ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக மாறியமை என் கிரிக்கெட்டில் முக்கியமானது: டில்ஷான் - Sri Lanka Muslim

ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக மாறியமை என் கிரிக்கெட்டில் முக்கியமானது: டில்ஷான்

Contributors

 

இலங்கை சார்பாக டெஸ்ற் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக மாற எடுத்த முடிவு தனது கிரிக்கெட் வாழ்வின் முக்கியமான அம்சம் என இலங்கை அணியின் திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார். தனது ஓய்வு தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணி சார்பாக டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடி வரும் திலகரட்ண டில்ஷான், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போது, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கும் முடிவு தனக்குச் சாதகமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.
மத்திய வரிசை வீரராகக் களமிறங்கும் போது சில நேரங்களில் தன்னோடு இணைப்பாட்டத்தைப் புரிவதற்குத் துடுப்பாட்ட வீரர்கள் இருக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்ட டில்ஷான், அதன் காரணமாக தன்னால் அதிகளவு பங்களிப்புகளை வழங்க முடிந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கும் போது அணிக்கு அதிகமான பங்களிப்புகளை வழங்க முடிந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கும் காலங்களில் அதிக பெருமையுடன் விளையாடியதாகக் குறிப்பிட்டார்.
ஏராளமான திறமையான இளம் வீரர்கள் இலங்கை அணிக்கு வந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களுக்கான வாய்ப்புக்களை வழங்குவதற்காக இந்த முடிவை எடுத்ததாகவும், இடம்பெறவிருந்த சிம்பாப்வே தொடரின் பின்னர் ஓய்வு பெறவிருந்ததாகவும், ஆனால் அத்தொடர் இடம்பெறாததன் காரணமாக தற்போதே ஓய்வு பெறும் முடிவை அறிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team