அரசியலில் இருந்து ஒதுங்கிறாரா இம்தியாஸ் Mp? - Sri Lanka Muslim

அரசியலில் இருந்து ஒதுங்கிறாரா இம்தியாஸ் Mp?

Contributors

பேருவளை நகர சபைக்கு வேட்பாளர் தெரிவு மற்றும், இறுதி நேரத்தில் முக்கிய பிரமுகருக்கு இடம் கொடுக்காமை உள்ளிட்ட மற்றும் சில காரணங்களால், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மிகுந்த கவலையுற்றிருப்பதாக, நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சி உருவாகவும், சஜித் பிரேமதாசா அதன் தலைவராக செயற்படவும் முக்கிய பங்காற்றியவர்களில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் முக்கியமானவர்.

பொதுஜன பெரமுன – ஐக்கிய தேசியக் கட்சி கூட்டு அரசாங்கத்தில், விரைவில் இணைந்து கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் ராஜித்த சேனாரத்தின உள்ளிட்ட மற்றும் சிலரின் சூழ்ச்சியில், பேருவளை முன்னாள் நகர சபையின் தலைவர் மஸாஹிம் மொஹமட்டிற்கு இறுதி நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுவில் கையொப்பமிட அனுமதி மறுக்கப்பட்டு, அவர் ஏமாற்றப்பட்டிருந்தார்.

பேருவளையின் 3 முக்கியஸ்தர்களை கொழும்புக்கு அழைத்து, அவர்களின் கரங்களை பற்றச்செய்து 3 பேருக்கு வாய்ப்பு வழங்குவேன் என சஜித் பிரேமதாசா உறுதியும் வழங்கியிருந்தார். குறித்த 3 பேரையும் கொழும்புக்கு அழைத்து ஒற்றுமைப்படுத்துமாறு கட்சித் தலைவருக்கு எடுத்துக் கூறியவரும் இம்தியாஸ் எம்.பி.தான்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன் மஸாஹிம் மொஹமட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என மேலதிகமாக வாக்குறுதியும் வழங்கியிருந்தார்.

எனினும், அந்த வாக்குறுதி இறுதி நேரத்தில் மீறப்பட்டு, மஸாஹிம் மொஹமட் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் ஆகக்குறைந்தது சுயேற்சையாக களமிறங்கக்கூட வாய்ப்பு இல்லாமல் போனது.

இது இம்தியாஸ் பார்க்காருக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை வழங்கியுள்ளது.

அத்துடன் வேட்புமனு குழுவில் இடம்பெற்றிருந்த ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் திஸ்ஸ அத்தனாயக்கா போன்றோருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் மூவருமே வேட்புமனு குழுவிலும் இடம்பெற்றிருந்தவர்கள். அவர்கள் மஸாஹிம் மொஹமட்டுக்கு இடம் வழங்குவதெனவும் இணக்கம் கண்டிருந்தனர்.

தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பால் ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைக்கு எப்போதும் முக்கியத்துவம் வழங்கிய இம்தியாஸ் பார்க்கீர் மார்க்கார், இச்செயற்பாட்டினால் முழுமையாக விரக்கியடைந்துள்ளார்.

இம்தியாஸ்,  ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது பொதுஜன பெரமுனவுடனோ சேரப் போவதில்லை எனவும், பெரும்பாலும் அவர் அரசியல் செயற்பாட்டை நிறுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை சுவிற்ஸர்லாந்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ஒருவருக்கு, அக்கட்சியின் தலைவரின் மனைவி ஜலனி பிரேமதாசா அனுப்பிய, வட்சப் தகவலில், சஜித் – இம்தியாஸ் முறுகல் தீர்க்கப்பட்டு விட்டது என அவர்  குறிப்பிட்டிருந்தார்.

எனினும், இதுதொடர்பில் இம்தியாஸிடம் கேட்டபோது இல்லை, பிரச்சினை தீர்க்கப்படவில்லை, நான் அமைதியாக இருக்கிறேன், கட்சி சார்பிலான கடந்த 2 கூட்டங்களுக்கு தான் போகவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

பல்டி அடிக்காத, பணத்திற்கு விலை போகாத, சிங்கள சமூகத்தினால் மிக நேர்மையான அரசியல்வாதியாகவும், இரு சமூகங்களுக்கு இடையிலான உறவுப் பாலமாகவும், இஸ்லாமிய நாட்டு ராஜதந்திரிகளுடன்  மிகநெருக்கமான  உறவை  கொண்டிருப்பவரும், ஐக்கிய மக்கள் சக்தியின்  சிங்கள மொழிமூல முக்கிய பேச்சாளராகவும், இளம் சந்ததியினரின்  அரசியல் பிரதிநிதித்துவத்தை எப்போதும் ஊக்குவித்தவருமான இம்தியாஸ் பார்க்கீர் மார்க்கார் அரசியலில் இருந்து ஒதுங்குவது என்பது, இலங்கை முஸ்லிம்களுக்கு  பேழிப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

 

ஜப்னா முஸ்லிம்-

Web Design by Srilanka Muslims Web Team