அமெரிக்காவுக்கு புதிய நிபந்தனைகளை விதிக்கிறார் ஆப்கான் அதிபர் - Sri Lanka Muslim

அமெரிக்காவுக்கு புதிய நிபந்தனைகளை விதிக்கிறார் ஆப்கான் அதிபர்

Contributors

ஆப்கானிஸ்தானில் 2014-ஆம் ஆண்டுக்குப் பின்பும் அமெரிக்கப் படைகள் நீடிக்க, அந்நாட்டு அதிபர் ஹமீது கர்சாய் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளார்.இதுகுறித்து ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது:

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பாக, தலிபான் அமைப்புகளுடன் ஆப்கன் அரசு மேற்கொள்ளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

மேலும், ஆப்கானிஸ்தான் மக்களின் வீடுகளில் அத்துமீறி நுழைந்து அமெரிக்கப் படைகள் சோதனையிடுவதை நிறுத்த வேண்டும். அதையும் மீறி மக்களின் வீடுகளில் அமெரிக்கப் படைகள் சோதனையிட்டால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என்று கர்சாய் எச்சரிக்கை விடுத்தார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் 2014-ஆம் ஆண்டுக்கு பின்னரும் நீடிப்பதற்கு இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் 4 நாள் கூட்டம் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான உறுப்பினர்கள் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு அதிபர் கர்சாயை வலியுறுத்தினர்.

முன்னதாக, நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் நாளான வியாழக்கிழமை அதிபர் கர்சாய் பேசுகையில், “ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது’ என்று தெரிவித்தார். எனினும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு அமெரிக்க அரசு வலியுறுத்தி வருகிறது.

Web Design by Srilanka Muslims Web Team