அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினையும், விவசாயிகளின் பிரச்சினையும் உடனடியாக தீர்க்கப்படல் வேண்டும் : பாராளுமன்றில் ஹரீஸ் வலியுறுத்தல்..! - Sri Lanka Muslim

அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினையும், விவசாயிகளின் பிரச்சினையும் உடனடியாக தீர்க்கப்படல் வேண்டும் : பாராளுமன்றில் ஹரீஸ் வலியுறுத்தல்..!

Contributors

நூருல் ஹுதா உமர்

அரசாங்கம் விவசாயிகளின் விடயத்தில் கவனமெடுத்து உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்கினால் அடுத்த வருடமளவில் இந்த நாட்டில் அரிசி தட்டுப்பாடும், உணவுப் பஞ்சமும் ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்த ஆபத்திலிருந்து நாட்டை பாதுகாக்க விவசாய அமைச்சர் உடனடியாக விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறே ன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் புதன்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்ற அடிப்படையிலும், கூடுதலான அரிசி உற்பத்தியை செய்யும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற ரீதியிலும் அம்பாறை மாவட்ட விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரியளவிலான குழப்பத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இங்கு எத்திவைக்க விரும்புகிறேன். கடந்த பல தசாப்தங்களாக விவசாய நடவடிக்கைகளுக்கு இரசாயன பசளைகளை பயன்படுத்தி வந்ததனால் இப்போது விவசாயிகளுக்கு சடுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேதனை பசளை சம்பந்தமான பரீட்சயம், அறிவூட்டல்கள் போதாமையினால் இவ்விடயம் சவாலான விடயமாக இப்போது மாறியுள்ளது. திடீரென பசளை விடயத்தில் மாற்றத்தை செய்வதனால் விவசாய அறுவடையில் பாரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் எனும் அச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த சபையில் விவசாய அமைச்சர் இருக்கிறார். அவரும் அரசாங்கமும் இவ்விடயத்தில் கவனமெடுத்து உரிய தீர்வை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அது மட்டுமின்றி அம்பாறை மாவட்டத்திற்கு மீன்பிடியமைச்சர் அண்மையில் வந்தபோது மீனவர்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் அவருக்கு எத்திவைத்தோம். சட்டவிரோத சுறுக்குவலை பயன்படுத்தும் விடயம், கடலில் நடக்கும் மீன்திருட்டினால் மீனவர்கள் அடையும் மில்லியன் கணக்கான நஷ்டம் என்பதனால் பலரும் வறுமைக்கு உட்பட்ட நிலைக்கு மாறியுள்ளார்கள். இது விடயம் தொடர்பில் பொலிஸாரினதும், பாதுகாப்பு படையினரினதும் உதவியுடன் தீர்வை பெற்றுத்தருமாறு மீன்பிடியமைச்சரிடமும், மீன்பிடித்துறை அமைச்சின் உயர் அதிகாரிகளிடமும் பேசியுள்ளோம். ஒலுவில் மீன்பிடித்துறைமுகத்தினால் நிந்தவூர், ஒலுவில் போன்ற பல பிரதேசங்கள் கடலரிப்பில் சிக்கியுள்ளது. தொழிநுட்ப குழுவை பயன்படுத்தி மக்களுக்கு பிரச்சினை வராதவகையில் அறிக்கையொன்றை பெற்று மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடித்துறைமுகமாக ஒலுவில் மீன்பிடித்துறைமுகத்தை மாற்றுமாறு கோரியுள்ளோம் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team