அமான் அஷ்ரப் சிறப்பு பேட்டி - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் பெருந்தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவருமான எம். எச். எம். அஷ்ரப்பின் ஏக புதல்வர் அமான் அஷ்ரப் ஆவார். இவர் வழங்கிய சிறப்பு பேட்டி வருமாறு:-

கேள்வி:- நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்கள்?

பதில்:- நான் தலைநகரத்தில் கடந்த 19 வருடங்களாக ஊடக விளம்பர துறையில் பணியாற்றி வருகின்றேன். 05 வருடங்களுக்கு முன்னர் அஷ்ரப் அசோசியேட்ஸ் என்கிற ஊடக விளம்பர நிறுவனத்தை நிறுவி நடத்துகின்றேன்.

கேள்வி:- இயற்கை அனர்த்தங்கள் நேர்கின்றபோது முன்னின்று நிவாரண பணிகளை மேற்கொள்கின்ற மனித நேய செயற்பாட்டாளராக உங்களுக்கு ஒரு முகம் உள்ளதே?

பதில்:- என்னை எனது பெற்றோர் வளர்த்த விதம் அப்படியானது. நான் ஒரு நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்பதுதான் அவர்கள் எனக்கு எப்போதும் போதித்த தாரக மந்திரம் ஆகும். அவர்களின் மகனை ஒரு படிப்பாளி என்றோ செல்வந்தன் என்றோ மற்றவர்கள் கூறுவதை காட்டிலும் நல்ல மனிதன் என்று கூறுவதையே அவர்கள் பெரிதும் விரும்பினார்கள். மனிதன் என்பதுதான் எனது அடையாளம். மனித நேயம்தான் எனது முகவரி.

உடம்பில் உறுப்புகள், இரத்தம், தசைகள் போன்றவை இருப்பதால் மாத்திரம் ஒருவன் மனிதனாக இருக்க முடியாது. அவனுடைய மனதில் மனிதம் குடியிருத்தல் வேண்டும். பால், நிறம், சாதி, சமயம், மொழி, இனம், தேசம் என்றெல்லாம் மனித நேயத்துக்கு மட்டுப்பாடுகள் கிடையாது. அதே போல மனித நேயத்துக்கு காரண காரிய தொடர்பு இருக்காது. அயலவராக இருந்தாலும் சரி, அதிக தொலைவில் எங்கோ ஒரு மூலையில் இருப்பவராக இருந்தாலும் சரி ஒருவருக்கு ஏதேனும் ஒரு அவலம் நேர்கின்றது என்று அறிகின்றபோது அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற உணர்வு இயல்பாகவே உங்களுக்கு ஏற்படாமல் விட்டால், உதவி செய்கின்ற வாய்ப்பு உங்களுக்கு இருந்தும் நீங்கள் உதறி தள்ளி விட்டு விலகி செல்வீர்களானால் நான் உங்களை மனிதனாக ஏற்று கொள்ளவே மாட்டேன்.

நாம் மற்றவர்களுக்கு செய்கின்ற உதவிகள் நம்மை பொறுத்த வரை சிறியவையாக இருக்கலாம், ஆனால் அவை உதவி பெறுகின்றவர்களுக்கு மிக பெரியவையாக இருக்க கூடும். பெற்றோர் என்னை நல்ல மனிதனாக வளர்த்தார்கள். ஆண்டவன் மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற வாய்ப்புகளை எனக்கு தந்து அருளி உள்ளான் தமிழன், சிங்களவன், முஸ்லிம் என்றெல்லாம் பார்த்து நான் உதவி செய்வதில்லை. மக்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கு உதவி செய்ய எனக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை இயலுமான அளவு மனதார பயன்படுத்தி கொள்கின்றேன்.

பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காகவோ, அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்பதற்காகவோ நான் இவற்றை செய்வதில்லை. மாறாக இவற்றை செய்வதால் எனக்கு அளவற்ற ஆத்ம திருப்தி கிடைக்க பெறுகின்றது. நான் மாத்திரம் அல்ல எனது நாட்டு மக்கள் அனைவருமே மற்றவர்களை வேதனைப்படுத்தாமல், ஆபத்தில் விழுத்தாமல், உதவி செய்து, நேசித்து வாழ வேண்டும் என்பது எனது பேரவா. ஆனால் இது பேசுவதற்குத்தான் இலகுவான விடயம், மற்றப்படி இவ்வாறு வாழ வேண்டும் என்று நினைப்பதே பெரிய விடயம் ஆகும்.

