அமைச்சர் ஹக்கீமின் சித்து விளையாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் - வை.எல்.எஸ். ஹமீட் - Sri Lanka Muslim

அமைச்சர் ஹக்கீமின் சித்து விளையாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் – வை.எல்.எஸ். ஹமீட்

Contributors

எஸ்.அஷ்ரப்கான்: ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் அதுபோல்  கல்முனை மாநகர முதல்வர் பதவியை துரும்புச்சீட்டாக  வைத்துஒற்றுமையாக இருக்கின்ற இரண்டு ஊர்களுக்கிடையில் பிளவினை ஏற்படுத்த முனைகின்ற அமைச்சர் றவூப் ஹக்கீமின் சித்து விளையாட்டை அவர் உடனடியாக நிறுத்த வேண்டும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.

கல்முனை மாநகர முதல்வர் பதவிப்பிரச்சினை தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடும்போது,

முதல்வர் நியமனத்தின்போது ஏற்கனவே பல குழப்பங்களை இந்த இரண்டு ஊர்களுக்குமிடையில் ஏற்படுத்திய ஹக்கீம் மீண்டும் ஒரு முறை தன் சித்து விளையாட்டை ஆரம்பித்திருக்கின்றார்.

கடந்த மாநகர சபைத் தேர்தலின்போது முதல்வர் வேட்பாளர் யார் என்று அவர் அறிவித்திருக்க வேண்டும். அல்லது அதிகூடிய விருப்பு வாக்குளைப்பெறுகின்ற ஒருவருக்குத்தான் முதல்வர் பதவி என்றாவது பிரகடனப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் முதல்வர் யார் என்ற பிரச்சினையே தோன்றியிருக்காது. ஆனால் தமது கட்சியின் வாக்குச்சரிவை சரி செய்வதற்காக இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் ஆசை வார்த்தைகளைக்கூறி பிரதேசவாதத்தைத் துாண்டிவிட்டதன் காரணமாக  ஏனைய கட்சிகளுக்கு வாக்களிக்க இருந்தவர்கள்கூட தமது ஊர்களுக்கு முதல்வர் பதவியை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக மரத்திற்கு வாக்களித்தார்கள். கட்சி வெற்றி பெற்றாலும் முதல்வர் யார் ? என்று ஹக்கீம் செயற்கையாகத் தோற்றுவித்த பிரச்சினை, டயர் எரிப்புகளிலும், கடையடைப்புகளிலும், சொத்துக்களைச் சேதப்படுத்துவதிலும் போய் முடிந்தது. இப்பொழுது மீண்டும் மேயர் பதவியின் பெயரால் இரண்டு ஊர்களுக்குமிடையில் பிரதேச உணர்வைத்துாண்டிவிட்டு  குளிர்காய முற்படுகின்றார்.

கண்டியில் அடுத்தமுறை தேர்தலில் போட்டியிட்டால் தன் சீட்டு காலியாகிவிடும் எனவே ஏற்கனவே அவரால் மந்தைகள் என்று அடையாளம் காணப்பட்ட வாக்காளர்கள் அம்பாரை மாவட்டத்தில் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையில் அடுத்த பொதுத்தேர்தலில் அவர் அம்பாரை மாவட்டத்தில் மீண்டும் களமிறங்குவதற்கான ஆரம்ப செயற்பாடாகக்கூட இந்த பிரச்சினை தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம்.

அடுத்த பொதுத்தேர்தலில் தானும் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்டு கல்முனைக்குடி, சாய்ந்தமருது ஆகிய இரண்டு ஊர்களிலும் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தி, ஒவ்வொரு ஊரைச் சேர்ந்தவர்களும், நொண்டியாக இருந்தாலும் தமது ஊரைச் சேர்ந்தவர் எம்.பி.யாக வேண்டும் என்ற பிரதேச உணர்வை ஊட்டுவதன் மூலம் மீண்டும் சரிந்திருக்கின்ற தமது கட்சியின் வாக்கு வங்கியை மீளக்கட்டி எழுப்புவதற்கான ஒரு முன் ஏற்பாடாகவும் இந்த மேயர் பிரச்சினை கிளப்பி விடப்பட்டிருக்கலாம்.

