல்வி அடையக் கூடாது, தகைமை பெறத் தவறக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, பிள்ளைகளின் உடற்பயிற்சிக்கு நேரம் வழங்காது, பொழுது போக்குக்கு அனுமதிக்காது, இரவு பகல் பாராது பிள்ளைகளை மன அழுத்தத்துக்குள்ளாக்கி தாங்களும் மன அழுத்தத்துக்கும் மனச்சோர்வுக்கும் உள்ளாகும் நிலையை இப்பரீட்சைக்கு தயார்படுத்தும் காலங்களில் காணக் கிடைப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்..

பிள்ளைகளும் உடல், உள வேறுபாடுகளும்
எந்தவொரு வகுப்பினதும் எந்த இரு மாணவரும் நிழற் பிரதிகள் போல அறிவுத் திறன் உடையவர்களாக இருப்பதில்லை. ஒவ்வொரு மாணவனும் தனித்தன்மையுடனும் தனிப்பட்ட அவனுக்கே உரித்தான ஆளுமையுடனும் செயற்படுகிறான் என்பதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் விளங்கிச் செயற்பட வேண்டும்.

மாணவர்களின் உடல் வளர்ச்சி வீதம், உடல் முதிர்;ச்சியின் அளவு போன்றவற்றில் காணப்படும் வேற்றுமைகளுடன் மாணவர்களது நுண்ணறிவு, நாட்டங்கள், கவர்ச்சிகள், செய்திறன்கள், மனவெழுச்சி வேறுபாடு, ஆர்வங்கள், ஆசைகள், மனப்பாங்குகள் போன்ற ஒவ்வொரு பண்பிலும் மாணவர்களிடையே வேறுபாடுகள் உள்ளதை கல்வி உளவியல் தெளிவுபடுத்துகிறது.

அறிதல், மனவெழுச்சி, முயற்சி ஆகிய செயல்கள் இணைந்த ஒவ்வொரு பண்பிலும் மாணவரிடையே வேற்றுமைகள் உள்ளன. இடைநிலை வகுப்பு மாணவர்களை விட ஆரம்பப்பிரிவு மாணவர்களிடையே தனியாள் வேற்றுமைகள் அதிக அளவிலாகக் காணப்படும். 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள். ஆரம்பப் பிரிவு மாணவர்களே. எனவே இவர்களில் ஒருவருக்கொருவர் நுண்ணறிவு, செயல்திறன், மனவெழுச்சி போன்ற பண்புகளில் வேறுபாடு காணப்படுவது இன்றியமையாதது.

மாணவர்களது ஆளுமை வளர்ச்சிக்கு ஏதுவான காரணிகளில் காணப்படும் வேறுபாடு இவர்களிடையே தனியாள் வேற்றுமைகள் எழக் காரணமாக அமைக்கின்றன. ஆளுமை என்பது ஒருவனது உடல், அறிவு, மனவெழச்சி போன்ற எல்லாக் கூறுகளையும் சேர்த்த பண்புகளது கலவையாகும். இவற்றுடன், மரபு நிலைக்காரணிகள், சூழ்நிலைக் காரணிகள், கற்றல், பயிற்சி, உடலில் காணப்படும் சுரப்பிகள், ஹோமன்கள் என்பன ஒரு மாணவனது தனியாhள் வேறுபாடுக்கு ஏதுவாக அமைகின்றன என்பதை ஆசிரியர்களும் குறிப்பாக பெற்றோரும் அறிந்திருப்பது அவசியம்.

பரீட்சை பெறுபேறுகளும்; அழுத்தங்களும்
இத்தகையை நிலைமைகளை அறியாது, அல்லது அறிந்தும் கூட பரீட்சைக்குத் தோற்றி தகைமை பெறாத அல்லது சித்தியடையாத இந்த தனியாள் வேறுபாடுகள் அதிக அளவிலான வயதைக் கொண்ட பிள்ளைகளை அவர்களின் ஆழ் மனதில் அழுத்தத்தை, தாக்கதை ஏற்படுத்தும் வகையில் பெற்றோர்கள் கடந்த காலங்;களில் நடந்து கொண்டதாக வெளியான செய்திகள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன

இவை தவிர, கடந்த ஆட்சிக்காலத்தில் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் அனுஷ்டிக்கும் சர்வதேச சிறுவர் தினத்தில் இப்பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன. இவ்வாறு வெளியிடப்பட்ட இப்பரீட்சைப் பெறுபேறு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி ஆர்வலர்கள் மற்றும் கல்வித்துறையினர்கள் மத்தியில் பெருந்தாக்கத்தையும் பரபரப்பையும் எற்படுத்தியிருந்தமையையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