கேள்வி:- இன்று பல பல முஸ்லிம் கட்சிகள் உள்ளன. இவற்றால் சமூக விடுதலையை ஏற்படுத்தி கொடுக்க முடியும் என்று நம்புகின்றீர்களா?

பதில்:- இல்லை. நான் அப்படி நம்பவே இல்லை. எனது தந்தையார் எம். எச். எம். அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு சமூக விடுதலையை பெற்று கொடுத்து விட்டுத்தான் பின்பு மரித்து போனார். முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க கூடிய ஒரு கட்சி அவசியம் என்கிற நோக்கத்துக்காகவே 1981 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி வழி நடத்தினார்கள்..

ஆனால் இன்றைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்துனர்களுக்கு நோக்கம் ஒன்று இருப்பதாக தெரியவில்லை. அவர்களுடைய அரசியல் நோக்கம் குறித்து அவர்களுக்கே தெளிவில்லாமல் இருக்கின்றது. வேண்டும் என்று அவர்கள் நோக்கம் அற்ற பயணத்தை செய்பவர்களாகக்கூட இருக்க கூடும் அல்லது அவர்களுடைய பயணம் பற்றிய தெளிவு அவர்களிடம் இல்லாது இருத்தல் வேண்டும்.

தலைவர் அஷ்ரப்புக்கு பின்னரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நோக்கம் அற்ற பயணம் ஒன்றை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாலேயேதான் ஏனைய கட்சிகள் தோற்றம் பெற்றன. ஆனால் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேண்டும், முஸ்லிம் சமுதாயத்துக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதற்காகவேதான் அவை உருவாக்கப்பட்டன என்று நான் நம்பவில்லை. சில தலைவர்கள் உண்மையான எண்ணங்களையும் கொண்டிருக்க கூடும். ஆனால் அவர்களின் கட்சிகள் மூலமாக முஸ்லிம் சமுதாயத்துக்கு விடுதலை, விடியல், விமோசனம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனென்றால் சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் உண்மையாக நன்மைகளை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வருபவர்களை இன்று நிஜத்தில் காண முடியாமல் இருக்கின்றது, பதவி, அந்தஸ்து, அதிகாரம் ஆகியவற்றை அடைய வேண்டும் என்கிற சொந்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பவர்களையே காண முடிகின்றது.

கேள்வி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போக்கில் உங்களுக்கு பாரிய அதிருப்தி உள்ளதாக தெரிகின்றதே?

பதில்:- 2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு பின்னரான 24 மணித்தியாலங்களுக்குள்ளாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செல்ல போகின்ற பாதை எமக்கு நன்றாகவே விளங்கி விட்டது. நாம் கண்களால் கண்ட, காதுகளால் செவிமடுத்த, புத்தியால் விளங்கி கொண்ட விடயங்களும், சிலர் நடந்து கொண்ட விதங்களும் எமக்கு மிகுந்த வேதனையை கொடுத்தன. தந்தையார் மரணித்து 24 மணித்தியாலங்கள்கூட ஆகி இருக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பாக தீர்மானம் எடுக்க கூடிய மன நிலையோ, அதிகாரமோ எமக்கு இருக்கவில்லை. அப்போது நடந்த சம்பவங்களுக்கு வெறுமனே சாட்சிகளாக மாத்திரம் அம்மாவும், நானும் நின்றிருந்தோமோ தவிர வேறு எதுவும் எம்மால் செய்ய முடியவில்லை.

2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதியில் இருந்து இக்கட்சியின் நோக்கத்தை சிலர் அவர்களுடைய சுய நலனுக்காக சிதைத்து, மழுங்கடித்து, துரு பிடிக்க செய்து, பதவிகளை காப்பாற்றி கொள்ள கட்சியின் ஜனநாயக பண்புகளை குலைத்து, கட்சிக்குள் சர்வாதிகாரத்தை விதைத்து, அதிகாரங்களை பிடித்து வைத்திருக்கின்றனர். கட்சியை அவர்களுக்கு தோன்றுகின்ற விதத்தில் எதேச்சையாக நடத்தி செல்கின்றனர்.

