அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அதி முக்கிய அறிவித்தல் - Sri Lanka Muslim

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அதி முக்கிய அறிவித்தல்

Contributors
author image

Junaid M. Fahath

இன்ஷா அல்லாஹ்  8ஆம் திகதி (நாளை  வியாழக் கிழமை) நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு இலங்கைவாழ் அனைத்து முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

 

1)அல்லாஹுதஆலாவின் நாட்டப்படியே அனைத்து விடயங்களும் நடைபெறுகின்றன என்று உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ள நாம் இத்தேர்தலின் முடிவும் அல்லாஹுதஆலாவின் நாட்டப்டியே அமையும் என்பதை உறுதிகொள்ளவேண்டும்.

 

2)இம்மை மறுமை வாழ்வின் வெற்றி றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றி வாழ்வதிலேயே தங்கியிருக்கின்றது என்பதை உறுதிகொண்டுள்ள நாம் தேர்தல்; சந்தர்ப்பத்திலும் நபிவழி நின்றே செயற்படவேண்டும்.

 

3)முஸ்லிம்களாகிய எங்களது மிகப்பெரும் ஆயுதம் பிரார்த்தனையாகும். எனவே நாட்டினதும் முஸ்லிம்களினதும் நிம்மதியான சந்தோஷமான எதிர்காலத்துக்காக இத்தருணத்தில் அதிகமதிகம் பிரார்த்திக்க வேண்டும்.

 

4)முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹுதஆலாவின் மீதுள்ள நம்பிக்கை, றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டல், பிரார்த்தனை ஆகியவற்றின் மூலமே எமது விடயங்களைச் சாதித்து வந்துள்ளோம். எனவே இச்சந்தர்ப்பத்திலும் அவ்வழிநின்றே நாம் சாதிக்கவேண்டுமே தவிர மாற்றுவழிகள் எதையும் தேடக்கூடாது.

 

5)அல்லாஹுதஆலாவின் உதவியை ஈட்டித் தரும்; நல்லமல்களில் நாம் அதிகமதிகம் எம்மை ஈடுபடுத்திக் கொள்ளல் வேண்டும்.

 

6)எதிர்வரும் 9ஆம் திகதி வெள்ளிக் கிழமை நடைபெறும் குத்பாப் பிரசங்கத்தில் ஆலிம்கள் அரசியல் சார்ந்த விடயங்களைப் பேசுவதை முற்று முழுதாக தவிர்ந்துகொள்வதுடன் மேற்சொன்ன விடயங்களை அமுல் செய்ய பொதுமக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

 

7)அனைத்து ஜும்ஆ மஸ்ஜித்களிலும் எதிர்வரும் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை குத்பாப் பிரசங்கம், தொழுகை அனைத்தையும் பி.ப 01:00 மணியுடன் முடித்துக்கொள்வதை நிர்வாகிகளும் கதீப்மார்களும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

 

8)பொதுமக்கள் ஜும்ஆவுக்கு நேரகாலத்துடன் சென்று தொழுகையை நிறைவேற்றியதும் தத்தமது வீடுகளுக்கு அமைதியாக திரும்பிச் சென்றுவிட வேண்டும்.

 

9)ஜும்ஆ தினத்தில் பாதுகாப்பாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ள வேண்டுமென்பதுடன் வீணாண பிரச்சினைகளை உருவாக்குவதையும் பிரச்சினைகளை உருவாக்குவோருக்கு துணைபோவதையும் முற்று முழுதாக தவிர்ந்துகொள்ளல் வேண்டும்.

 

10)இத்தருணத்தில் பிறருக்கு எங்களது சொல்லாலோ செயலாலோ எவ்வித பங்கமும் ஏற்பட்டு விடாமல் மிகக் கவனமாக நடந்துகொள்ளல் வேண்டும. இவ்வாறு பங்கம் விளைவிப்பது ஷரீஅத்துக்கு முரண்பட்டதும் அல்லாஹுதஆலாவின் உதவியைத் தடுப்பதுமாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளல் வேண்டும்.

 

எனவே அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஜம்இய்யாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றி நடப்பதுபோன்று மேற்சொன்ன வழிகாட்டல்களையும் பின்பற்றி அல்லாஹுதஆலாவின் உதவியைப் பெற்று அமைதியான எதிர்காலத்துக்கு வழிவகுக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து முஸ்லிம்களையும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றது.

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் (முப்தி) எம்.ஐ.எம். றிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Web Design by Srilanka Muslims Web Team