அக்குறணை மற்றும் ஏறாவூர் பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையால் 60 மாணவர்கள் வைத்தியசாலைகளில் » Sri Lanka Muslim

அக்குறணை மற்றும் ஏறாவூர் பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையால் 60 மாணவர்கள் வைத்தியசாலைகளில்

Contributors

அக்குறணை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் உணவு ஒவ்வாமை காரணமாக 60 க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் திடீர் சுகவீனமுற்று இன்று வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

திடீர் சுகவீனமுற்ற அக்குறணை பகுதி பாடசாலையொன்றைச் சேர்ந்த 38 மாணவர்கள் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த மாணவர்கள் இன்று காலை இலைக் கஞ்சி அருந்தியதை அடுத்து திடீர் சுகவீனமுற்றதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

ஆயினும் இந்த மாணவர்களின் நிலைமை குறித்து கவலையடையத் தேவையில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏறாவூர் பிரதேச பாடசாலையொன்றின் 30 மாணவர்களும் திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

உணவு ஒவ்வாமை காரணமாக இந்த மாணவர்கள் இன்று முற்பகல் 11 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இந்த மாணவர்களில் சிலருக்கு வாந்தி, தலைவலி போன்ற உபாதைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், உரிய சிகிச்சைகளின் பின்னர் சுமார் மூன்று மணித்தியாலத்தில் சகல மாணவர்களும் வெளியேறியதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.(news first)

Web Design by Srilanka Muslims Web Team