'ஆசிரியம் என்பது ஓர் இறைவணக்கம்' - ஆசிரியர்கள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்! - Sri Lanka Muslim

‘ஆசிரியம் என்பது ஓர் இறைவணக்கம்’ – ஆசிரியர்கள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்!

Contributors

கற்பித்தல் என்பது சமூகக் கட்டுருவாக்கலுக்கான ஆளுமைகளை உருவாக்கும் பணியாகும். அது ஓர் உயரிய ஸதகதுல் ஜாரியாவாகும். தொழில் என்று கருதாமல் தொண்டு செய்யும் ஓர் அறப்பணி. மறுமையில் அல்லாஹ்விடம் வகைசொல்ல வேண்டிய பொறுப்பு. மாணவர்களை பக்குவப்படுத்தும் ஒரு மகத்தான பணி. மொத்தத்தில் ஆசிரியம் என்பது ஓர் இறைவணக்கம்.

ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களின் நம்பிக்கை. ஒவ்வொரு மாணவர்களையும் எதிர்கால வாழ்க்கைக்குத் தகுந்தவாறு பட்டைதீட்டி எடுக்கும் அமானிதத்தை சுமந்தவர்கள்.
ஆசிரியம் என்பது சாதாரணமானதொரு பணியல்ல. அர்ப்பணிப்பு, தியாகம், அன்பு, அக்கறை, பொறுமை, கற்பித்தல் மீதான ஈடுபாடு, தொழில் முனைப்பு, தொடர்ச்சியான கற்றல் மற்றும் வாசிப்பு, கற்பித்தல் திறன் என பல்வேறு அம்சங்களை அது வேண்டிநிற்கிறது.

கற்பித்தல் அல்லாஹ்வின் பணிகளில் ஒன்றாகும். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்தான் அவனுக்குக் கற்றுக் கொடுத்தான் என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

‘அவனே மனிதனுக்கு குர்ஆனைக் கற்றுக்கொடுத்தான். அவனே மனிதனுக்கு பேசும் மொழியின் விளக்கத்தை கற்றுக்கொடுத்தான்’. (ஸுரா அர்ரஹ்மான்: 2,4)

அல்லாஹுதஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அறிமுகப்படுத்தும்போது, ‘மக்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் போதிப்பவர், கற்றுக்கொடுப்பவர்’ என்று அறிமுகப்படுத்துகிறான். (ஸுரா அல் ஜுமுஆ: 2)

அதேபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தன்னை, ‘நான் இந்த உலகத்திற்கு ஓர் ஆசிரியராகவே அனுப்பப்பட்டுள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள். மற்றொருமுறை ‘அல்லாஹ் என்னை கடுமையானவனாகவோ எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பிவைக்கவில்லை. மாறாக (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே அனுப்பியுள்ளான்’ என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

அதேபோன்று ஸஹாபாக்களும் நபியவர்களை தமக்கான ஓர் ஆசானாகவே கருதியிருக்கிறார்கள். உலகில் தோன்றிய எல்லா நபிமார்களும் ஆசான்;களாகவே திகழ்ந்துள்ளனர். அத்தகைய இறைத்தூதர்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்களே உண்மையான ஆசிரியர்கள்.

உலகிலுள்ள அனைத்து ஆசிரியர்களையும் கௌரவப்படுத்தும் வகையிலும் ஆசிரியப் பணியை ஊக்குவிக்கும் நோக்கிலும் அக்டோபர் 05 ஆம் திகதியை ஐ.நா சபை ‘சர்வதேச ஆசிரியர் தினமாக’ பிரகடனப்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டு சர்வதேச ஆசிரியர் தினமானது, ‘கல்வி ரீதியிலான மாற்றம் ஆசிரியர்களிடமிருந்தே துவங்குகிறது’ எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆரோக்கியமானதோர் ஆசிரியர் சமூகத்தினாலேயே சிறந்ததொரு மாணவர் சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். எனவே அர்ப்பணிப்போடும் சமூக அக்கறையோடும் அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் (இக்லாஸ்) ஆசிரியப் பணி செய்யும் அத்தனை ஆசிரியர்களுக்கும் அல்லாஹ் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் அருளவேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.

ஆசிரியர்கள் எப்போதும் மதிக்கப்படவேண்டியவர்கள். அவர்களை கண்ணியமாக நடாத்துவதும் சமூகத்தில் அவர்களுக்குரிய இடத்தை வழங்குவதும் எமது தார்மீகக் கடமையாகும். ஆசிரியம் என்பது மனத்திருப்தியையும் மாணவர்களின் பிரார்த்தனைகளையும் பெற்றுத்தருகின்ற மகத்தான பணியாகும். எனவே இவ்வுயர்ந்த சேவையை ஆர்வத்தோடும் விருப்பத்தோடும செய்வதற்கான பக்குவத்தை எமது இளம் சமூகத்தினரிடையே ஏற்படுத்துவது அவசியமாகும்.

அக்கறையுடனும் அன்பு கலந்த கண்டிப்புடனும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுடனும் எந்த ஆசிரியர்கள் தமது மாணவர்களை அணுகுகிறார்களோ அந்த ஆசிரியர்களும் தோற்பதில்லை. அவர்களது மாணவர்களும் தோற்பதில்லை என்பார்கள். அவ்வாறான வினைத்திறன் மிக்க கற்பித்தலை சாத்தியப்படுத்துகின்ற, மாணவர்களின் நடத்தை மற்றும் மனப்பாங்கு மாற்றத்தில் நேர்மறையான செல்வாக்கைச் செலுத்துகின்ற, முன்மாதிரிமிக்க நல்லாசிரியர்களாக மிளிர ஆசிரியர்களுக்கு எமது வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இறைதிருப்தியையும் சுவனத்தையும் இறுதி இலக்காகக் கொண்ட எம்மனைவரது பணிகளையும் அல்லாஹுத்தஆலா பொருந்திக்கொண்டு நிரப்பமான கூலியைத் தந்தருள்வானாக.

 

அஷ்-ஷைக் எச். உமர்தீன்
பதில் தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Web Design by Srilanka Muslims Web Team