அரசுடன் ஒட்டியிருக்கும் அமைச்சர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் - வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு - Sri Lanka Muslim

அரசுடன் ஒட்டியிருக்கும் அமைச்சர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

மஹிந்த அரசில் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முழு மந்திரிகள் இருவரும் அரை மந்திரிகள் இருவரும் உடனடியாக அரசில் இருந்து விலகி பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் தலைவர் அமீன் எம். ரிலா அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

 

அரசாங்கத்தில் இருந்து கொண்டு சமூகத்தின் நன்மைக்காக பதவி பட்டங்களை துறந்து வெளியேறியுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது அபாண்டமான பழிகளை சுமத்துவதை நிறுத்துமாறும் அந்த இயக்கம் சமூகத்தின் பெயரால் கோரியுள்ளது.

 

பட்டுப் போய்க்கொண்டிருக்கும் மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்காமல் சமூகத்தின் விடிவுக்காக எதிரணியில் இணைந்து முஸ்லிம் சமூகத்துக்கு இனியாவது உதவுமாறும் அந்த வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வளவு காலமும் இந்த அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்து வந்த முஸ்லிம் தலைவர்கள் பொருத்தமான நேரத்தில் அரசுக்கு தகுந்த பாடமொன்றை புகட்டியுள்ளார்கள். முஸ்லிம் சமூகத்தை கறிவேப்பிள்ளையாக பயன்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசும் தங்களது தவறை இனியாவது உணர்ந்து கொள்ளும் நல்ல படிப்பினை கிடைத்துள்ளது.

 

2005, 2010ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தல்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் இருத்துவதற்கு வடக்கு கிழக்கில் புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் முழு மூச்சாக செயற்பட்டு அவரது வெற்றிக்கு உழைத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூட இந்த அரசில் வெறுப்புற்று வெளியேறி உள்ளார் என்றால் இந்த அரசும் ஜனாதிபதியும் முஸ்லிம் சமூ

 

கத்தின் மீது எவ்வளவு அடக்கு முறைகளை பிரயோகித்துள்ளதென்பது வெளிப்படை.

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீனின் துணிச்சலான நடவடிக்கையை வடக்கு முஸ்லிம்களுக்கான அமைப்பு பாராட்டுகின்றது. அத்துடன் முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைக் கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு அமைச்சர் ரிசாதின் தீர்க்கமான முடிவே வழிவகுத்தது என்றால் அதில் மிகையொன்றில்லை.

 

இன்னும் சொற்ப நாட்களே தேர்தலுக்கு இருக்கின்றது. இது வெறுமனே ஜனாதிபதித் தேர்தல் என்பதை விட நாட்டின் எதிர்காலத்தையும் உங்களின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் தேர்தலாக அமைந்துள்ளது. எனவே, நீங்கள் உங்கள் அரசியல் இருப்பை காப்பாற்றிக் கொள்வதற்காகவேனும் பொது எதிரணியில் இணையுங்கள்.

 

அரசாங்கம் உங்களை கோடரிக் காம்புகளாய் பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் முக்கிய தலைவர்களான ரவூப் ஹக்கீம் மீதும், ரிசாத் மீதும் சேறுபூச துணைபோகாதீர்கள். நீங்களும் எதிரணியில் இணையும் பட்சத்தில் கடந்த காலங்களில் அரசின் அனுசரணையோடு இடம்பெற்ற அடாவடித்தனங்களுக்கு இந்த நாட்டின் நூற்றுக்கு நூறு வீதம் முஸ்லிம்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் எதிர்ப்பென்ற செய்தியை தேசியத்துக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பாய் அமையுமென்பதே வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் கருத்தாகும் என்று அந்த இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team