அம்பாரை மாவட்ட நிந்தவூர் மதினா விளையாட்டுக்கழக கபடி அணி வீரர்கள் தேசிய மட்ட கபடி சுற்றுப்போட்டியின் சாம்பியனாக தெரிவு..! - Sri Lanka Muslim

அம்பாரை மாவட்ட நிந்தவூர் மதினா விளையாட்டுக்கழக கபடி அணி வீரர்கள் தேசிய மட்ட கபடி சுற்றுப்போட்டியின் சாம்பியனாக தெரிவு..!

Contributors
author image

Editorial Team

– எம்.என்.எம். அப்ராஸ்-

தேசிய கபடி சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 2022 ஆண்டிற்கான தேசிய மட்ட மாவட்ட ரீதியிலான கபடி சுற்றுப்போட்டியின் சாம்பியனாக அம்பாரை மாவட்டம் நிந்தவூர் மதினா விளையாட்டுக்கழக கபடி அணி வீரர்கள் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்

இலங்கை தேசிய கபடி சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 2022 ஆண்டிற்கான தேசிய மட்ட மாவட்ட கபடி சுற்றுப்போட்டி கடந்த( 08-01-2022ம் திகதி) கொழும்பு விளையாட்டுத்துறை அமைச்சின் உள்ளக விளையாட்டரங்கில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த சுற்றுப்போட்டியில் 25 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 25 அணிகள் பங்குபெற்றனர்.

இதில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிந்தவூர் மதினா விளையாட்டுக்கழக கபடி அணி வீரர்கள் இப்போட்டியில் பங்குபற்றினர்.

சுற்றுப்போட்டியில் மதீனா விளையாட்டுக்கழகம் காலிறுதி போட்டியில் கேகாலை மாவட்டத்தை வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று, அரையிறுதி சுற்றில் அனுராதபுர மாவட்டத்தை எதிர்த்து ஆடி அப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுக் கொண்டது

இறுதி சுற்று போட்டி நேற்று (10) திகதி கொழும்பு டொரிங்டன் தேசிய விளையாட்டு தொகுதி வெளி அரங்கில் இடம்பெற்றது.

இவ் இறுதி சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் அம்பாறை மாவட்ட அணிகள் இறுதிப் போட்டியில் பங்குபற்றின.

இறுதிப்போட்டியில் 56:20 என்ற புள்ளிகள் அடிப்படையில் அம்பாரை மாவட்ட நிந்தவூர் மதினா விளையாட்டுக்கழக கபடி அணி தேசிய மாவட் ட கபடி சம்பியன்ஷிப் பட்டத்தை சுவீகரித்தது.

மேலும் குறித்த இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடிய அணி வீரர்கள் அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ், பணப்பரிசு என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ்வணியின் அணித்தலைவராக செயற்பட்ட இலங்கை தேசிய கபடி அணி வீரரும் வெளிநாட்டு கபடி கழக( MEGNA – BANGLADESH) வீரரும் ஆகிய எம் . டீ. அஸ்லாம் சஜாவின் சிறந்த RAIDING விளையாட்டுத் திறமை மூலமாக சுற்றுப்போட்டியின் சிறந்த வீரருக்கான வெற்றிக் கிண்ணமும் பணப்பரிசும் அவருக்கு வழங்கி
வைக்கப்பட்டது.
இதேவேளை இவ் அணிக்கு வலு சேர்த்து மற்றுமொரு (Raider )ஆக செயற்பட்ட இலங்கை தேசிய கணிகஷ்ட கபடி அணி வீரர் எஸ். எம். சபிஹான் தமது அணி எதிர்கொண்ட மொனறாகலை மாவட்டத்துடனான முதலாவது போட்டியில் சிறந்த போட்டி வீரருக்கான பணப் பரிசினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வருடத்தின் முதலாவது வரலாற்று வெற்றியினை பதிவு செய்து எமது கிழக்கு மாகாணத்திற்கும்எமது அம்பாரை மாவட்டத்திற்கும், மற்றும் எமது நிந்தவூர் மண்ணுக்கும் பெருமை சேர்த்த இவ் அணி வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட தேசிய கபடி நடுவர் ஆசிரியர் எஸ். எம். எம்.இஸ்மத் அவர்களுக்கும், போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய அணி வீரர்களுக்கும் மற்றும் இந்த அணியின் முகாமையாளராக செயற்பட்ட ஆசிரியர் எஸ். எம். இர்சாத் அவர்களுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த சகல வீரர்களுக்கும் வாழ்த்துக்களையும் மதினா விளையாட்டு கழகத்தினர் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

தேசிய மட்ட கபடி போட்டிகளில் முன்னணி அணியாக வலம் வருகின்ற அம்பாறை மாவட்ட மதீனா விளையாட்டு கழகம், இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற 33ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் தேசிய மட்ட கபடி போட்டியில் சம்பியனாகத் தெரிவாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team