'ஆட்சிகள் மாறினாலும் மாற்றமடையாத கொள்கைகள் பின்பற்றப்படுவது அவசியம்' - அதாஉல்லா! - Sri Lanka Muslim

‘ஆட்சிகள் மாறினாலும் மாற்றமடையாத கொள்கைகள் பின்பற்றப்படுவது அவசியம்’ – அதாஉல்லா!

Contributors

ஆட்சிகள், அரசாங்கங்கள் மாறினாலும் மாற்றமடையாத கொள்கைகள்தான் நாட்டின் வளர்ச்சிப்பாதைக்கு வழிகோலும், இவ்வாறான திட்டங்களே இடைக்கால பட்ஜட்டில் முன்மொழியப்பட்டுள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ,எல்,எம் அதாஉல்லா தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் பற்றி ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையிலே இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி தேசிய காங்கிரஸ்  தலைவர் தெரிவித்ததாவது,

நாட்டின் ஸ்திர வளர்ச்சிக்கு நிலையான பொருளாதாரக் கொள்கை,நிலையான வெளிநாட்டுக் கொள்கை மற்றும் சகல இனங்களையும் வாழ வைக்கும் நிலையான அரசியலமைப்பே தேவை.இதுபற்றி எமது  தேசிய காங்கிரஸ் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. ஆட்சிகள் மாறுகின்ற போது, நடைமுறையிலிருந்த கொள்கைகள் மாற்றப்படுகின்றன.பின்பற்றப்பட்டு வந்த பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் செய்யப்படுகின்றன. சில தேவைகளின் நிமித்தம் வெளிநாட்டுக்கொள்கைளும் மாற்றப்படுகின்றது.இதனால்,அரச அதிகாரிகள், நிர்வாகிகள்  தங்களது வினைத்திறனை திறம்படச் செய்ய முடியாது போகின்றது. இம்மூன்று துறைகளிலும் மாற்றமடையாத கொள்கைகள் அவசியம்.

இயற்கை வளங்களை வைத்துக் கொண்டு தொடர்ந்தும் இறக்குமதி பொருளாதாரத்தை யே நாம் பின்பற்றுகிறோம். வெங்காயம், அப்பிள் மற்றும் பருப்பு போன்றவற்றை இறக்குமதி செய்ய அதிகளவு டொலரைச் செலவிடுகிறோம்.நாட்டின் பாரம்பரிய ஏற்றுமதிப் பொருட்களான தென்னை, ரப்பர், கோப்பி,ஏலம் என்பவற்றால் பெறப்பட்ட வருமானங்களையும் இப்போது இழந்துள்ளோம். விவசாயிகளைப் பலப்படுத்தாமல், வியாபார அரசியல் செய்ததால்தான் இன்று இந்நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

அடிக்கடி மாறிய அல்லது மாற்றப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுகளே இது.பாடசாலை செல்லும் மாணவர்களின் கொப்பி,ரப்பர் என்பவற்றைக் கூட உற்பத்தி செய்ய எமக்கு முடியாதுள்ளது.  வெளிநாடுகளின் தேவைகளுக்காக எமது நாட்டு வளங்கள் பயன்படுத்தப்படுவதை நாம் நிறுத்த வேண்டும். இலங்கையின் இயற்கை வளங்களைச் சுரண்டி எம்மை இயலாமைக்கு ஆளாக்கும் அரசியல் சக்திகளுக்கு இடமளிக்க முடியாது.நமது உறவுகளுக்குள்ளே பிரச்சினை, பிரிவினையைத் தூண்டி நம்மைக் கையேந்த வைக்கும் அந்நிய சக்திகள் இனியும் இங்கு வாழ  முடியாது.

எல்லோரும் எமது நாட்டின் வளங்களை வளர்ச்சியடைவதற்காக அல்லது வல்லரசாவதற்காகவே பயன்படுத்த வருகின்றனர்.பாடல்கள் ரசனையாக இருந்தால் ஆடிப்பாடி மகிழலாம்.

அதற்காக வானொலிப்பெட்டியில் மேளம் தட்டி அதை உடைக்கக்கூடாது.

இங்கே, எல்லோரும் முதலிடலாம்.மூலதனங்களைத் தரலாம். பயன்பாடுகளையும்,ஆதாயங்களையும் நாமே தீர்மானிக்க வேண்டும். காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள், இனவாதச் சிந்தனைகளை சாவின் மடியில் கொண்டு சென்றிருக்கிறது. இனிமேலாவது,ஒன்றுபடுவது பற்றிச் சிந்திப்போம் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team