அழிவு வந்தே தீரும், காத்திருங்கள் - மனோ கணேசன் சாபம் - Sri Lanka Muslim

அழிவு வந்தே தீரும், காத்திருங்கள் – மனோ கணேசன் சாபம்

Contributors

வடபகுதியின் இந்து கோவில் அழிப்பு, கொள்ளை கலாச்சாரம் மலையகத்துக்கும் பரவி, இப்போது மேல்மாகாணத்துக்கும் வந்துவிட்டதா, என்ற கேள்வி இப்போது எம்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு கல்கிசை படோவிட 2ம் வட்டார ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான காணிக்கை உண்டியல் நேற்று இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஒரு வாரத்தில் நான்கு இந்து கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் மலையகத்தில் நடைபெற்றுள்ளன.

வடபகுதியின் இந்து கோவில் அழிப்பு, கொள்ளை கலாச்சாரம் மலையகத்துக்கும் பரவி, இப்போது மேல் மாகாணத்துக்கும் வந்துவிட்டதா, என்ற கேள்வி இப்போது எம்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொள்ளை சம்பவத்துக்கு உள்ளான கல்கிசை படோவிட 2ம் வட்டார ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்துக்கு நேரடியாக இன்று காலை சென்ற மனோ கணேசன், அங்கு ஆலய குருக்கள் மற்றும் அறங்காவலர் சபை உறுப்பினர்களிடம் நடந்த சம்பவம் பற்றி விசாரித்து அறிந்து கொண்டார்.

மனோ கணேசனுடன் ஜமமு மாநகர சபை உறுப்பினர்கள் சண்.குகவரதன், எஸ். பாஸ்கரா ஆகியோரும் சென்றிருந்தனர்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது,

 

இச்சம்பவம் பற்றி பொலிஸ் மா அதிபர் இலங்ககோனுக்கு அறிவித்து என் அதிருப்தியை தெரிவித்துள்ளேன். இது இரண்டு நாட்களில் பொலிஸ்மா அதிபருக்கு நான் நேரடியாக அறிவித்த ஐந்தாவது கோவில் கொள்ளை சம்பவமாகும்.

இந்த சம்பவத்தில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு, திருவிழா காணிக்கை நிதி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இரத்தினபுரி மாவட்ட கொலொன்ன போலிஸ் பிரிவிலும், மாத்தறை மாவட்ட தெனியாய பொலிஸ் பிரிவிலும் நான்கு சம்பவங்கள் நடைபெற்று கோவில் உண்டியல் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த கொள்ளைகளை யார் செய்கிறார்கள்? இவை இந்துக் கோவில்களை குறிவைத்து திட்டமிட்டு செய்யப்படும் சம்பவங்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த குற்றச்செயல்களை எவர் செய்தாலும், இந்நாட்டு வரலாற்றில் என்றும் இல்லாதவாறு, இந்து கோவில்களின் மீது கை வைக்கும் அளவுக்கு காடைத்தன சிந்தனையை இன்று இந்நாட்டில் ஊட்டி வளர்ப்பது யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.

இந்நாட்டில் இன்று இந்து தமிழர்கள் கேட்பாரற்ற சமூகத்தினராக, நாதியற்றவர்களாக இருக்கின்றார்கள் என சிலர் நினைக்கிறார்கள். இப்படி நினைபவர்களுக்கு விரைவில் நாம் யார் என்பதை சாத்வீகமாக எடுத்து காண்பிப்போம்.

இந்த குற்றசெயல்களுக்கான முன்மாதிரியை இந்த அரசாங்கமே செய்து காட்டி தந்துள்ளது.வடக்கில் இந்து கோவில்கள இடித்து தரைமட்டம் ஆக்கப்படுகின்றன. அதை பார்வையிட சென்ற வடக்கு இந்து முதலமைச்சரை உள்ளே விட மறுத்துள்ளார்கள்.

தம்புள்ளையிலும், கொழும்பு, கொள்ளுபிட்டியிலும் இரண்டு இந்து அம்மன் கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இது அரசாங்கத்தின் நேரடி வேலை.

இதுபோல் இந்நாட்டில் அரச ஆதரவுடன் செயல்படும் பெளத்த மத தீவிரவாதிகள் கோவில்களையும், பள்ளிகளையும்,தேவாலயங்களையும் தாக்குகிறார்கள்.

இத்தகைய சம்பவங்களினால், சாதாரண குற்றவாளிகளுக்கும் ஆலயங்களில் கை வைக்கும் துணிச்சல் ஏற்பட்டுள்ளது.இன்று இந்நாட்டில் தாம் எதிர்கொள்ளும் நாளாந்த சவால்களினால் நிர்க்கதியாகியுள்ள பொதுமக்கள் கடைசியாக சரணடையும் இடமாக வணக்க ஸ்தலங்களே உள்ளன.இந்நிலையில் வணக்க ஸ்தலங்களையும் விட்டு வைக்காத கொள்ளை கலாச்சாரம் வெகு வேகமாக பரவி வருகிறது. இதனுடன் இன்று பேரினவாத, மதவாத தீவிரவாதமும் சேர்ந்து கொண்டுள்ளது.

இதனால் குற்றவாளி கும்பல்கள் மேலும் ஊக்குவிக்கப்பட்டு சிறுபான்மை இனத்தவரின் கோவில்கள்,பள்ளிகள், தேவாலயங்கள் குறிவைக்கப்படுகின்றன. இதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.

இன்று இவைபற்றி நானும் சலிக்காமல் பொலிஸ் மாதிபருக்கும், அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் முறையிட்டு வருகிறேன். ஊடகங்களும் இந்த அநீதிகளை பற்றி நாட்டிற்கு அறிவித்து தங்கள் கடமைமையை செய்து வருகின்றன.

பொலிஸ் விசாரணைகள் மூலம் தீர்வு பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஆனால், இந்நாட்டில் இன்று தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் கேட்பாரற்ற, நாதியற்ற மக்கள் என எவரும் நினைத்து விடக்கூடாது என்பதாலேயே எம்மாலான இயன்ற உடன் நடவடிக்கைகளையும் நாம் எடுக்கின்றோம்.

அநீதிகளை தட்டி கேட்காமலேயே இருந்தால் இத்தகைய சம்பவங்கள் நாடு முழுக்க இன்னமும் அதிகமாக பரவும் அபாயம் இருக்கிறது.

குற்றவாளிகள் தற்காலிகமாக சட்டத்தின் பிடியில் இருந்து தப்பினாலும், ஆண்டவன் சாபத்துக்கு ஆளாவார்கள் என்பது திண்ணம்.

இந்து தமிழர்கள் அல்லது சிறுபான்மை மக்கள் கேட்பாரற்றவர்கள் என எண்ணி அம்மன் கோவில்களை கொள்ளையடிக்கும் திருட்டு கும்பல்களுக்கும், கோவில்களையும், பள்ளிகளையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும் இடித்து, இந்த குற்றவாளிகளை தட்டிகொடுத்து அவர்களுக்கு முன்மாதிரி தரும் இந்த அரசாங்கத்துக்கும், அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படும் மதவாத கும்பல்களுக்கும் இதை நான் கூறி வைக்க விரும்புகிறேன்.

அழிவு வரும்! வந்தே தீரும்! காத்திருங்கள்.

 

Web Design by Srilanka Muslims Web Team