அசாத் சாலியின் விஷேட பேட்டி - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

பதவிகளுக்கு பின்னால் சென்ற வரலாறோ, பதவிகளுக்காக எவருக்கும் பின்னால் சென்ற வரலாறோ அவருக்கு கிடையாது என்று எமக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார். தேசிய ஐக்கிய முன்னணிக்கு தேர்தல் திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைத்து உள்ள நிலையிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பங்காளதேஷ் விஜயத்தில் கூடவே பங்கேற்று அரசியல் எதிரிகளால் அசாத் சாலி கடுமையாக சாடப்பட்டு வருகின்ற நிலைமையிலும் அவர் வழங்கி உள்ள பேட்டி பின்வருமாறு.

கேள்வி:- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்திய தேசிய இப்தார் விழாவை நீங்கள் இதயபூர்வமாகவா புறக்கணித்து இருந்தீர்கள்?

பதில்:- மஹிந்த ராஜபக்ஸவின் காட்டாட்சியை அவருடைய ஜனாதிபதி பதவி காலத்தில் இரு வருடங்கள் இருக்கும்படியாக முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியை தமிழ் பேசும் மக்களே உருவாக்கினர். ஆனால் எம்மை பொறுத்த வரை இரு ஆட்சிகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் கிடையாது. ஆக வெள்ளை வான் கடத்தல் மாத்திரம் இன்னமும் நடக்கவில்லை..

சிங்கள பேரினவாதமும், பௌத்த பெருமதவாதமும் மிக திட்டமிடப்பட்ட வகையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நல்லாட்சியில் முடுக்கி விட்டு உள்ளன. மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில் இடம்பெற்றவைகளை விட மிக மிக அதிகமான முஸ்லிம் விரோத சம்பவங்கள் நல்லாட்சியில் இப்போது வரை இடம்பெற்று உள்ளன.

மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில் பொதுபலசேனா தோற்றம் பெற்றது. வேண்டிய வசதிகள், வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்கி ராஜபக்ஸ அரசாங்கம் பொதுபலசேனாவை ஆதரித்து அரவணைத்தது. ஆனால் அலரி மாளிகைக்கு வெளியில்தான் பொதுபலசேனா பிக்குகளை மஹிந்த ராஜபக்ஸ வைத்திருந்தார். ஆனால் தற்போதைய நல்லாட்சியில் ஜனாதிபதி மாளிகைக்கு பொதுபலசேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரர் குறைந்தது மூன்று தடவைகள் வருகை செய்து உள்ளார். இவரை சகல மரியாதைகளுடனும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ ஜனாதிபதியிடம் அழைத்து சென்று உள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் அங்கம் வகித்த சிங்கள பேரினவாத, பௌத்த பெருமதவாத அமைச்சர்கள் நல்லாட்சி அரசாங்கத்திலும் அங்கம் வகித்து கொண்டு பாரிய செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். அத்துடன் ஏனைய பேரினவாதிகளுக்கும், பெருமதவாதிகளும் அடைக்கலம் கொடுப்பதோடு அவர்களின் செயற்பாடுகளை அநியாயத்துக்கு நியாயப்படுத்தவும் செய்கின்றனர். என்னை பொறுத்த வரை நீதி அமைச்சராக செயற்பட விஜயதாஸ ராஜபக்ஸ எவ்வகையிலும் அருகதை அற்றவர்.

ஜனாதிபதி செயலகம் சிங்கள பேரினவாதிகளினதும், பௌத்த பெருமதவாதிகளினதும் குகையாக மாறி உள்ளது. ஜனாதிபதியின் செயலாளர்களில் ஒருவரான ஸ்ரீலால் லக்திலக என்பவர் அப்பட்டமான முஸ்லிம் விரோத செயற்பாட்டாளர். வில்பத்தில் உள்ள முஸ்லிம் குடியிருப்புகளை வனத்துக்குள் உள்வாங்குவதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அவசர வர்த்தமானி பிரகடனத்துக்கு பின்னால் உள்ள சூத்திரதாரியும் இவரே ஆவார். ஞானசார தேரரின் நிழலாகவும், நேச சக்தியாகவும் வெளிப்படையாகவே செயற்பட்டு வருகின்ற தூஷண விரோத பிக்கு இவருக்கும் மிக நெருக்கமான கூட்டாளி. இதனால் தூஷண விரோத பிக்கு ஜனாதிபதி செயலகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று வர முடிகின்றது. அத்துடன் இப்பிக்கு விகாரையில் செலவிடுகின்ற நேரத்தை விட மிக அதிகமான நேரத்தை ஜனாதிபதி செயலகத்திலேயே வழக்கமாக கழித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசிய இப்தார் விழா நடத்தப்படுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க நேர்ந்தது. அப்போது நான் அவரிடம் மௌலவி ஆசிரியர்கள் நியமனம், ஞானசார தேரர் கைது, தமிழ் ஆசிரியர்கள் நியமனம், சுனாமி வீட்டு திட்ட கையளிப்பு, காணிகள் விடுவிப்பு போன்ற விடயங்கள் சம்பந்தப்பட்ட பல அம்ச கோரிக்கைகளை கையளித்து இவற்றை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கின்ற பட்சத்தில் மாத்திரம் தேசிய இப்தார் விழாவில் பங்கேடுப்பேன் என்று கூறி இருந்தேன். ஆயினும் எனது கோரிக்கைகளை நிறைவேற்றி தர ஜனாதிபதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கண்டு கொண்டேன். இந்நிலையில் தேசிய இப்தார் விழாவுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் அமைச்சர் பைசர் முஸ்தபா என்னை தொடர்பு கொண்டு பேசியபோது நான் இவ்விழாவில் பங்கேற்க போவதில்லை என்பதை அவருக்கும் திட்டவட்டமாக தெரிவித்தேன்.