ஸ்தாபக தலைவர் அஷ்ரப் கட்டி அமைத்து காட்டி கொடுத்த பாதையில் இக்கட்சி செல்வதாக இல்லை. முஸ்லிம்களுக்கு சேவை செய்கின்ற வழி முறையில் இக்கட்சி பயணிப்பதாக இல்லை. முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற நோக்கத்தில் இது நகர்வதாக இல்லை. ஒரு தனிப்பட்ட நபரின் அதிகாரத்தை காப்பாற்ற கொள்கின்ற பயணம் மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக முன்னெடுத்து செல்லப்படுகின்றது.

கேள்வி:- தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் நூலில் சொல்லப்பட்டு இருக்கின்றவாறு உண்மைக்கு உண்மையாக மோசடிகள் இடம்பெற்று உள்ளனவா?

பதில்:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வளர்த்தவர்கள் நாங்கள். இக்கட்சி எமக்கு ஒரு குழந்தையை போன்றது. ஆகவேதான் தாயாரோ, நானோ 2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதியில் இருந்து நடைபெற்ற ஏராளமான பல சம்பவங்கள் பற்றி நேரடியாக தெரிந்து இருந்தும் வெளியில் வந்து பேசாமல் உள்ளோம். அதில் எமக்கு நாட்டமும் கிடையாது. இந்நூலில் மிக சொற்பமான விடயங்களே சொல்லப்பட்டு உள்ளன. ஆனால் பொய் என்று சொல்லி நிராகரிக்க முடியாத உண்மைகளை இந்நூல் கொண்டு உள்ளது.

கேள்வி:- தலைவர் அஷ்ரப்பின் மரணத்தில் இன்னமும் மர்மம் உள்ளதாக நினைக்கின்றீர்களா?

பதில்:- யாராவது என்னிடம் வந்து தந்தை எவ்வாறு காலமானார்? என்று கேட்டால் அவர் ஹெலிகெப்டர் பயணம் ஒன்றில் இறந்து போனார் என்றுதான் நான் பதில் கூறுவேன். அதற்கு காரணம் யார்? என்று கேட்டால் அக்கேள்விக்கு என்னிடம் பதில் கிடையாது. அவ்வாறு ஒரு கேள்வியை கேட்காமல் அஷ்ரப் என்கிற தலைவரை அரசியல் அரங்கத்தில் இருந்து அகற்றுவதன் மூலம் அதிக உச்ச பட்ச நன்மைகளை அடைய எத்தனித்தவர் யார்? என்று வினவுவதே மிக பொருத்தமானதாக இருக்கும் என்பது எனது எண்ணம் ஆகும்.

எம். எச். எம். அஷ்ரப் அழிக்கப்பட்ட நாளில் இருந்து அரசியல் வேறு பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. அவர் உயிருடன் இருந்திருப்பின் இவ்வாறு நடந்திருக்க மாட்டாது. நான் இந்த இடத்தில் முஸ்லிம் அரசியலை மாத்திரம் அன்றி தேசிய அரசியலையும்தான் சொல்கின்றேன். அவரை அழிக்க திட்டமிட்டு எவரேனும் சூழ்ச்சி செய்திருப்பின் யார் அதை செய்தார்கள்? என்று கேட்காமல் யாருக்கு அதனால் நன்மை? என்பதைத்தான் கேட்க வேண்டும்.

கேள்வி:- உங்கள் தாயார் அரசியலில் இருந்து ஒதுங்கி அஞ்ஞாதவாசம் செய்கின்றார் போல தெரிகின்றதே?

பதில்:- இந்நாட்டுக்கும், இந்நாட்டு மக்களுக்கும் மகத்தான சேவைகளை ஆற்றிய மகிழ்ச்சியும், திருப்தியும் அவருக்கு உள்ளன. அமைச்சராக மாத்திரம் அல்லாமல் வெளிநாட்டுக்கான தூதுவராகவும் இந்நாட்டுக்கு உன்னதமான சேவைகள் புரிந்து உள்ளார். ஆனால் அவர் கடந்து வந்த பாதைகள் ரோஜா பூ மெத்தைகள் அல்ல. இப்போது எனது மகளுக்கு பாட்டியாகி வீட்டில் ரொம்பவே மகிழ்ச்சியாக வாழ்கின்றார். அவருடைய சந்தோஷத்தை இல்லாமல் செய்ய யாருக்கும் எந்த உரிமையும் எவ்வகையிலும் கிடையாது. அவராகவே விரும்பினால் மீண்டும் அரசியலில் தாராளமாகவே ஈடுபடலாம். அதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். வேறு யாரும் திணிக்க முடியாது.

