அலிசாஹிர் மௌலானா அமைச்சரான கதையும், ஹக்கீமின் மீசையில் ஒட்டாத மண்ணும்! - Sri Lanka Muslim

அலிசாஹிர் மௌலானா அமைச்சரான கதையும், ஹக்கீமின் மீசையில் ஒட்டாத மண்ணும்!

Contributors
author image

Editorial Team

முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமுன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்று கிடைத்திருக்கிதல்லவா? அந்தப் பதவி எப்படிக் கிடைத்தது என்கிற தகவல்கள் இப்போது மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளன.

மு.காங்கிரசுக்கு மொத்தமாக 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் அலிசாஹிர் மௌலானா மட்டும்தான் மு.காங்கிரசின் மரச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர். தலைவர் ஹக்கீம் உட்பட ஏனையோர் 06 பேரும் ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் வழியாகவும் நாடாளுமன்றம் வந்தவர்களாவர்.

#யாரிந்த அலிசாஹிர்!

இந்த இடத்தில் அலிசாஹிர் மௌலானா பற்றி சற்றுக் கூற வேண்டும். அடிப்படையில் இவர் ஐ.தே.கட்சிக்காரர். 1994ஆம் ஆண்டு முதன் முதலாக, அதாவது மு.கா. தலைவர் நாடாளுமன்றம் சென்றபோது, அலிசாஹிரும் சென்றார்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரைச் சேர்ந்த அலிசாஹிர் மௌலானா – நல்ல குடும்பப் பின்னணியைக் கொண்டவர்.

முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளரும் அமைச்சருமான பசீர் சேகுதாவூத்தை அரசியலில் வீழ்த்துவதற்காக மு.கா. தலைவர் ஹக்கீம் – அலிசாஹிரைப் பயன்படுத்திக் கொண்டார். இத்தனைக்கும் முஸ்லிம் காங்கிரசுக்குள் அலிசாஹிர் வருவதற்கு பசீர் பெரிதும் காரணமாக இருந்தார் என்பது வேறு கதை.

எது எவ்வாறாயினும், தனக்கு ஜால்ரா அடிப்பவர்களையும் தன்னைப் பற்றி புகழ்பாடுகின்றவர்களையும்தான் மு.கா. தலைவர் ஹக்கீமுக்குப் பிடிக்கும் என்பது யாவரும் அறிந்ததுதான். ஆனால், அலிசாஹிர் மௌலானா அந்த வகை ஆளில்லை என்பதால், அவரை ஹக்கீம் சற்து தூரமாகவே வைத்திருந்தார்.

#ஹக்கீமின் பக்கச்சார்பு!

இதுபோக, ஏறாவூர்காரர்களான மு.காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீருக்கும் அலிசாஹிர் மௌலானாவுக்கும் வெட்டுக்குத்து ஆரம்பமானதிலிருந்து, ஹாபிஸ் நசீரின் பக்கமாகவே ஹக்கீம் சாய்ந்து வருகின்றார். இது – அலிசாஹிர் மௌலானாவுக்கு ஹக்கீம் மீது பெருத்த கோபத்தை ஏற்படுத்தியது.

இவை அனைத்துக்கும் மருந்து கட்டுவதற்காக அலிசாஹிர் காத்துக் கொண்டிருந்த போதுதான் அமைச்சரவை மாற்றம் பற்றிய பேச்சு எழுந்தது.

#சந்திப்பு!

ஜனாதிபதியை அலிசாஹிர் நேரடியாகச் சந்தித்துப் பேசினார். இதன் பிறகு ஜனாதிபதி – பாகிஸ்தானுக்கும் பின்னர் லண்டனுக்கும் சென்ற போது, அலிசாஹிரையும் அழைத்துச் சென்றார். அங்கு இருவருக்கும் இடையில் நெருக்கம் இன்னும் அதிகமானது.

இதனையடுத்து பிரதியமைச்சர் பதவியொன்றினை அலிசாஹிருக்குக் கொடுப்பதென ஜனாதிபதி முடிவு செய்தார். இந்த விடயங்கள் எவையும் மு.கா. தலைவருக்குத் தெரியாது.

#அதிர்ந்தார் ஹக்கீம்!

இந்த நிலையில், ஒரு நாகரீகத்துக்காக மு.கா. தலைவரை தொலைபேசியில் ஜனாதிபதி தொடர்பு கொண்டு; “அலிசாஹிர் மௌலானாவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்றினைக் கொடுப்போமா” என்று கேட்டதாகத் தெரியவருகிறது.

ஜனாதிபதி இவ்வாறு கேட்டபோது – அப்படியே ஹக்கீம் அதிர்ந்து போயிருக்கிறார். தான் எதிர்த்தாலும் அலிசாஹிருக்கு பிரதியமைச்சு கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்ட ஹக்கீம், அந்த விடயத்தில் மூக்குடைபடாமல்; “பிரச்சினையில்லை கொடுங்கள்” எனக் கூறினாராம்.

இருந்த போதும், தனக்குத் தெரியாமல் அலிசாஹிர் – ஜனாதிபதியிடம் சென்று பிரதியமைச்சர் பதவி பெற்றுக் கொண்டமை தொடர்பில் மு.கா. தலைவர் ஹக்கீம் செம கடுப்பில் இருப்பதாக மு.காங்கிரசின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#கோபம்!

ஆனாலும், கோபத்தில் எதையாவது தான் செய்யப் போனால், அலிசாஹிர் மௌலானா மொத்தமாகக் கட்சி மாறி விடுவார் என்கிற பயமும் ஹக்கீமுக்கு உள்ளது. அலிசாஹிர் அப்படிக் கட்சி மாறினால், மு.கா.வுக்கு இருக்கும் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் இழக்க வேண்டியேற்படும் என்பதால் – ஹக்கீம் பல்லைக் கடித்துக் கொண்டு, சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கிராராம்.

ஆமாம் மகாஜனங்களே, இப்படித்தான் அலிசாஹிர் பிரதிமைச்சரானார்.
(நன்றி இணையம் – புதிது)

Web Design by Srilanka Muslims Web Team