"ஆசிரியர்களின் வழிகாட்டல்கள் சிறந்த ஆளுமைகளை உருவாக்கும்" - ரிஷாட்! - Sri Lanka Muslim

“ஆசிரியர்களின் வழிகாட்டல்கள் சிறந்த ஆளுமைகளை உருவாக்கும்” – ரிஷாட்!

Contributors

ஆசிரியர்களின் வழிகாட்டல்கள் மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்துவதில் பெரும் பங்காற்றுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

“ஒரு சமூகத்தின் ஒழுக்க விழுமியம் மாணவர்களின் வளர்ப்பு நெறியில் தங்கியுள்ளது. மாணவச் சிறார்களின் சிந்தனைகளை நெறிப்படுத்தும் ஆசான்களின் அர்ப்பணிப்புக்களை கௌரவிக்கும் பொறுப்பு கல்விச் சமூகத்துக்கு உண்டு. இதனடிப்படையில்தான் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

சிறந்த இலட்சியங்கள், சமூகத்தின் ஒழுக்க விழுமியங்களுக்கு அடிகோலாக அமைவது ஆசிரியர்களின் வழிகாட்டல்கள்தான். இதை, ஆரம்பத்திலிருந்து பயிற்றுவிக்கும் பொறுப்பு ஆசிரியர் சமூகத்திடமே ஒப்படைக்கப்படுகிறது. இவர்களது சேவைகளுக்கு நிகராக எதுவுமில்லை. இந்தச் சேவைகளால்தான் வைத்தியர்கள், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பெறுமதியான மனிதவலுக்கள் உருவாகின்றன. இந்த வலுக்களின் அத்திவாரம் ஆசிரியர்கள்தான்.

இவ்வாறு உருவாக்கப்படும் மாணவர்கள் ஒழுக்கமின்றிப் போனால், சமூகத்தால் எந்த நன்மைகளையும் அடைந்துகொள்ள முடியாது. இதற்காகவே, ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்கள் காலத்தால் அழியாதுள்ளது” என்று தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team