'அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அச்சமடைய வேண்டாம்' - மஹிந்த அமரவீர! - Sri Lanka Muslim

‘அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அச்சமடைய வேண்டாம்’ – மஹிந்த அமரவீர!

Contributors

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குப் போதுமான அரிசி தொகை நாட்டில் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பற்றாக்குறையாக உள்ள அரிசி தொகை வர்த்தக அமைச்சினால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வருடாந்த அரிசி நுகர்வானது 24 இலட்சம் மெட்ரிக்  தொன்னாக உள்ளநிலையில், வருடாந்த அரிசி உற்பத்தியானது 16 இலட்சம் மெட்ரிக் தொன்னாக காணப்படுகிறது.

இந்த அறுவடையானது 8 மாத காலப்பகுதிக்குப் போதுமானதாகும். எனவே, நான்கு மாத காலப்பகுதிக்கு அரிசி பற்றாக்குறையாகும் நிலைமை உள்ளது. இம்முறை சிறுபோகத்தில் திட்டமிடப்பட்ட பயிர் நிலத்திற்கு அதிகமான நிலப்பரப்பில் பயிரிடுவதற்கு விவசாயிகள் முன்வந்துள்ளனர்.

2020ஆம் ஆண்டு சிறுபோகத்தில் 443,362 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டது. 2021ஆம் ஆண்டு இந்த நிலப்பரப்பின் அளவானது 445, 000 ஹெக்டேயராக காணப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த ஆண்டு குறித்த பயிர் நிலத்தின் அளவானது 447,000 ஹெக்டேயராக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு முன்னதாக, 244, 000 ஹெக்டேயர் நிலப்பரப்பில், பயிர் நடவடிக்கை நிறைவுசெய்யப்பட்டிருந்தது. எனினும், தாங்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, தற்போது 447, 000 ஹெக்டேயரில் பயிரிடும் பணிகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தற்போது, அரிசியைக் கொள்னவு செய்து களஞ்சியப்படுத்தப் பார்க்கின்றனர். தற்போதைய நிலைமையில், இந்த ஆண்டின் இறுதி சில நாட்களின் போதே அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கே அரிசி தேவையாக உள்ளது. 339,000 மெட்ரிக் தொன் அரிசி கடந்த வாரம் கொள்வனவு செய்யப்பட்டது.

இந்தத் தொகையை விடவும், இன்னும் சிறிதளவான அரிசியே அவசியமாக உள்ளது. அதற்கான முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பை முகாமை செய்வதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபையின் கையிருப்பில் உள்ள நெல் தொகையினை அரிசியாக சந்தைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அச்சமடைந்து, பொதுமக்கள் அரிசியைக் கூடுதலாக கொள்வனவு செய்து சேமித்து வைக்கவேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team