அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரிக்க CID யினால் குழு நியமனம் - Sri Lanka Muslim

அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரிக்க CID யினால் குழு நியமனம்

Contributors

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அசாத் சாலி, பணம் இருந்தால் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்வதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்தோடு, கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார் என்பதற்காக குர்ஆனில் உள்ள சட்டங்களை மாற்றிக் கொள்ள முடியாது என்றும் அவ்வாறு சட்டங்கள் மாற்றப்பட்டாலும் அதனை முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறைமையை சட்டங்களினால் மாற்றிவிட முடியாது. முஸ்லிம் ஆண் ஒருவர் தனது பண வசதிக்கு ஏற்ற வகையில் பெண்களை திருமணம் செய்து கொள்கின்றார். அதில் எவ்வித தவறும் கிடையாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

செல்வம் இருக்கும் ஓர் ஆண் வசதி குறைந்த சில பெண்களை திருமணம் செய்து அவர்களை பராமரிப்பதில் தவறில்லை. முஸ்லிம் சட்டங்களை மாற்றி தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். இனவாத அடிப்படையிலேயே இந்த சட்ட மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என அசாத் சாலி குற்றம் சுமத்தியிருந்தார்.

இதனையடுத்து, முஸ்லிம் சட்டம் தொடர்பில் அசாத் சாலி தெரிவித்த கருத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி பௌத்த தகவல் மையத்தின் பணிப்பாளர் அங்குலுகல்லே சிறி ஜினானந்த தேரர் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் உள்ளிட்ட சிலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.

இந்த நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team