இரண்டு வருடங்களில் மேயர் பதவி சுழற்சி முறையில் மாற்றப்படும் என்று எதுவித எழுத்துமூல ஒப்பந்தமும் இல்லை. வெறும் வாய்ச்சொல் மாத்திரம்தான் என்று மேயர் கூறுகின்றார். றவூப் ஹக்கீம் தனது அரசியல் வாழ்க்கையில் வாக்குறுதியை எப்பொழுதாவது காப்பாற்ற முற்பட்டிருக்கின்றாரா ? என்பதை தேடித்தான் பார்க்க வேண்டும். அவ்வாறான ஒருவர் வெறும் வாயினால் கூறிய ஒரு வார்த்தைக்காக முஸ்ட்டியை இறுக்கிக்கொண்டு ஒரு கை பார்த்தேதீருவேன் என்று களம் இறங்கியிருக்கின்றார் என்றால், “ சோழியன் குடும்பி சும்மா ஆடாது ” என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மறைந்த தலைவர் கல்முனையின் முதல்வர் எவ்வாறு தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதை தெளிவாகக்காட்டிவிட்டுச் சென்றிருக்கின்றார். 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதேசசபைத் தேர்தலில்  அக்கரைப்பற்று, சம்மாந்துறை போன்ற பிரதேச முதல்வர் வேட்பாளர்களை தேர்தலுக்கு முன்பதாகவே அறிவித்திருந்தார். அதேநேரம் கல்முனை உள்ளுராட்சி எல்லைக்குள் பல கிராமங்கள் அடங்கியிருக்கின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதிகூடிய விருப்பத்தெரிவு வாக்குகளைப்பெறுகின்றவருக்கே முதல்வர் பதவி வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பதாகவே அறிவித்தார். அதேபோன்று சாயந்தமருது, கல்முனைக்குடி கிராமங்களை விடவும் குறைந்த வாக்குகளைக்கொண்டிருக்கின்ற மருதமுனைக்கிராமத்தைச் சேர்ந்த ஐ.ஏ. ஹமீட் அதிகூடிய விருப்பத்தெரிவு வாக்குகளைப்பெற்றபொழுது அவருக்கே பிரதேச சபைத் தவிசாளர் பதவி வழங்கப்பட்டது. அதனை அனைத்து ஊர்களும் மறுவார்த்தையின்றி ஏற்றுக்கொண்டன.

இதேபோன்றதொரு அறிவிப்பை தலைவரின் பாதையைப்பின்பற்றுகின்றோம் என்று கூறுகின்ற றவூப் ஹக்கீம் கடந்த மாநகர சபைத்தேர்தலின்போது ஏன் செய்யவில்லை. அல்லது தேர்தல் முடிவுற்றபோதாவது கட்சி முன்னறிவிப்பு எதனையும் செய்யாததினால் அதிகூடிய விருப்பத்தெரிவு வாக்குகளைப்பெற்றவருக்கே முதல்வர் பதவி வழங்கப்படும் என்றாவது ஏன் அறிவிக்கவில்லை. இரண்டு ஊர்களுக்குள்ளும் வீணான பிரச்சினையைத்தோற்றுவிக்க ஏன் அவர் களம் அமைத்தார் ? மட்டுமல்லாமல் இரண்டு வருட சுழற்சி முறை என்ற ஒரு விடயம் மீண்டும் பிரச்சினையைத் தோற்றுவிக்கலாம் என்றாவது அவர் ஏன் அன்று சிந்திக்கவில்லை. அல்லது உண்மையாகவே சுழற்சி முறையில் வழங்குவதற்கு அவர் எண்ணியிருந்தால் எழுத்துருவத்தில் கட்சி முக்கியஸ்தர்களைச்சாட்சியாக வைத்து ஏன் அவர் ஒரு ஆவணத்தைப்பெறவில்லை. றவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸில் பதவியைப் பெற்றுக்கொண்ட எவரும் இடைநடுவில் விட்டுக்கொடுத்த வரலாறு இல்லை என்ற உண்மைக்கு மத்தியில் இந்த விடயத்தில் வெறுமனே வாயினால் 2 வருடங்களில் விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற ஒரு வார்த்தையைக்கூறி  ஒரு மெத்தனப்போக்கை கடைப்பிடித்துவிட்டு இப்பொழுது வரிந்து கட்டிக்கொண்டிருப்பதன் நோக்கமென்ன ? ஊர்களைக் குழப்புவதற்காகவா ?