கேள்வி:- ஜனாதிபதியின் அண்மைய பங்காளதேஷ் விஜயத்தில் நீங்கள் பங்கேற்று உடன் சென்றது முன்னுக்கு பின் முரணான நிலைப்பாடாக பார்ர்க்கப்படுகின்றதே?

பதில்:- நான் ஜனாதிபதி நடத்திய தேசிய இப்தார் விழாவில் இதயபூர்வமாக பங்கேற்று இருக்கவில்லை என்பதை கண்டு கொண்ட இஸ்லாமிய சமய பெரியார்கள் என்னை சந்தித்து பேசினார்கள். ஜனாதிபதியின் உத்தரவாதத்தை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் தணிந்து செல்வதை அண்மைய தினங்களாக அவதானிக்க முடிகின்றது என்று மனப்பூர்வமாக சொன்னார்கள். மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பள்ளிவாசல்களில் குனுத் ஓதப்பட்டதை போல மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர குனுத் ஓதப்பட வேண்டிய அவசரம் இப்போதைக்கு இல்லை என்றும் கூறினார்கள். நான் தற்போதைய வன்முறையற்ற சூழலில் முஸ்லிம் சமுதாயத்தின். நன்மையை முன்னிறுத்தி ஜனாதிபதியுடன் மென்மை போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரினார்கள்.

இதே நேரம் ஜனாதிபதியிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. என்னால் முன்வைக்கப்பட்ட பல அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வார் என்று உறுதிமொழி வழங்கினார். அத்துடன் பங்காளதேஷ் நாட்டுக்கான அவரின் விஜயத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதியாக நான் அவருடன் வர வேண்டும் என்று கோரினார். வேறு முஸ்லிம் பிரதிநிதிகளை அழைத்து செல்கின்ற எண்ணம் அவருக்கு இருந்து இருக்கவில்லை. தண்ணீரை கோபித்து கொண்டு ஏதோ செய்யாமல் இருக்க கூடாது என்று கிராமங்களில் சொல்வார்கள்.

எனவே அவருடன் உடன் செல்கின்ற தீர்மானத்தை நான் எடுத்தேன். மேலும் இவ்விஜயத்தில் அவருடன் மிக நெருக்கமாக உரையாடுவதற்கு அடிக்கடி கிடைத்த சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் அடங்கலாக சிறுபான்மை சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள், நல்லாட்சி அரசாங்கத்தின் குறைபாடுகள் ஆகியவற்றை எடுத்து கூறி கொண்டே இருந்தேன். அவரும் மிகுந்த அக்கறையுடன் செவிமடுத்தார். இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது என்னுடைய நேரடியான தலையீடு, அழுத்தம் காரணமாக பௌத்த சமயத்தை மாத்திரம் மேன்மைப்படுத்துகின்ற செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட்டது. மொத்தத்தில் நான் எனது தனித்துவத்தை பேணி கொண்டே ஜனாதிபதியுடன் உடன் சென்றிருந்தேன் என்பதில் எந்தவொரு மாற்றமும் கிடையாது.

கேள்வி:- ஞானசார தேரர் மீது எடுக்கப்பட்ட பொலிஸ் நடவடிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- விசேட தனி குழுக்களை அமைத்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸ் தரப்பினரால் நீதிமன்றத்தில் அவராக சரண் அடைகின்ற வரை அவரை கண்டு பிடிக்கவோ, கைது செய்யவோ முடியவில்லை என்பது இந்நாட்டில் சட்டம், ஒழுங்கு ஆகியவற்றின் அமுலாக்கம் ஒழுங்காக இல்லை என்பதையே வெளிக்காட்டி நிற்கின்றது.

