Video;பள்ளிவாசல்களில் தொடர்ந்து அரசாங்கத்தின் ஆதிக்கம் நிலைபெற தொடங்கியுள்ளது-அஸாத்சாலி - Sri Lanka Muslim

Video;பள்ளிவாசல்களில் தொடர்ந்து அரசாங்கத்தின் ஆதிக்கம் நிலைபெற தொடங்கியுள்ளது-அஸாத்சாலி

Contributors
author image

Editorial Team

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்ற காரணத்தினால்தான் தமிழ் மக்களின் ஏக பிரதி நிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழைத்து இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத்சாலி தெரிவித்தார்.

 

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை அமுல் படுத்துவது தொடர்பில் பிரதமர் மோடி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உறுதியளித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் ஒப்பந்தக்காரராக செயற்பட்டுக்கொண்டிருக்கும் சுப்பிரமணிய சுவாமி 13 ஆவது திருத்தம் 90 வீதம் அமுல்படுத்தப்பட்டதாக கூறியது முற்றிலும் பொய்யானது என்றார். புத்தி சுவாதீனம் இல்லாதவர் சுப்பிரமணிய சுவாமி என்பதும் தெட்ட தெளிவாகி விட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் அமைப்பு நேற்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்;

 

நடைபெறவுள்ள ஊவா தேர்தலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் அரசாங்கம் சர்வதிகாரமாக செயற்படுகிறது. ஜனாதிபதியின் அண்ணன் மகன் ரவீந்திர ராஜபக் ஷ அரசாங்கத்தின் முதன்மை வேட்பாளராக நிறுத்தியுள்ளதோடு தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி அரசாங்கம் அங்கு செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கூட சுதந்திரமாக செயற்பட முடியாத நிலையே அங்கு ஏற்பட்டுள்ளது.

 

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில் ரத்தெனிகல போன்ற பல நீர் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இது போன்ற ஒரு சிலவற்றையேனும் அரசாங்கம் அமைத்திருந்தால் இன்று 15 மாவட்ட மக்கள் தண்ணீர் இன்றி சாகும் நிலை உருவாகியிருக்காது. தோல்வி கண்ட விமான நிலையத்துக்கும் துறைமுகத்திற்கும் செலவழித்த பணத்தை மக்கள் நலன் திட்டங்களுக்கு பயன்படுத்தியிருந்தால் குடிநீர் உணவு பிரச்சினை என்று எதுவும் இங்கு ஏற்பட்டிருக்காது. எது எப்படி இருந்தாலும் ஊவா தேர்தலில் அரசாங்கம் தோல்வியடைவது உறுதி.

 

அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லை. தேவையான மருந்துகள் தொடர்பில் அண்மையில் அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கமும் அமைச்சர்களும் மக்கள் பணத்தினை சூறையாடிக்கொண்டிருப்பதன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

 

பள்ளிவாசல்களில் தொடர்ந்து அரசாங்கத்தின் ஆதிக்கம் நிலைபெற தொடங்கியுள்ளது. அதற்கு பலரும் துணை போவது வேதனையளிக்கிறது. முஸ்லிம்களின் கட்டமைப்பினை சீர் குலைக்கும் வகையிலேயே அரசாங்கம் இது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கிறது. பள்ளிவாசல் வக்பு சபை அரசாங்கத்தினால் சீரழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. தயவு செய்து இதற்கு துணை போகாதீர்கள். பலீல் மௌலவி என்பவர் பெண்களுடன் தகாத உறவுகளை மேற்கொண்டார் என்பதற்காக விலக்கி வைக்கப்பட்டவர் அவரை மீண்டும் வக்பு சபையில் இணைத்துள்ளனர். இவை சமூக சீரழிவினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

 

இன்று பொது பலசேனாவுடன் முஸ்லிம்கள் இந்துக்கள் என்று தம்மை கூறிகொண்டு சிலர் எமது சமூகத்தை காட்டிக்கொடுக்கின்றனர். உண்மையில் பொது பல சேனாவுடன் இணைந்துள்ள எவரும் உண்மையான இந்துவோ முஸ்லிமோ கிடையாது. மாறாக அவர்கள் எமது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்களே ஆகும்.

 

மேலும், கொழும்பு மேயர் முஸம்மில், கோட்டாபதி அதாவது கோத்பாய ராஜபக் ஷவின் உறவினராக செயற்படுகிறார் என்று அவரை கோட்டாதிபதி என்று என்னிடம் அமைச்சர் திலங்க சுமதிபால ஒரு நிகழ்வின் போது கூறினார். ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகித்து கொண்டு கோட்டாதிபதியாக அவர் செயற்படுவாரானால் அது வேதனை தருகின்ற விடயம். முஸ்லிம் மக்களுக்கு துரோகம் இழைக்கின்ற செயல் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

Web Design by Srilanka Muslims Web Team