‘அனைத்தின மக்களையும் சமமாக அங்கீகரிக்கும் சட்டக் கட்டமைப்பை ஏற்படுத்துங்கள்’  - Sri Lanka Muslim

‘அனைத்தின மக்களையும் சமமாக அங்கீகரிக்கும் சட்டக் கட்டமைப்பை ஏற்படுத்துங்கள்’ 

Contributors

அனைத்து இன மக்களையும் சமமாக ஏற்றுக்கொண்டு அங்கீகாரமளிக்கும் சட்டக் கட்டமைப்பின் தேவை அத்தியாவசியமாகியுள்ளது என்று, “ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு (29) வருகை தந்திருந்த “ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதிச் செயலணியிடம், தமது கருத்துக்களை முன்வைத்துப் பேசிய சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த அறக்கட்டளையின் பிரதிப் பணிப்பாளர் ஜே.தியாகராஜா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு பலமுறை திருத்தப்பட்டது. அதன் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அனைவரையும் சமமாக நடத்தும் வகையிலான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் தியாகராஜா அவர்கள் வலியுறுத்தினார்.

இந்நாட்டின் பல்வேறு இனங்கள் தனித்துவமான சட்ட முறைமைகளைக் கொண்டிருந்தாலும், அந்தச் சட்ட முறைமைகள் எவற்றாலும் ஆதரிக்கப்படாத சலுகைகள் குறைந்த மக்களாகத் தங்கள் மக்கள் காணப்படுகின்றனர் என்றும் தியாகராஜா அவர்கள் எடுத்துரைத்தார்.

முன்னைய அரசர் காலத்தில், இலங்கைக்கே உரித்தான சட்ட முறைமையொன்று நடைமுறையில் இருந்ததை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன என்றும் புதிய சட்ட முறைமையொன்றை உருவாக்குவதற்கு அது அடிப்படையாக அமையும் என்றும், தியாகராஜா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசகரும மொழிச் சட்டம், தோட்டத் தொழிலாளர்களின் கல்வித் தரத்தைச் சீரழித்ததுடன், அவர்களை பொருளாதார ரீதியாகவும் பாதிப்படையச் செய்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் ஷாந்தி நந்தன விஜேசிங்க, சிரேஷ்ட விரிவுரையாளர் சுமேத வீரவர்தன, சட்டத்தரணி சஞ்சய மாரம்பே மற்றும் பானி வேவல ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team