இப்பிரச்சினை சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வேண்டுமென்ற  சிலரின் கோரிக்கையை மேலும் வலுப்படுத்தலாம். இலங்கை முஸ்லிம்களின் பலம் என்பது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பலமாகும். கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பலம் என்பது அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் பலமாகும். அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் பலம் என்பது கல்முனைத்தொகுதி முஸ்லிம்களின் பலமாகும்.  கல்முனைத்தொகுதி முஸ்லிம்களின் பலம் என்பது கல்முனைக்குடி, சாய்ந்தமருது ஆகிய கிராமங்களின் ஒற்றுமையினால் வெளிக்கொணரப்படுகி்ன்ற பலமாகும். சுருங்கக்கூறினால் முழு இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பலத்தின் அடிநாதம் இந்த இரு ஊர்களின் ஒற்றுமை என்கின்ற பலத்திலிருந்தே புறப்படுகின்றது. அதனால்தான் 1994 ஆம் ஆண்டைய பிரதேச சபைத் தேர்தலுக்கு முன்பதாக சாயந்தமருதில் மறைந்த மாவட்ட நீதிபதி மர்ஹூம் ஹூசைனின் இல்லத்திற்கு முன்னால் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  மறைந்த தலைவர் அவர்கள்  “சாய்ந்தமருதிற்கு பிரதேச செயலகம் பெற்றுத்தருவேன். ஏனெனில் அது ஒரு நிருவாக அலகு, ஆனால் ஒருபோதும் சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபையை உருவாக்க முடியாது. ஏனெனில் உள்ளுராட்சி சபை என்பது ஒரு அரசியல் அலகு ”  கல்முனைத்தொகுதி முஸ்லிம்களின்  அடிப்படை அரசியல் பலத்தை கூறுபோடுவதற்கு பல சக்திகள் கண் கொத்திப்பாம்பாக பார்த்துக்கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் நாமும் அதற்குத் துணைபோய்விட முடியாது. கல்முனைக்குடி, சாய்ந்தமருது ஆகிய கிராமங்கள் பெயரளவில் இரண்டு கிராமங்களாக இருந்தபோதிலும் அரசியலில் ஒரேபார்வையில் ஒரே சிந்தனையைக்கொண்ட ஒரு முழுப்பிரதேசமாக என்றென்றும் திகழ வேண்டும் என்ற கருத்தினை அவர் முன்வைத்திருந்தார்.

எனவே, கல்முனை மேயர் விடயம் றவூப் ஹக்கீமுடைய கட்சிப்பிரச்சினையாக இருந்தாலும் கல்முனைத்தொகுதி மக்களும் றவூப் ஹக்கீமுடைய சொத்துக்கள் அல்ல என்பதனால் அவர்களைப்பற்றிப்பேசுகின்ற உரிமை எங்களுக்கு இருக்கின்றது. எனவே, உங்களது அரசியல் ஆதாயத்திற்காக எங்களது மக்களைப்பிரித்துவிட வேண்டாம். என்று வேண்டுகிறோம். நாங்கள் மறைந்த தலைவருடன் இணைந்து வளர்த்தெடுத்த இக்கட்சியை  நீங்கள் ஒரு பொன் முட்டையிடும் வாத்தாக பயன்படுத்திக்கொண்டிருக்கின்றீர்கள். போதாக்குறைக்கு எமது மக்களையும் பிரித்து அந்த அநியாயத்தையும் செய்துவிடாதீர்கள். கல்முனைத்தொகுதியில் கடந்த 13 வருடங்களில் நீங்கள் 13 கற்களைக்கூட துாக்கிவைக்கவில்லை. ஆகக்குறைந்தது மக்களைப்பல கூறுகளாக பிரிக்காமலாவது இருங்கள். என்று வேண்டுகிறோம். உங்களது கட்சி இன்று இருக்கலாம், நாளை இல்லாமல் போகலாம். ஆனால் இந்த இரண்டு கிராமங்களும் என்றென்றும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அதற்கு அநியாயம் செய்துவிடாதீர்கள். அதேநேரம் மேயர் சிராஸ் அவர்களிடம் நாம் வேண்டுவது,   உங்களுக்கும் உங்கள் தலைவருக்கும் இருக்கின்ற பிரச்சினைகளை உங்கள் கட்சி மட்டத்திற்குள் வைத்துக்கொள்ளுங்கள். அதனை ஊருக்குள் கொண்டுவந்து பதவிக்காக ஊர் உணர்வைத்துாண்டுவதை தயவு செய்து நிறுத்துங்கள். ( வாக்குறுதி என்பது எழுத்துருவில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. அதையும் தாண்டி வாக்குறுதி கொடுப்பதும், அதனை காற்றில் பறக்க விடுவதும், அதற்கெதிராகச் செயற்படுவதும் எமது இன்றைய தலைவர் எமது கட்சிக்குள் பல சந்தர்ப்பங்களில் காட்டித்தந்த முன்மாதிரியாகும். அதைப்பின்பற்றித்தான் பலரும் இந்தக்கட்சியில் வாக்குறுதியை மீறிச் செயற்பட்டிருக்கின்றார்கள். கட்சியின் அதே கலாச்சாரத்தைப் பின்பற்றித்தான் நானும் செயற்படுகின்றேன். வித்தியாசமாக எதையும் செய்துவிடவில்லை.  என்பதுதான உங்களது நிலைப்பாடு என்றால் அதை கட்சி ம்ட்டத்தில் போய் தீர்த்துக்கொள்வதுதான் பொருத்தமானதாகும்).