பிக்கு ஒருவரை கைது செய்வது இலேசான காரியம் அல்ல என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பிற்பாடு தெரிவித்த கருத்து அப்பட்டமான பொய்யும், நூறு சதவீத ஏமாற்று வித்தையுமே ஆகும். ஏனென்றால் இந்நாட்டின் பிரதமராக இருந்த எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கவை சுட்டு கொன்ற பிக்கு கைது செய்யப்பட்டு தூக்கில் போடப்பட்டார். அதே சம்பவத்துடன் தொடர்புபட்டு கைதான மற்ற பிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டார். ஏராளமான பிக்குகள் போதை பொருள் கடத்தல், கற்பழிப்பு, காசோலை மோசடி, காணி மோசடி போன்ற இன்னோரன்ன குற்ற செயல்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் போடப்பட்டு உள்ளனர். ஆனால் இன விரோத நடவடிக்கைகளில் திட்டமிட்ட வகையில் ஈடுபட்ட ஞானசார தேரரைத்தான் பொலிஸாரால் கைது செய்ய முடியாமல் நேர்ந்து விட்டது.

கேள்வி:- நீங்கள் பரபரப்பான அரசியல்வாதிகளில் ஒருவர்தான். ஆயினும் உங்களுடைய தேசிய ஐக்கிய முன்னணியால் அரசியலில் இன்னமும் பெரிதாக ஒன்றையும் சாதிக்க முடியவில்லையே?
பதில்:- அவ்வாறு நீங்கள் அவசரப்பட்டு சொல்ல முடியாது. இப்போதுதான் தேசிய ஐக்கிய முன்னணிக்கு தேர்தல்கள் திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைக்க பெற்று உள்ளது. தேசிய ஐக்கிய முன்னணியின் சூறாவளி பாய்ச்சல்களை இனிமேல் நீங்களும் கண்டு கொள்வீர்கள்.

எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தல் அடங்கலாக இடம்பெற உள்ள தேர்தல்கள் அனைத்திலும் தேசிய ஐக்கிய முன்னணி அதன் தனித்துவத்தை தொடர்ந்தும் பேணியபடி போட்டியிடும். குறிப்பாக எமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் எவரும் எதிர்பார்த்து இருக்க முடியாத அதிரடிகளாக இருக்கும்.
தேசிய ஐக்கிய முன்னணி மிக மத்தான ஒரு சாதனையை புரிந்து இருப்பது உங்கள் கவனத்தை ஈர்த்து இருக்கவில்லை என்று நான் நினைக்கின்றேன். தேர்தல் திணைக்களம் புதிதாக அரசியல் கட்சிகளை இப்போது பதிவு செய்து உள்ளது என்றால் அதற்கு தேசிய ஐக்கிய முன்னணி சார்பாக நான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான உயர் நீதிமன்றத்தின் தலையீடே காரணம் ஆகும்.

கேள்வி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தேசிய ஐக்கிய முன்னணி சார்பாக நீங்கள் கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தீர்களே?
பதில்:- நான் ராஜபக்ஸக்களின் அன்றைய கொடுங்கோல் ஆட்சியை வெளிப்படையாக மிக கடுமையாக எதிர்த்து வந்த சூழலில் என்னை அத்தேர்தலில் தோற்கடித்தே ஆக வேண்டும் என்பதில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூர்க்கத்தனமாக காணப்பட்டார். அதற்காக நஸீர் அஹமட், பிள்ளையான், கருணா ஆகியோரை தயார்ப்படுத்தி வைத்திருந்தார்.

நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக நின்றிருந்தபோதிலும்கூட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்காக அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடைசி 11 நாட்கள் மாத்திரமே பிரசாரங்கள் மேற்கொண்டேன். இருப்பினும் மட்டக்களப்பு மக்களின் அமோக ஆதரவு எனக்கேதான் இருந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பின் அகால மரணத்தை தொடர்ந்து திடீர் கோடீஸ்வரன் ஆனவர்தான் நஸீர் அஹமட். தாருஸ்ஸலாம் காணியை சொந்த பெயருக்கு இவர் எழுதி மோசடி செய்ததாக வழக்கு ஒன்று இப்போது இடம்பெற்று வருகின்றது.

