அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை - முழுமையான தீர்வு கிடைக்கவில்லை! - Sri Lanka Muslim

அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை – முழுமையான தீர்வு கிடைக்கவில்லை!

Contributors

அதிபர், ஆசிரியர்கள் முன்னெடுத்த தொடர்ச்சியான போராட்டத்தின் பின் நீண்ட நாள் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ள போதிலும் முழுமையான தீர்வு இதுவரை கிடைக்கவில்லையென, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் அம்பாறை மாவட்ட மாநாடு, சாய்ந்தமருது – மாளிகைக்காடு வாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (24) நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “முழுமையான சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கு ஆசிரியர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். நாம் வெற்றிகொள்ள பல்வேறு சவால்கள் உள்ளன.

“எமது சம்பள உயர்வில் மிகுதியை நாம் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக மீண்டும் நாம் போராடுவதற்குத் தயாராக வேண்டும். சம்பள ஆணைக்குழுவிடம் இது தொடர்பாக நாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். சம்பள உயர்வை உடனடியாக வழங்குவதற்கான தீர்வை வழங்க வேண்டுமென அவர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.

“ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு தரம் உயர்த்தப்பட்டவர்களுக்கு பாரிய சம்பள முரண்பாடு காணப்படுகின்றது. இதனை 06 மாதங்களுக்குள் தீர்த்து வைப்பதாக அமைச்சரவை உப குழுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை இப்பிரச்சினை தீர்த்து வைக்கப்படவில்லை. நாட்டில் ஆசிரியர் உட்பட அரச ஊழியர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.

“எதிர்காலத்தில் இலங்கை ஆசிரியர்கள் சேவை சங்கம் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எல்லோரும் ஒன்று சேர வேண்டுமென அறைகூவல் விடுக்கின்றேன்.

“ஜனநாய ரீதியாக மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்ற போது அதை அடக்குவதற்கு அரசு செயற்படுவது கண்டத்திற்குரியதாகும். நாட்டில் சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டுமென்றால் நாம் எல்லோரும் ஒற்றுமையாக போராடி சகல இன மக்களும் ஒற்றுமையாக வழக் கூடிய நாட்டை உருவாக்குதற்கு நாம் எல்லோரும் முன்வர வேண்டும்” என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team