'அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிக்கவுள்ளோம்' - கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு! - Sri Lanka Muslim

‘அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிக்கவுள்ளோம்’ – கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Contributors

கிழக்கில் ஆளணியின்படி சுமார் 24ஆயிரம் ஆசிரியர்கள் தேவை. தற்போது 20ஆயிரம் ஆசிரியர்கள் இருக்கின்றனர். சுமார் 4000ஆசிரியருக்கு தட்டுப்பாடு நிலவியது. எனினும் அண்மையில் 3ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். கிழக்கு பாடசாலைகளில் பணியாற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஆசிரியர்களாக நியமிக்கவுள்ளோம்.

இவ்வாறு, கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திசாநாயக தெரிவித்தார்.

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனை நடத்திய நூல் வெளியீட்டுவிழாவில் பிரதமஅதிதியாக கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திசாநாயக்கவும், கௌரவ அதிதியாக கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகமும் கலந்து சிறப்பித்தனர். அமைச்சுச் செயலாளர் அங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நூல் வெளியீட்டுவிழா சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில்(தேசிய பாடசாலை) நடைபெற்றது.

எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள பொதுப்பரீட்சைகளில் மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்கும் செயற்றிட்டத்தின் கீழ் இழந்த கல்வியை மீட்கும் கொவிட்19 விடுமுறைக்கான செயற்றிட்டமாக சம்மாந்துறை கல்வி வலயம் தயாரித்த தரம் 11க்கான விஞ்ஞானம் மற்றும் கணித நூல்கள் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் தரம்4 இற்கான கணிதம், தமிழ்மொழி, சுற்றாடல்சார் செயற்பாடுகளடங்கிய நூல் ஆகிய மூன்று சுயகற்றல் நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.

கூடவே இவ்வாண்டுக்கான வலய வருடாந்த அமுலாக்கத்திட்ட கைநூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

அங்கு கல்விச் செயலாளர் திசாநாயக்க மேலும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

“நீங்கள் அனைவரும் கல்விப்புலத்தில் செய்கின்ற சேவையை கடமையாக கருத முடியாது. அது ஓர் உன்னதமான சமூகசேவை ஆகும். ஒரு பாடசாலையைத் திறந்தால் ஆயிரம் சிறைச்சாலைகளை மூடி விடலாம் என்பார்கள். சுகாதாரத்திற்கு அடுத்தபடியாக கல்விக்கு பில்லியன் கணக்கில் செலவுசெய்கிறார்கள். நாம் நித்திரை செய்வதற்கு முன்னர் அன்றைய கடமையை ஒழுங்காகச் செய்தோமா? என்று ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும். சுயகேள்வியை எழுப்பவேண்டும்.கல்விக்காக செலவழிக்கும் பில்லியனுக்கு கைமாறாக நாம் என்ன உற்பத்தி செய்திருக்கிறோம். துரதிர்ஸ்டவசமாக கிழக்கு தொடர்ந்து 9வது இடத்தில் இருந்து வருகிறது. எமது பாரம்பரிய சிந்தனைகளை மனப்பாங்கை மாற்ற வேண்டும். புதிதுபுதிதாக சிந்திக்க வேண்டும். கல்வியில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வர அனைவரும் சிந்திக்க வேண்டும். திட்டங்கள் வகுத்து அதன்படி உழைக்க வேண்டும். பாடுபட வேண்டும். ‘அனைவருக்கும் கல்வி’ என்பது யுனிசெவ் தொடக்கம் பல நாடுகளுக்கும் பொதுவான வாசகமாகவுள்ளது.’ சிறந்த எதிர்காலத்திற்கான கல்வி’ என்பதே எனது வாசகம்.

எனது தாய் மாகாணமான கிழக்கு மாகாணம் இன்னும் 3வருடங்களில் 5வது இடத்தை அடைய வேண்டும் என்பதே எனது இலக்கு. அதற்காக இரவில் நீண்டநேரம் சிந்திக்கிறேன். நீங்கள் அனைவரும் சிந்தித்து ஒத்துழைக்க வேண்டும். தலைவர்கள் நீங்கள். மாணவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களை ஊக்குவிக்க வேண்டும். கிழக்கில் பல மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாதுள்ளனர். மேசன் தச்சு வேலை செய்கின்றனர்.அப்படிஎனின் எங்கோ ஒரு தவறு நடந்திருக்கிறது. இல்லையா? அதனை ஆராயவேண்டும்” என்றார்.

“இலங்கையில் கடந்த 2 மாதங்களாக பயங்கர நெருக்கடிநிலை கல்வியில் இருந்தது. அதாவது சம்பள முரண்பாட்டை முற்றாக நீக்கவேண்டி இடம்பெற்ற தொடர் போராட்டமே அந்த நெருக்கடிநிலைக்கு காரணம்.

தற்போது அரசாங்கத்தினால் அது தீர்வு காணப்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.அதிபர் ஆசிரியர்களுக்கு அது மகிழ்ச்சி.அது கட்டாயம் செய்யப்பட வேண்டும். எனவே இனி எந்தக் காரணமும் சொல்லித் தப்பிக்க முடியாது. நன்றாக படிப்பிக்கவேண்டும்.நல்ல பெறுபேற்றை உயற்பத்தி செய்யவேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

நூல்அறிமுகவுரைகளை ஆசிரியஆலோசகர்களான எம்.எம்.எம்.ஜௌபர், ரி.எல்.றைஸ்டீன் ஏ.ஜி.எம்.கிஷோர் ஆகியோர் நிகழ்த்தினர் . பின்னர் 3 நூல்களையும் பணிப்பாளர் நஜீம் அதிதிகளிடம் வழங்கி வைத்து வெளியிட்டு வைத்தார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திசாநாயக மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் ஆகியோர் பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் மூவின கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எ.எல்.எ.மஜீட் நன்றியுரையாற்றினார்.

Web Design by Srilanka Muslims Web Team