அதேநேரம் பிரதிமேயர் நிஸாம் காரியப்பர் அவர்கள் தலைவருடன் இருந்த ஒருவர் என்று உரிமை கோருகின்ற ஒருவர். மறைந்த தலைவர் கல்முனை உள்ளுராட்சி சபைத்தலைவரை எவ்வாறு தெரிவுசெய்ய வேண்டுமென்ற உதாரணத்தைக்காட்டி இருந்தும், நீங்கள் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெறாத சூழ்நிலையில் எந்த அடிப்படையில் மேயர் பதவியைக்கேட்டு அன்று பிரச்சினையைக் கிளப்பினீர்கள் ? உங்களுக்கு மேயர் பதவி தருவதாக தேர்தலுக்கு முன் உங்கள் தலைவர் வாக்குறுதி ஏதும் அளித்திருந்தால் அதனை உங்கள் தலைவரைக்கொண்டு ஏன் பகிரங்கப்படுத்த முனையவில்லை. அல்லது கட்சியின் மூலம் ஏன் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தவில்லை. அவ்வாறு ஏதும் செய்யாமல் அதிகூடிய விருப்பத்தெரிவு வாக்குகளையும் பெறாமல் மறைந்த தலைவரின் முன்மாதிரியையும் புறக்கணித்துவிட்டு மேயர் பதவிப்பிரச்சினையைக்கிழப்பி ஏதோ முழுக்கல்முனைக்குடியும் மேயர் பதவி இல்லாமல் ஏங்கிக்கிடப்பது போலவும், எனவே கல்முனைக்குடிக்கு மேயர் பதவி வேண்டும் என்றும் ஒரு பிரேமையை ஏன் தோற்றுவிக்க அன்று முயற்சித்தீர்கள் ? அன்று மருதமுனையைச் சேர்ந்த ஐ.ஏ. ஹமீட் அவர்களைத் தவிசாளராக்கிவிட்டு அதனை அழகுபார்த்த கிராமங்கள்தான் கல்முனைக்கடி, சாய்ந்தமருது கிராமங்களாகும்.

எனவே, சாய்ந்தமருதோ, கல்முனைக்குடியோ மேயர்பதவிக்கு ஏங்கவில்லை என்பதைப்புரிந்து கொள்ளுங்கள். உங்கள் இருவருக்கும் பதவியில் பிரச்சினைகள் இருந்தால் அதை உங்கள் கட்சி மட்டத்திற்குள் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சில்லறைப்பதவி பிரச்சினைகளை ஊர் மட்டத்திற்குள் கொண்டுவந்து உள்ளுர் பிரச்சினையாக்காதீர்கள்.

இன்று முஸ்லிம் சமூதாயம் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குள் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிரதேசவாதத்திற்குள்ளும் புதையுண்டுபோகின்ற  பரிதாப நிலையை உருவாக்க வேண்டாம், என்று பொன்முட்டையிடும் வாத்தின் சொந்தக்காரன் றவூப் ஹக்கீமிடமும், மேயர் ஸிராஸ் மீராசாஹிபிடமும், பிரதி மேயர் நிஸாம் காரியப்பரிடமும் சமூகத்தின்பெயராலும், கல்முனைத்தொகுதி மக்களின் பெயராலும் வினயமாக வேண்டுகின்றோம். எல்லாம் வல்ல இறைவன் எங்களுக்கும், உங்களுக்கும் சரியான பாதையைக் காட்டுவானாக ! ஆமீன்.

Web Design by Srilanka Muslims Web Team