அனந்தி சசிதரனின் நேர்காணல் - Sri Lanka Muslim
Contributors
author image

Farook Sihan - Journalist

நான் ஸ்திரமாகி அனந்தி சசிதரனுடைய அரசியல் இக் கட்சியில் ஸ்திரமடைகின்ற போது நாங்கள் மக்கள் மத்தியில் செல்லாக் காசாக ஆகிவிடுவோம் அல்லது எங்களுடைய அரசியல் சூனியமாகி விடும் என்று நினைக்கின்ற ஒரு சில அரசியல் பிரமுகர்கள் என்னுடைய மக்கள் மீதான அரசியல் பயணத்தை மழுங்கடிக்கும் நோக்கில் என்னை இப் பயணத்திலிருந்து தூரமாக்கும் நோக்கில் ஒரு சில காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசியல்வாதிகளின் செயலாகவே என்னைத் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்க எடுத்துள்ள முடிவை நான் கருதுகின்றேன் எனத் தெரிவித்துள்ள வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் என்னைப் பொறுத்தமட்டில் எந்தக் கட்சி என்னை வெளியேற்றுகின்றதோ அல்லது என்னை உள்வாங்குகின்றது என்பது எனக்கு முக்கியமானது அல்ல. மக்களுக்காகத்தான் அனந்தியே தவிர கட்சிக்காக அனந்தி அல்ல என்பதில் மிகத் தெளிவாகவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து அனந்திசசிதரனை நீக்குவதென எடுத்துள்ள முடிவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் வழங்கியுள்ள விசேட செவ்வியின் முழுமையான வடிவம் வருமாறு,

கேள்வி:– அண்மையில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் உங்களை நீக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு குறித்து உங்களின் நிலைப்பாடென்ன? இது குறித்து எழுத்துமூலமான கடிதம் உங்களுக்கு கிடைத்துவிட்டதா?

பதில்:- உண்மையில் ஏனைய அரசியல் வசதிகளைப் போன்று குடும்ப அரசியல்பின்னணி மற்றும் பணவர்க்க குடும்பப்பின்னணியை கொண்ட மக்கள் பிரதிநிதி அல்ல என்பதை முதலில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கடந்த கால யுத்த சூழ்நிலையிலும், யுத்தத்திற்கான பின்னரான சூழ்நிலையிலும் எனது கணவரையும் பல போராளிகளையும் இராணுவத்திடம் கையளித்த சூழ்நிலையிலும் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களது சூழ்நிலையிலும் மக்களுடன் மக்களாக காணாமல் ஆக்கப்பபட்டவர்களுடைய விடயங்களை அவ்வப்போது காணாமல் ஆக்கப்பட்டவர்ளுடைய ஓர் சகோதரியாக, தாயாக அரச சேவையிலிருந்து கொண்டு பல இன்னல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் காணாமல் ஆக்கப்பட்டோரது விடயம் தொடர்பாகத் தேசியத்திலும் சர்வதேசத்திலும் பல அழுத்தங்களைக் கொடுத்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சகோதரியாக, தாயாக தொழிற்பட்டுக் கொண்டிருந்த போது தமிழரசுக் கட்சியின் தலைமையின் விடாப்பிடியான முயற்சியினாலும், அழுத்தத்தினாலும், மக்களின் வேண்டுகோளிலும் கடந்த மாகாண சபைத் தேர்தலில் துரதிஸ்ட வசமாக கட்சியின் ஓர் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருந்தேன்.

எனது கடந்த கால நடவடிக்கையில் உண்மையும், நம்பிக்கையும் இருந்தமையினால் யாழ்மாவட்டத்தில் 87, 212 வாக்குகளைப் பெற்று யாழ்.மாவட்டத்தின் இரண்டாவது விருப்பு வாக்குகளைப் பெற்ற அந்தஸ்தைப் பெற்று மக்களின் துயரங்களைத் துடைக்க மக்கள் பிரதிநிதியாக்கப்பட்டேன்.

என்னைப் பொறுத்த மட்டில் ஏற்கனவே கூறியது போன்று நான் குடும்ப அரசியல் பின்புலத்தைச் சேர்ந்தவள் அல்ல. அதே போன்று நான் பணவசதி படைத்தவளும் அல்ல. என்னைப் பொறுத்தமட்டில் அன்றும் இன்றும், என்றும் நான் மக்களுடன் மக்களாக வாழ்வதனாலும் மக்களின் துயரங்களில் பங்கெடுப்பதனாலும் கடந்த மாகாண சபைத் தேர்தலில் எனக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் அனைத்தும் என் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், எனது கௌரவத்திற்கும் கிடைத்த வாக்குகளே தவிர கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் அல்ல என்பதைத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்தமட்டில் எந்தக் கட்சி என்னை வெளியேற்றுகின்றதோ அல்லது என்னை உள்வாங்குகின்றது என்பது எனக்கு முக்கியமானது அல்ல. மக்களுக்காகத்தான் அனந்தியே தவிர கட்சிக்காக அனந்தி அல்ல என்பதில் மிகத் தெளிவாக உள்ளேன்.

