அன்று இந்தியாவும் இலங்கையும்; இன்று ரஷ்யாவும் உக்ரேனும்! - Sri Lanka Muslim

அன்று இந்தியாவும் இலங்கையும்; இன்று ரஷ்யாவும் உக்ரேனும்!

Contributors

ரஷ்யப் படைகள், பெப்ரவரி 24ஆம் திகதி அந்நாட்டுக்கு மேற்கேயுள்ள உக்ரேன் மீது படையெடுத்தது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அந்தப் படையெடுப்பை ஆக்கிரமிப்பாகக் குறிப்பிடவில்லை. ‘இராணுவ நடவடிக்கை’ என்றே குறிப்பிட்டார்.

இந்த ஆக்கிரமிப்பானது, திடீரென இடம்பெறவில்லை. அதேபோல், அதற்கான காரணமும் புதியதல்ல! ரஷ்யா, உக்ரேனை ஆக்கிரமிக்கும் என்ற அச்சம், 2014ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தது. கடந்த இரண்டொரு மாதங்களாக, அந்த ஆக்கிரமிப்பு நெருங்கிவிட்டது என்பதும் அனுமானிக்கப்பட்டு இருந்தது. ரஷ்யா தமது படைகளை, உக்ரேன் எல்லையில் குவித்து வந்தமையே அதற்குக் காரணமாகும்.

பொதுவாக ஆக்கிரமிப்புக்குக் காரணம், மேற்குலகுக்கும் சோஷலிஸ நாடுகளுக்கும் இடையில் பனிப்போர் நிலவிய காலத்திருந்தே தொடரும் பிணக்கொன்று, உக்ரேன் ஊடாக இப்போது வெளிக்கொணரப்பட்டுள்ளது.

அதாவது, மேற்குலக நாடுகளுக்கும் உக்ரேனுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவு, தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ரஷ்யா கருதுகிறது. எனவேதான் ரஷ்யா, உக்ரேனை மிரட்டி வருகிறது.

ரஷ்ய எல்லை அருகே, கிழக்கு உக்ரேனில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய ரஷ்ய மொழிகள் பேசும் மக்கள், இரண்டு பிரதேசங்களில் வாழ்கிறார்கள். இந்த இரண்டு பிரதேசங்களையும் கொண்ட பிராந்தியம், டொன்பாஸ் என்று அழைக்கப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக, இந்த இரண்டு பிரதேசங்களிலும் பிரிவினைவாத போராட்டமொன்று இடம்பெற்று வருகிறது. பிரிவினைவாதிகள், அண்மைக் காலமாக இந்தப் பிரதேசங்களை, டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு என்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு என்றும் அழைத்து வருகின்றனர்.

ரஷ்யா, இந்தப் போராட்டத்துக்கு உதவி வருகிறது. தமது படைகளை உக்ரேன் எல்லையில் குவித்து சில வாரங்களில் (கடந்த 21 ஆம் திகதி), ரஷ்ய ஜனாதிபதி புட்டின், டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க்  ஆகியவற்றை சுதந்திர பிரதேசங்களாக அங்கிகரித்தார்.
ரஷ்யா, உக்ரேன் மீது படையெடுப்பை ஆரம்பிக்கப் போகிறது என்பது, இதன் மூலம் தெளிவாகியது. ஏனெனில், “நாம், உக்ரேனுக்கு படைகளை அனுப்பவில்லை; ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழும் இரு சுதந்திர பிரதேசங்களுக்கே, படைகளை அனுப்பினேன்” என்று வாதிட, அதன்மூலம் புட்டினுக்கு முடிகிறது.