கேள்வி:- வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பு அல்லது பிரிப்பு குறித்து என்ன சொல்கின்றீர்கள்?

பதில்:- வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பு அல்லது பிரிப்பு தொடர்பாக நான் முதலில் சொல்லி கொள்ள விரும்புகின்ற விடயம் நான் இந்த இடங்களில் வாழ்பவன் அல்லன். இந்த இடங்களில் வாழ்பவர்களேதான் இக்கேள்விக்கு முக்கியமாக பதில் சொல்ல வேண்டியவர்கள் ஆவர். இந்த இடங்களில் வாழ்கின்ற முஸ்லிம்கள், தமிழர்கள், சிங்களவர்கள் ஆகியோரைத்தான் சொல்கின்றேன்.

கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், வடக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாகவும் வாழ்கின்றார்கள். தமிழர்களை முஸ்லிம்களின் அடியில் வைப்பது எவ்வகையிலும் நியாயம் அல்ல. அதே போல முஸ்லிம்களை தமிழர்களின் அடியில் வைப்பதும் நியாயம் அல்ல. வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்கு என்று ஒரு பகுதி கொடுக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு என்றும் ஒரு பகுதி நிச்சயம் கொடுக்கப்படவே வேண்டும். இதுவே எனது தந்தையாரின் அபிப்பிராயமாகவும் இருந்தது என்று நான் நம்புகின்றேன். ஆகவே வடக்கு, கிழக்கை பிரித்து கொடுப்பதே பொருத்தமான, நியாயமான, நீதியான தீர்வாக இருக்க முடியும் என்று நான் விசுவாசிக்கின்றேன்.

எனது கருத்துப்படி பிரிப்பு, இணைப்பு என்கிற விடயம் முக்கியமானது அல்ல. அதிகாரம் சரியான முறையில் நியாயமானதாகவும், சமமானதாகவும் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும். இதில் எந்தவொரு அநீதியும், பாரபட்சமும் நிகழ கூடாது. வடக்கில் தமிழ் மக்கள் அவர்களுடைய கலாசாரம், வாழ்க்கை முறை என்பவற்றையும், கிழக்கில் முஸ்லிம் மக்கள் அவர்களுடைய கலாசாரம், வாழ்க்கை முறை ஆகியவற்றையும் இயல்பாகவே பின்பற்றி, அவரவர் உரிமைகளை பாதுகாத்து கொண்டு சுமூகமாக, அமைதியாக வாழ முடியும்.

கேள்வி:- நல்லாட்சி குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில்:- நல்லாட்சி என்பது ஒரு நல்ல கொள்கைதான். ஆனால் அது ஒரு கொள்கையாக மாத்திரமே நடைமுறையிலும் காட்சி தருகின்றது. அதை உண்மையாகவே நடைமுறைப்படுத்தி செயற்படுத்த வேண்டும் என்றால் அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அந்த நோக்கம் இருப்பது போதாது. மக்களுக்கும் அந்த நோக்கம் இருக்க வேண்டும். இலங்கையில் 24 மணித்தியாலங்களுக்குள் அந்த கொள்கையை அமுலாக்கி செயற்படுத்த முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக, மெல்ல மெல்ல, தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு இந்நாட்டு மக்கள் அனைவரும் தயாராதல் வேண்டும். மக்கள் தயார் ஆகாத நிலையில் எந்த அரசியல்வாதி வந்து இக்கொள்கையை பிரயோகித்தாலும் அதனால் உரிய பலனை அடைய முடியாது. இவ்வாறான ஒரு கொள்கை வெற்றி பெறுவதில் பாதி பொறுப்பு அரசியல்வாதிகளிடமும், மீதி பொறுப்பு மக்களிடமும் உள்ளது. இப்போது இந்நாட்டின் தேசிய அரசியல் பயணத்தை பார்க்கின்றபோது அது எங்கு செல்கின்றது?, எங்கு போய் முடிய போகின்றது? என்பவை எவருக்குமே தெரியவில்லை. ஒழுங்கான அரசியல் செயல் திட்டம் ஒன்று இந்நாட்டுக்கு கிடையாது என்பது யதார்த்தமான உண்மையே ஆகும்.

கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? மாட்டீர்களா?

பதில்:- இது ஒரு சிக்கலான கேள்வி. இதற்கான பதில் இலகுவானது அல்ல. எனது தந்தையார் அரசியல்வாதியாக வர வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்தவர் அல்லர் என்பதை இந்நாட்டு முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புகின்றேன். அவர் ஒரு சட்டத்தரணி, கல்முனைக்குடியில் சந்தோஷமாக குடும்பத்துடன் வாழ்ந்தார். ஆனால் அவருக்கு சமுதாயத்தை பற்றிய கவலை இருந்தது. அதே கவலை எனது தந்தையாரின் தந்தையான ஹுசைய்ன் விதானையாருக்கும் இருந்தது. விடுதலை புலிகளின் போராட்டம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மாறி கொண்டிருந்தபோது, சம நேரத்தில் அரசாங்கம் எந்த உதவியையும் செய்து கொடுக்க தயாராகி இருக்காத சூழலில் முஸ்லிம்கள் அவர்களின் உயிர்களை பாதுகாத்து கொள்ள வேறு வழி இல்லாமல் ஆயுதங்களை ஏந்த ஆரம்பித்தார்கள்.

அப்போது முஸ்லிம் சமுதாயத்தை பார்த்து எனது தந்தையார் துப்பாக்கி மூலமாக பேசுவதை விட அரசியல் ரீதியாக பேசுவது ஒரு அதிகாரம் உள்ள முறைமையாக இருக்கும் என்று கூறி அம்முறைமையை அவர் ஏற்படுத்தி தருவார் என்று அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அவரை அவராகவே முஸ்லிம் சமுதாயத்துக்காக ஒரு பலிக் கடா ஆக்கி, அவரின் சந்தோஷமான சொந்த வாழ்க்கையை பணயம் வைத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்தார். முஸ்லிம்களை இந்நாட்டு அரசியலை தீர்மானிக்கின்ற ஒரு வலுவான சக்தியாக உருவாக்கி விட்டே அவர் மரணித்து போனார்.

36 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அவர் ஆரம்பித்தபோது இருந்தது போன்ற பேராபத்தான சூழல் மீண்டும் உருவாகாமல் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். மறுபடியும் அவ்வாறான பேராபத்தான சூழல் முஸ்லிம் சமுதாயத்துக்கு, நாட்டு மக்களுக்கு ஒரு வேளை ஏற்படுமாக இருந்தால் அப்போது எமது சமுதாயத்துக்காக, நாட்டு மக்களுக்காக குரல் கொடுக்க முன்வருகின்ற சக்திகளுக்கு என்னால் முடிந்த உதவி, ஒத்தாசை ஆகியவற்றை வழங்க தயாராகவே உள்ளேன்.

ஆக நான் அரசியலுக்கு வருவேனா? என்கிற கேள்விக்கு இப்போதைக்கு பதில் இல்லை. வரவே மாட்டேனா? என்கிற வினாவுக்கும் விடை இல்லை. காலம்தான் பதில் சொல்லும். அந்த காலம் வந்து நான் அல்லாஹ்வின் தீர்ப்புப்படி அரசியலுக்கு வரும்படியாக நேர்ந்தால் அப்போது அதை பற்றி பேசலாம்.

கேள்வி:- முஸ்லிம் மக்களுக்கு இத்தருணத்தில் நீங்கள் கூறுகின்ற அறிவுரை, செய்தி என்ன?

பதில்:- இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு. தமிழர்கள், முஸ்லிம்கள் மாத்திரம் அன்றி சிங்களவர்கள், பறங்கியர்கள், மலாயர்கள், ஆதிவாசிகள் போன்றவர்களும் இங்கு வாழ்கின்றனர். இவர்கள் அனைவருடனும் முஸ்லிம் சமுதாயம் கட்டாயம் சம்பந்தப்பட்டு கொள்ள வேண்டும். ஆனால் இதற்கான வழியை முஸ்லிம்களே ஏற்படுத்தி கொள்ள வேண்டி உள்ளது. ஏனென்றால் முஸ்லிம்களுடன் சம்பந்தப்பட்டு கொள்வதில் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது என்று ஏனைய சமூகத்தினர் கூறுகின்றார்கள்.