கடந்த 24.02.2018 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியினுடைய மத்திய குழுக் கூட்டத்தில் என்னை கட்சியிலிருந்து வெளியேற்றியது தொடர்பாகப் பல ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பிரசுரித்ததாக அறிகிறேன். ஆனால் இவ் வார மஞ்சரியின் செவ்வி தரும் வரையில் எழுத்து மூலமாக எனக்கு அறிவிக்கப்படவில்லை.

கேள்வி:- கடந்த-2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதென இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்த தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே உங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கலாம் எனக் கருதுகின்றீர்களா?

பதில்:- கருத்துக் சுதந்திரத்தின் அடிப்படையிலும், பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்ற வகையிலும் எனக்கு வாக்களித்த மக்களுடைய ஆலோசனையின் பேரிலும் மிக நாகரிகமான முறையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியையோ அல்லது மகிந்தவையோ ஆதரிப்பது தொடர்பாக 14.12. 2014 அன்று நடைபெற்ற தழிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் முடிவு எட்டப்படாத காரணத்தினாலும், கடந்த கால ஆட்சியாளரினால் ஈழத்தமிழருக்கு இழைக்கப்பட்ட வரலாற்று ரீதியான ஏமாற்றத்தையும், துரோகத்தையும், அதே போன்று கடந்த ஆட்சியாளரின் அமைச்சரவையில் இருந்த பொது வேட்பாளர் இருவரையும் மனச்சாட்சிக்கு விரோதமாக ஆதரிக்க முடியாது என பத்திரிகையாளர் மாநாடு நடாத்திக் கூறியிருந்தேன்.

ஆனால், 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 2015.01.11 ஆம் திகதியிடப்பட்டு கட்சியினுடைய பொதுச்செயலாளரினால் கையொப்பமிடப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை என தலைப்பிடப்பட்டு நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரிப்பது எனவும், இதற்குக் கட்சி உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் என்ற தீர்மானங்களுக்கு எதிராக பத்திரிகை மாநாடு நடாத்தியமையினாலும், பிரசாரம் செய்தமையாலும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்புரிமை, கட்சியின் உறுப்புரிமை ஆகியவற்றிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளீர் எனக் கூறப்பட்டது.

இது இவ்வாறிருக்க கடந்த 14.08.2016 அன்று நடைபெற்ற இலங்கை தழிரசுக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில எனக்கு எதிரான ஒழுக்காற்று விசாரனைக் குழுவின் அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு கட்சியின் உறுப்புரிமை மீதான இடைநிறுத்தத்தை நீக்குவதாகவும்; அவ் நீக்குதல் என்பது 10.10.2016 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது என்றும் 2016.10.10 திகதியிடப்பட்ட இலங்கை தழிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் அவர்களினால் கையொப்பமிடப்பட்டு எனக்கு அறிவிக்கப்பட்டது.

ஆகவே, இதிலிருந்து விளங்கிக் கொள்ளக் கூடியதாவது ஒழுக்காற்று நடவடிக்கை முடிவுறுத்தப்பட்டு என் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானது என ஒழுக்காற்று விசாரணைக் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டு கடந்த மத்திய குழுக் கூட்டத்தில் கட்சியின் உறுப்புரிமை மீதான இடைநிறுத்தத்தை நீக்கியிருக்கும் இதே வேளை ஒரு சிலரால் என்னை கட்சியிலிருந்து ஒரம் கட்டிவிட்டு தங்களுடைய அரசியல் ஸ்தம்பிதத்தை பலப்படுத்துவதற்காக நடாத்தப்படுகின்ற சூட்சுமமான ஓர் அரசியல் பழி வாங்கல் என்றே நான் கருதுகிறேன்.

இக் கட்சியில் நான் ஸ்திரமாகி அனந்தி சசிதரனுடைய அரசியல் இக் கட்சியில் ஸ்திரமடைகின்ற போது நாங்கள் மக்கள் மத்தியில் செல்லாக் காசாக ஆகிவிடுவோம் அல்லது எங்களுடைய அரசியல் சூனியமாகி விடும் என்று நினைக்கின்ற ஒரு சில அரசியல் பிரமுகர்கள் என்னுடைய மக்கள் மீதான அரசியல் பயணத்தை மழுங்கடிக்கும் நோக்கில் என்னை இப் பயணத்திலிருந்து தூரமாக்கும் நோக்கில் ஒரு சில காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசியல் வாதிகளால் நடாத்தப்படுகின்ற ஒரு செயலாகவே நான் இதனைக் கருதுகின்றேன்.

கேள்வி:- இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து உங்களை நீக்குவதென முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

பதில்:- நான் மக்களுக்காகவே மக்களால் எனும் கோட்பாட்டில் மக்களினுடைய பிரதிநிதியாக மக்களுக்காக அரசியல் எனும் கலாசாரத்தை கொண்டவள். ஏற்கனவே நான் கூறியது போன்று அனந்தி மக்களுக்காகவே அன்றி கட்சிக்காக அல்ல. இந்த மாவட்டத்தில் 87, 212 வாக்குகளை அளித்த மக்களுடைய மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனது எதிர்கால அரசியல் நகர்வு எனது மக்களுடன் ஒன்றிப் பிணைந்து செல்லுமே தவிர இந்த அரசியலுக்காக மக்களை உதாசீனம் செய்து விட்டு அரசியல் செய்ய வேண்டிய தேவை எனக்குக் கிடையாது.

Web Design by Srilanka Muslims Web Team