இந்தச் சுதந்திர பிரகடனத்தோடு, அப்பிரதேசங்களில் சமாதானத்தை நிலைநாட்டவென, புட்டின் தமது படைகளை அங்கு அனுப்பிவைத்தார். இந்த இராணுவ நடவடிக்கைகள், டொன்பாஸ் பிராந்தியத்தில் மட்டும் இடம்பெறவில்லை. உக்ரேனின் பல பிரதான நகரங்கள், ஒரே நேரத்தில் தாக்கப்பட்டன.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா, இலங்கை விடயத்தில் எடுத்த சில நடவடிக்கைளை நினைவூட்டுகிறது. இந்தியாவின் அந்த நடவடிக்கைகள், இலங்கையின் இனப்பிரச்சினை மீதும் இலங்கையின் அரசியல் மீதும் இலங்கை மக்கள் மீதும் குறிப்பாக, தமிழ் மக்கள் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அன்றைய கதையும், ஒரு சிறிய நாடு, பெரியதோர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் வகையில் நடந்து கொண்டமையும், பெரிய நாடு சிறிய நாட்டின் சிறுபான்மை மக்களின் நலனைக் காட்டி, சிறிய நாட்டை, தமது படை பலத்தைக் கொண்டு, தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையும், உள்ளடக்கியதாக அமைந்தது. இன்றைய கதையும் அவ்வாறே அமைந்துள்ளது.

வல்லரசுகளின் பனிப்போர் காலத்திலும், அமெரிக்காவும் ரஷ்யாவுமே இரு முனைகளிலும் தலைமை தாங்கின. அப்போது ரஷ்யா தலைமையிலான சோஷலிஸ குழுவில், இந்தியா சேர்ந்து இருந்தது. இலங்கையில் சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கங்களும் சோஷலிஸ குழுவையே ஆதரித்தன.

ஆனால், 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜயவர்தன, மேற்குலக நாடுகளுக்கு ஆதரவான வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்றியதுடன் மேற்குலக நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளையும் ஏற்றார்.

போதாக்குறைக்கு அவர், அமெரிக்காவின் மிக முக்கிய நண்பனான இஸ்‌ரேலுடனும் உறவை ஆரம்பித்தார். அது, பூரண இராஜதந்திர உறவாகாத போதிலும் இலங்கையில், இஸ்‌ரேலின் நலன்களைப் பாதுகாக்கக் கூடியதாக இருந்தது.

இந்திய அரசாங்கம், ஜயவர்தனவின் இந்த அமெரிக்க சார்பு கொள்கையை, தமக்கு எதிரான கொள்கையாகவே பார்த்தது. அமெரிக்காவை ஆதரிக்கும் பாகிஸ்தானும் வங்காளதேசமும், நாட்டின் இரண்டு புறத்தில் இருக்க, இலங்கையும் அமெரிக்காவை ஆதரிப்பதால், தமது நாடு முற்றுகை இடப்பட்டுள்ளதாகவே இந்திய பிரதமர் இந்திரா காந்தி கருதினார். எனவே, தமது பாதுகாப்போடு விளையாடும் இலங்கைக்கு, நல்லதோர் பாடத்தை புகட்ட வேண்டும் என அவர் நினைத்தார்.

அதற்குப் பொருத்தமானதொரு சூழ்நிலை, இலங்கையில் அப்போது வளர்ந்து வருவதை, அவரது வெளிநாட்டு அலுவல்கள் தொடர்பான ஆலோசகர்கள் அவதானித்தனர். இலங்கையின் இனப்பிரச்சினை, அப்போது முக்கியமானதொரு கட்டத்தை அடைந்திருந்தது.

அதாவது, வடபகுதி தமிழ் தலைவர்கள், 1976ஆம் ஆண்டு தனித் தமிழ் நாட்டுக்கான ‘வட்டுக்கோட்டை பிரேரணை’யை நிறைவேற்றி இருந்தனர். அத்தோடு, தனித் தமிழ் நாடொன்றுக்காக, தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி இருந்தனர். இலங்கையின் ஆயுதப் படையினருக்கும் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தமிழ் நாட்டுக்குச் அகதிகளாகச் சென்றிருந்தனர்.

எனவே, இந்த அகதிகள் பிரச்சினையை முன்வைத்து, இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா கைவைத்தது. ஒருபுறம் கோபாலஸ்வாமி, பாரத்தசாரதி, ரொமேஷ் பண்டாரி போன்ற வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரிகள் மூலம், அதிகார பரவலாக்கல் திட்டமொன்றை அமலாக்க, இலங்கையை வற்புறுத்தும் அதேவேளை, தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதம், பணம், ஆயுதப் பயிற்சி ஆகியவற்றை வழங்கி, வட பகுதிப் போரை இந்தியா உக்கிரமடையச் செய்தது.

