
அமெரிக்க பொருளாதார நெருக்கடி எதிரொலி: வீரர்களின் இறுதி சடங்குக்கான நிதி ரத்து!
அமெரிக்காவில், பொருளாதார நெருக்கடி காரணமாக, ஆப்கானிஸ்தானில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் இறுதி சடங்குக்கு, நிதியளிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபரின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பார்லிமென்டில் போதுமான ஆதரவு கிடைக்காததால், 17 ஆண்டுகளுக்குப் பின், அந்நாட்டில் அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க பார்லிமென்டில், ஒபாமா, அடுத்த ஆண்டுக்கான, பட்ஜெட் தாக்கல் செய்த போது, எதிர்க் கட்சியினரின் ஆதரவு இல்லாததால், அந்த பட்ஜெட்டை நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, பெரும்பாலான அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன. அமெரிக்க அரசின் இந்த முடிவால், 8 லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள் தற்காலிகமாக வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்திலும், பொருளாதார நெருக்ககடி, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, அமெரிக்க வீரர்கள், நான்கு பேர், தலிபான்களின் தாக்குதலில், கடந்த வாரம், பலியாயினர். இவர்களது இறுதி சடங்குக்கான தொகை, மற்றும் போரில், உயிரிழந்ததற்கான இழப்பீட்டு தொகை தலா, 60 லட்சம் ரூபாய், ஆகியவை அளிக்கப்பட வேண்டும். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு, ஓராண்டுக்கு, வீட்டு வசதி படி அளிக்கப்பட வேண்டும். ஆனால், பொருளாதார நெருக்கடி காரணமாக, மேற்கண்ட நிதி அளிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.