அரசுத்துறைகள் மீது சைபர் தாக்குதல்!!

Read Time:4 Minute, 43 Second

அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசின் முக்கிய துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் உள்துறை, பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் போன்ற 9 அரசு துறைகள் மற்றும் மைக்ரோசொப்ட் உட்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சைபர் தாக்குதல் பல மாதங்களாக நடந்து கொண்டிருப்பதாகவும் இதனை தடுப்பது மிகவும் சிக்கலானது என்றும் அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு பாதுகாப்பு முகமை (சி.ஐ.எஸ்.ஏ) அப்போது கூறியது.

மேலும் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த சோலார் விண்ட்ஸ் என்கின்ற ஐ.டி. நிறுவனத்தின், நெட்வொர்க் மேனேஜ்மெண்ட் மென்பொருளைப் பயன்படுத்திதான், சைபர் தாக்குதல் நடத்தியவர்கள், அமெரிக்காவின் முக்கிய கம்ப்யூட்டர்களில் நுழைந்ததாக சி.ஐ.எஸ்.ஏ.‌ கூறியது. இதனால் இந்த சம்பவம் ‘சோலார் விண்ட்ஸ் ஹேக்கிங்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷியா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ரஷியா அதனை மறுத்தது.

அதே சமயம் ‘சோலார் விண்ட்ஸ் ஹேக்கிங்’ தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின்போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித் இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷியாவின் உளவுத்துறை இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதாக கூறினார். ஆனால் ரஷியா இந்த குற்றச்சாட்டையும் திட்டவட்டமாக மறுத்தது.

இந்த சைபர் தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் அப்போது “எனது நிர்வாகத்தில் சைபர் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். முதலில் சைபர் தாக்குதல்களை நடத்தும் எதிரிகளை நாம் தடுக்க வேண்டும். நம் கூட்டாளிகள் மற்றும் நம் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, இதுபோன்ற தீங்கிழைக்கும் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் மீது கணிசமான அபராதங்களை விதிப்பதன் மூலம் அதைச் செய்வோம்” என கூறியிருந்தார்.

இந்த நிலையில் ‘சோலார் விண்ட்ஸ் ஹேக்கிங்’ விவகாரத்தில் ரஷியா மீது வலுவான பொருளாதார தடைகளை விதிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‌

தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்த தகவலின் பேரில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் சைபர் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷியா மீது பொருளாதார தடைகள் உள்ளிட்ட மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க ஜோ பைடன் நிர்வாகம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 வாரங்களுக்குள் ரஷியாவுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous post உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையின் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம் – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
Next post குழப்பங்களை விளைக்கும் மாணவர்களுக்கு தண்டனை வழங்கவும், பரீட்சை முடிவுகளை இரத்து செய்யவும் நடவடிக்கை