அம்பாறையின் சகல பாகங்களிலும் பெற்றோல், டீசலை பெற நோன்புடன் வெயிலில் காத்திருக்கும் மக்கள்..! - Sri Lanka Muslim

அம்பாறையின் சகல பாகங்களிலும் பெற்றோல், டீசலை பெற நோன்புடன் வெயிலில் காத்திருக்கும் மக்கள்..!

Contributors

நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து எரிபொருள் விநியோகிக்கும் நிலையத்தில் மக்கள் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்று செல்லும் அவலம் தொடர்ந்தும் காணக்கூடியதாக இருக்கின்றது.

அந்த வகையில், அம்பாறை மாவட்ட பல்வேறு பகுதிகளில் எரிபொருள் பெறுவதற்காக மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் வாகனங்களுடன் மற்றும் கலன்களுடன் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் கடந்த இரு நாட்களாக அதிகாலை 5 மணி தொடக்கம் ஐநூறு மீட்டர் தொடக்கம் ஒரு கிலோமீட்டர் வரை நீளத்தில் வரிசையில் காத்திருக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டையடுத்து பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருட்கள் இல்லை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் வாகனங்கள் உட்செல்லவிடாது கயிறுகட்டி மூடியுள்ளனர். சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் பொதுமக்கள் அதிகாலை 5 மணி தொடக்கம் நீண்ட வரிசையில் வாகனங்களுக்கு பெற்றோல், டீசல் பெறுவதற்கும் வீடுகளில் விளக்கு மற்றும் அடுப்பு எரிப்பதற்காக பொதுமக்கள் மண்ணெண்ணையை பெறுவதற்காக கலன்களுடன் வெயிலில் காத்துக்கிடக்கின்றனர். இதனால் பிரதான பாதைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தரித்து நிற்பதுவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முரண்பாடுகள் ஏற்படுவதும் வழமையாகியுள்ளது.

அந்தவகையில் இன்றையதினம் எரிபொருளை நிரப்புவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே உள்ள வீதி நீளத்திற்கு வாகனங்கள் தரித்து நிற்பதை அவதானிக்க முடிகின்றது. இதன்போது அங்கு பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team