ஒரு கட்டத்தில் இந்தியா, தமது படைகளை அனுப்பியும் இலங்கையை மிரட்டியது. அதாவது, 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் திகதி, இலங்கையின் வட பகுதிக்கு உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, 19 இந்திய கப்பல்களும் அவற்றுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக சில கப்பல்களும் கச்சத்தீவு வரை வந்தன.

ஆனால், இலங்கை கடற்படையினர் அவற்றை வழிமறித்ததை அடுத்து, அவை திரும்பிச் சென்றன. ஆனால், மறுநாள் ஐந்து இந்திய விமானங்கள், இரண்டு மிராஜ் போர் விமானங்கள் யாழ்ப்பாணத்துக்கு மேலாகப் பறந்து, உணவுப் பொட்டலங்களை போட்டுவிட்டு திரும்பின.

இதன் மூலம், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உணவு வழங்குவதை விட, இலங்கை அரச தலைவர்களின் முகத்தில் அறைந்து, அவர்களை அச்சுறுத்துவதே, இந்திய தலைவர்களின் நோக்கமாகும்; அது நிறைவேறியது.

இலங்கை தலைவர்கள், அதிகார பரவலாக்கல் திட்டமொன்றை உடனடியாக அமலாக்க இணங்கினர். அதன் பிரகாரமே, 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதற்கு இணங்குமாறு, தமிழ் ஆயுதக் குழுக்களையும் இந்தியா வற்புறுத்தியது.

ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில், மேற்குலகுடன் தொடர்பு வைத்தமையே, இவ்வாறு தமது படை பலத்தைக் காட்டி, இலங்கை அரசாங்கத்தை அடிபணிய இந்தியா வைத்தது. அதற்காக இலங்கையின் தமிழ் மக்களின் பிரச்சினையைப் பாவித்தது.

1991ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதோடு, இந்தியாவின் நிலைப்பாடு மாறிவிட்டது. அதையடுத்து இந்தியா, அமெரிக்காவின் நெருங்கிய நண்பனாகியது. இந்திய பொருளாதார கொள்கையும் மேற்குலகுக்குப் பொருத்தமான முறையில் மாறியது. அதையடுத்து, இந்திய மத்திய அரசாங்கம் பெயரளவிலேயே இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசி வருகிறது.

இதேபோல், சோவியத் ஒன்றியம் கலைந்ததன் பின்னர், சோஷலிஸ நாடுகள் முதலாளித்துவ பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டன. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், பனிப்போர் காலத்தில் சோஷலிஸ நாடுகளை எதிர்கொள்வதற்காக உருவாக்கிய ‘நேட்டோ’ என்னும் இராணுவ கூட்டமைப்பை மேலும் பலப்படுத்தி வந்தன. அதற்காக, பல முன்னைய சோஷலிஸ நாடுகளையும் அக்கூட்டமைப்பில் சேர்த்துக் கொண்டன.

இது தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் எனக் கருதும் ரஷ்யா, தமது எல்லையில் உள்ள உக்ரேனை, ‘நேட்டோ’வில் சேர்ந்து கொள்ளக் கூடாது என்கிறது. உக்ரேன் என்பது இறையான்மையுள்ள நாடு என்பதால், அதற்கு இணங்க முடியாது என உக்ரேனும் மேற்கத்திய நாடுகளும் கூறுகின்றன. தற்போதைய போருக்கு, அதுவே மூல காரணமாகும். ஆனால், உக்ரேனில் வாழும் ரஷ்ய மொழி பேசும் சிறபான்மை மக்களைக் காட்டியே, உக்ரேனுக்குள் ரஷ்யா புகுந்தது.

அன்று, தமக்கு அச்சுறுத்தலாகும் வகையில் மேற்கத்திய நாடுகளோடு கூட்டு சேர்ந்த இலங்கையை மட்டுப்படுத்த, ஆயுத பலத்தை இந்தியா பாவித்தது. இன்று, மேற்கத்திய நாடுகளோடு இணைந்து, தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் வகையில் நடந்து கொள்ளும் உக்ரேனை மட்டுப்படுத்த, ரஷ்யாவும் ஆயுதப் பலத்தை பாவிக்கிறது.

எம்.எஸ்.எம். ஐயூப்

Web Design by Srilanka Muslims Web Team