ஆனால் நாம்தான் ஏனைய சமயத்தவர்களுடன் சம்பந்தப்பட கூடாது, ஏனைய சமயத்தவர்களுடைய வீடுகளுக்கு போக கூடாது, ஏனைய சமயத்தவர்கள் பங்கேற்று உள்ள சபைகளுக்கு போக கூடாது என்று எங்களுக்குள் மட்டுப்பாடுகளை வளர்த்து வைத்திருக்கின்றோம். இப்படியான எண்ணங்களை வைத்து கொண்டு பன்முக கலாசாரம் உடைய நாட்டில் வாழவே முடியாது என்பது எனது அபிப்பிராயம். முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நாட்டில் ஒருவேளை அவ்வாறான எண்ணங்களுடன் முஸ்லிம்கள் வாழ முடியலாம்.

இலங்கையில் வாழ்வதானால் இலங்கையர்களாக வாழ வேண்டும். மற்ற இனத்தவர்களுடன் பழக கூடாது என்று கூறி கூறியே பிரிந்து நிற்பதால் விரிசல்கள்தான் அதிகமாகி கொண்டு செல்லும். எனவே பிரிவினையை நாம் நிறுத்த வேண்டும் என்று வினயமாக கேட்டு கொள்கின்றேன். மற்ற சமுதாயத்தினருடன் நாம் கலந்து பழகுதல் வேண்டும். இல்லையெனில் இந்நாட்டில் இலங்கையர் என்கிற மரியாதை எமக்கு கிடைக்கவே மாட்டாது. மேலும் சிங்களத்தை பேசுகின்ற முஸ்லிம்கள் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றையும், தமிழை பேசுகின்ற முஸ்லிம்கள் சிங்களம், ஆங்கிலம் ஆகியவற்றையும் கட்டாயம் படிக்கத்தான் வேண்டும்.

இந்த நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இங்கு ஒரு பிரச்சினை அடிக்கடி நடந்துதான் வருகின்றது. அது என்னவென்றால் நியாயமான, நீதியான முறையில் அதிகாரம் வழங்கப்படுவதில்லை, ஒரு சமுதாயத்தை விட இன்னொரு சமுதாயத்துக்கு அதிகாரம் கூடுதலாக அல்லது குறைவாக வழங்கப்படுகின்றது, கூடுதல் அதிகாரத்தை பெறுகின்ற சமுதாயம் அவர்களை உயர்ந்த இனமாக நினைத்து ஏனைய சமுதாயங்களை அடக்கி ஆள முற்படுகின்றது. இதனால்தான் 1948 ஆம் ஆண்டில் இருந்து இலங்கையில் இன்னமும் இனங்களுக்கு இடையில் சமத்துவத்தை கண்டு கொள்ள முடியாமலேயே உள்ளது.

முஸ்லிம்கள் தமிழ் மக்களுக்காகவும், தமிழர்கள் முஸ்லிம் மக்களுக்காகவும் ஓங்கி குரல் கொடுக்கின்ற காலம் மலர வேண்டும். முஸ்லிம்களை பாதுகாக்க அரசியல் தீர்வு ஒன்றை கொடுங்கள் என்று தமிழ் மக்களும், தமிழர்களை சந்தோஷப்படுத்துகின்ற அரசியல் தீர்வு ஒன்றை கொடுங்கள் என்று முஸ்லிம் மக்களும் கோருதல் வேண்டும்.

அதே போல சிங்கள மக்களின் பயத்தை போக்குகின்ற, பௌத்த சமயத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்கிற நம்பிக்கையை கொடுக்கின்ற தீர்வு ஒன்றை கொடுங்கள் என்று தமிழ் பேசும் மக்கள் குரல் எழுப்புதல் வேண்டும். சிங்களவர், கிறிஸ்தவர், தமிழர், முஸ்லிம் … என்று நாம் அனைவரும் அனைவருக்குமாக பேசுதல் வேண்டும். இம்மாற்றத்தை கொண்டு வர அரசியல்வாதிகளை மாத்திரம் நம்பி பயன் இல்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்தை மாற்றி அமைத்த புரட்சியை வரலாற்றில் பதிவு செய்த அந்த மாபெரும் மக்கள் சக்தியால் இந்த மாற்றத்தையும் நிச்சயம் கொண்டு வர முடியும். இப்படிப்பட்ட இலங்கை இன்ஷா அல்லாஹ் எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

Web Design by Srilanka Muslims Web Team