அரசு பொறுப்புடன் நடந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளது : இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அரசுக்கு புகழாரம் ! - Sri Lanka Muslim

அரசு பொறுப்புடன் நடந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளது : இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அரசுக்கு புகழாரம் !

Contributors

நூருல் ஹுதா உமர்

ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வொன்றினை முன்வைத்தனூடாக அரசு பொறுப்புடன் நடந்துள்ளதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள முரண்பாட்டுக்கான அரசின் அறிவிப்பு தொடர்பில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

சங்கத்தின் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா, செயலாளர் எம்.கே.எம்.நியார் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கடந்த இரண்டரை தசாப்தங்களாக அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. 1997 ஆம் ஆண்டு முதல் மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் இவ்விடயத்தை அலைக்கழித்தே வந்துள்ளனர். மூன்று மாதகாலத்திற்கும் அதிகமாக தொழிற்சங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது. எனினும் அரச தரப்பினர் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்மானமொன்றுக்கு வராமையால் போராட்டங்கள் மாற்று வடிவங்களை நோக்கி நகர்ந்தன. இதனை மேலும் வளர விடாமல் தடுக்கின்ற; ஆசிரியர்கள் திருப்தியடையக் கூடிய தீர்வொன்றுக்கு அரச தரப்பு வந்துள்ளமையானது வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானமாகும்.

அதிபர்,ஆசிரியர்களைத் தொடர்ந்தும் வீதிகளில் அலைய விடக் கூடாது என்ற முடிவுக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ அவர்களுக்கும் இத்தீர்மானத்திற்கு உந்து சக்தியினை வழங்கி, செயற்படுத்திய பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டோருக்கு அதிபர், ஆசிரியர் சமூகத்தின் சார்பில் கௌரவமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். வரவு செலவுத் திட்டத்தில் ஒட்டு மொத்த கல்விக்காக (7.5 வீதம்)அதிகமான தொகையினை ஒதுக்கிய ஆட்சியாளர் வரிசையில் இந்த அரசுக்கு முன்னுரிமை இடம் கிடைத்துள்ளது பாராட்டத்தக்க அம்சமாகும்.

1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட டீ.சி.பெரேரா ஆணைக்குழு முதல் அதிபர், ஆசிரியர்கள் ஏமாற்றப்பட்டு வந்த நிலையில் சுபோதினி சம்பள முரண்பாட்டு அறிவிப்பினை தாமாகவே முன்மொழிந்து அதன் மூன்றில் ஒருபங்கை வழங்குவதாக வழங்கப்பட்டுள்ள வாக்குறுதியினால் நாம் ஆறுதல் அடைகின்றோம். எனினும் சுபோதினி அறிக்கையினை முழுமையாக பெறுவதே அதிபர்,ஆசிரியர் சமூகம் முழுப் பயனையும் திருப்தியுடன் அனுபவிக்கும் காலமாகும். கூட்டிணைந்த தொழிற்சங்கங்களின் பிரதான ஆர்ப்பாட்ட முன்னெடுப்புக்கள் மற்றும் பிராந்திய முன்னெடுப்புக்களில் இணைந்து பணியாற்றிய அனைத்து அதிபர், ஆசிரியர்களும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. அவர்களுக்கு எமது தாழ்மையான நன்றிகள் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Web Design by Srilanka Muslims Web Team