எனக்கு பின்னால் மட்டக்களப்பு மக்கள் திரண்டு நின்றது இவர் உட்பட என்னை தோற்கடிக்க கங்கணம் கட்டி இருந்த அற்பர்களை அதிர்ச்சி பயத்தில் உறைய வைத்தது. அதனால் அத்தேர்தலில் என்னை விட அதிக விருப்பு வாக்குகளை இவர் பெற வேண்டும் என்பதற்காக பல கோடி ரூபாய் ரொக்க பணத்தை விட்டெறிந்து நயவஞ்சகமாக வாக்காளர்களை விலைக்கு வாங்கினார். இருப்பினும் இவருக்கு 11,401 வாக்குகள் மாத்திரமே விழுந்தன. நான் மிக இலகுவாக 6436 விருப்பு வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் முன்னிலை வகித்தேன். மாகாண சபையில் நஸீர் அஹமட்டுடைய உறுப்புரிமைக்கு ஏதேனும் வகையில் வெற்றிடம் நேர்கின்றபோது நானே உறுப்பினராக நியமனம் பெறுவேன்.

கேள்வி:- ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உங்களை தேசிய பட்டியல் விவகாரத்தில் நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார் என்று சொல்லப்படுகின்றதே?
பதில்:- நான் கடந்த பொது தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் ரவூப் ஹக்கீம், எம். எச். அப்துல் ஹலீம், லக்‌ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து நான் கண்டியில் தேர்தல் கேட்கின்ற பட்சத்தில் அவர்கள் பின்தங்கி விடுவார்கள் என்று சொல்லி குழறி இருக்கின்றனர்.

இதனால் என்னை தேர்தலில் போட்டியிட வைக்காமல் தேசிய பட்டியல் எம். பியாக நியமிக்க ரணில் விக்கிரமசிங்க இறுதி நேரத்தில் தீர்மானம் எடுத்து அதற்கான வாக்குறுதியை எனக்கு வழங்கினார். இந்நிலையில் நான் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்காக நாடளாவிய ரீதியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி சிறுபான்மை முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்று கொடுத்தேன். ஆனால் அவர் எனக்கு வாக்குறுதி வழங்கி இருந்தபடி தேசிய பட்டியல் நியமனம் வழங்கவில்லை.

இனி மேல் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு என்கிற பேச்சுக்கே இடம் கிடையாது. அதே போல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் தேசிய ஐக்கிய முன்னணி இனி மேல் கூட்டு வைத்து கொள்ளாது. வரும் காலத்தில் இவர்களுக்கு சரியான பாடங்கள் கற்பித்து கொடுக்கப்படும்.

கேள்வி:- தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் பொறுப்பை ஏற்று செயற்படுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலியை நீங்கள் கோரி இருப்பதாக கதைகள் அடிபடுகின்றனவே?

பதில்:- இப்போது அல்ல ஆரம்பத்தில் இருந்தே ஹசன் அலிக்கு இக்கோரிக்கையை நான் விடுத்து வருகின்றேன். ஆனால் இப்போதுதான் அதை கவனத்தில் கொள்ளவும், அதை பற்றி கதைக்கவும் அவருக்கு நேரம் கிடைத்து இருக்க வேண்டும். இது குறித்து பரஸ்பரம் தொடர்ந்து பேசி நல்ல முடிவு எடுப்போம்.

கேள்வி:- சிறுபான்மை மக்களின் குரலாக ஒலிக்கின்ற நீங்கள் அரசியலில் உயர் பதவிகளை அடைந்த பிற்பாடு மற்றவர்களை போல மௌனியாக மாற மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

பதில்:- பதவிகளுக்கு பின்னால் போன வரலாறோ, பதவிகளுக்காக எவருக்கும் பின்னால் போன வரலாறோ அசாத் சாலிக்கு கிடையாது. பதவிகள் எனக்கு பின்னால்தான் வர வேண்டும். பதவிகளை துச்சமென மதித்து மக்களுக்காக துறந்த வரலாறும் எனக்கே உள்ளது. மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் இடம்பெற்றபோது அதற்கு ஆட்சேபனை தெரிவித்து நான் கொழும்பு மாநகர சபை பிரதி மேயர் பதவியை இராஜினாமா செய்தேன்.

கடந்த பொது தேர்தலில் என்னை நம்பி ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்த சிறுபான்மை மக்களுக்கு என் மூலமாக வழங்கப்பட வேண்டிய தேசிய பட்டியல் பிரதிநிதித்துவத்தை வழங்காமல் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ஏமாற்றியதை ஆட்சேபித்தே எனது மத்திய மாகாண சபை உறுப்பினர் பதவியை துறந்து உள்ளேன். நீங்கள் கேட்ட கேள்வியை எனது அந்த நாள் நண்பர் இந்த நாள் அமைச்சர் மனோ கணேசனுடன் நான் தொடர்புபடுத்தி பார்க்கின்றேன். அமைச்சரான பிற்பாடு அவர் குரல் அற்று போய் விட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team