அத்தோடு, உரிய வெட்டுப் புள்ளியைப் பெறாத பிள்ளைகளைத் திட்டித்தீர்த்தமை, விரட்டியடித்தமை, குறைந்த புள்ளிகளைப் பெற்றமைக்காக பெற்றோர் சூடுவைத்தமை, செல்லப்பிராணிகளை அடைக்கும் கூடுகளில் குறைந்த புள்ளி பெற்றமைக்காக பிள்ளையை அடைந்து வைத்தமை போன்ற பல சம்பங்கள் பிள்ளைகளின் இப்பரீட்சைப் பெறுபேறுகள் பெற்றோர்களுக்கு ஏற்படுத்திய அழுத்தங்களினால் கடந்த காலங்களில் நடந்தேறின.

இவ்வாறன நிலையில், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் அதிகமானோர், அதிகரித்த மன அழுத்த உபாதைகளுக்கு உள்ளாகி வருவதாக கடந்த காலங்களில் நரம்பியல் வைத்தியர்களினால்; தெரிவிக்கப்பட்டன. இப்பரீட்சையின் பெறுபேறு, பெற்றோர்களின் கௌரவப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளமையே இந்நிலைமைக்குப் பிரதான காரணம் எனவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

பெற்றோர்களும், பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும், ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மீது, அதன் பெறுபேறு தொடர்பில் செலுத்தும் அளவு கடந்த ஆதிக்கமே, மாணவர்களின் இத்தகைய மன அழுத்தம் மற்றும் அதிகரித்த தலைவலி போன்ற உபாதைகளுக்கு காரணம் எனவும், இது தொடர்பில், அறிவு பூர்வமாகச் சிந்தித்து செயற்பட வேண்டியது பெற்றோர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் மீதான கட்டாயக் கடமை எனவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தமையையும் இத்தகைய உபாதைகளுக்காக சிகிச்சை பெறும் அதிகரித்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து, இப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இயல்பாகச் சிந்தித்து செயல்படும் நிலைக்கு வரவேண்டுமாயின், பாடசாலைகளிடையே போட்டி நிலைமையை உருவாக்கி, பணம் வசூலிக்கும் தொழிலாக உருவெடுத்துள்ள இப்பரீட்சையின் கட்டமைப்பு மற்றும் நோக்கம் முதலானவை மாற்றம் பெறவேண்டியது அவசியம் எனவும் அவர்கள் கடந்த காலங்களில் வலியுறுத்தியிருந்தமையை இங்கு சுட்டிக்காட்டும் இச்சந்தர்ப்பத்தில் இம்முறை நடந்தேறிய இப்பரீட்சைக்கான வினாக்கள் இலகுவானதாகக் காணப்பட்டதாக பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் குறிப்பிட்டதோடு கடுமையாகக் கஷ்டப்பட்டு பரீட்சைக்குத் தயார்படுத்தியமை தொடர்பில் அவர்கள் கவலைப்பட்டதையும் குறிப்பிட்டாக வேண்டும்;.

இந்நிலையில், இப்பரீட்சைப் பெறுபேறு இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியிடப்படலாம். அவ்வாறு வெளியிடப்படும் இப்பரீட்சைப் பெறுNறுகளின் கடந்த கால மற்றும் சமகால யதார்த்த நிலைகள் குறித்து பெற்றோர்கள் மாத்திரமின்றி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தெளிவுபடுத்தப்படுவது அவசியமாகவுள்ளது;. பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேற்றின் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்குகள் இப்போதிருந்தே பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன், பெற்றோர்கள் இவை குறித்த உளவள ஆலோசனைக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகும். இவ்வாலோசனைகள் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளினூடகாவும், பாடசாலைகள் ஊடாகவும் தொழில்வாண்மை உளவள ஆலோசகர்களினூடாக வழங்கப்பட வேண்டும். வெற்றி தோல்வின் யதார்த்த நிலைகள் பெற்றோர்களினூடாக பிள்ளைகளுக்கு அறிவூட்டப்ப வேண்டும். இதன் மூலம் இப்பரீட்சை பெறுபேறுகள் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் மீது ஏற்படுத்தும் உளத்தாக்கத்தைக் குறைத்து வெற்றியையும், தோல்வியையும் ஏற்றுவாழும் மானப்பாங்கை உருவாக்கும். வெற்றிகரமான உளவளத்துணை செயற்பாடுகள் இப்பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தகைமை அல்லது தகைமையின்மையானது தேவையற்ற அழுத்தங்களை விதைப்பதைத் தவிர்ப்பதற்கு உதவுவதோடு விபரீதங்களையும் தவிர்க்கும் என்பதுமே நிதர்சனமாகும்..

Web Design by The Design Lanka