அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, எம்மை ஏமாற்ற முற்பட வேண்டாம் - உலப்பன சுமங்கல தேரர் - Sri Lanka Muslim

அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, எம்மை ஏமாற்ற முற்பட வேண்டாம் – உலப்பன சுமங்கல தேரர்

Contributors

எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ஆர்ப்பாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். பொய்யான வாக்குறுதிகளை எமக்கு வழங்கி எம்மை ஏமாற்ற முற்பட வேண்டாம் என்று அரசைக் கோருகின்றோம் என உலப்பன சுமங்கல தேரர் தெரிவித்தார்.

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து, பத்தரமுல்ல, இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் இன்று -19-
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே உலப்பன சுமங்கள தேரர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

24 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எந்தவோர் அரசும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர் ஆகியோரிடம் நடத்திய பேச்சின்போது எமது சாதாரண கோரிக்கைகளை முன்வைத்தோம். எனினும், அவர்கள் எமது கோரிக்கைளுக்கு இணங்கவில்லை. அவர்களால் செய்யக்கூடிய விடயங்களையே முன்வைத்தனர்.

அரசு கூறிய விடயங்களுக்குத் தலைசாய்க்க நாம் வரவில்லை. எமக்கான சம்பளத்தை முறையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே நாம் வந்தோம். அந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் வரை கல்வி அமைச்சு வழங்கும் விடயங்களை ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இல்லை.

எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாம் எமது தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவுள்ளோம்.

அரசியல் நோக்கத்துக்காகச் செயற்படும் குழுவினர் நாம் அல்ல. எனவே, பொய்யான வாக்குறுதிகளை எமக்கு வழங்கி எம்மை ஏமாற்ற முற்பட வேண்டாம் என்று அரசைக் கோருகின்றோம் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team