ஆளும் தரப்புக்கு மற்றுமொரு தலையிடி! மைத்திரி தரப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பரபரப்பு - Sri Lanka Muslim

ஆளும் தரப்புக்கு மற்றுமொரு தலையிடி! மைத்திரி தரப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பரபரப்பு

Contributors
author image

Editorial Team

மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டணியை ஏற்படுத்த தமது கட்சி தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர(Dayasri Jayasekara)தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியுடனான கூட்டணி, முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிக்காவின் காலத்திலும் மகிந்த ராஜபக்ச காலத்திலும் அமைக்கப்பட்டன எனவும் அவர் கூறியுள்ளார்.

2001 ஆம் ஆண்டு சந்திரிக்காவின் காலத்திலும் 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் காலத்திலும் மக்கள் விடுதலை முன்னணியுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து ஆட்சியமைத்தனர்.

அதன் ஊடாக சில செயற்பாடுகளை நிறைவேற்றினர். இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டணி அமைப்பது என்பது புதிய விடயம் என நான் நினைக்கவில்லை.

இதனால், இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணியை ஏற்படுத்தக் கூடிய சாதகமான நிலைமைகள் காணப்படுகின்றன. தற்போது இந்த நிலைமை தெளிவாக உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது கொள்ளையர்கள், கொலைகாரர்கள் இல்லை. சுதந்திரக் கட்சி தற்போது தூய்மையான கட்சியாக இருக்கின்றது.

இதனால், மக்கள் விடுதலை முன்னணி போன்ற தூய்மையான கட்சிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியை ஏற்படுத்தி நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இது சம்பந்தமாக இன்னும் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை.

இடதுசாரிகள் கட்சிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என்றே சுதந்திரக்கட்சி கருதுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக விரிவான கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் என்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாக இருக்கின்றது என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் தரப்பில் பங்காளிக் கட்சியாக இருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த அறிவிப்பானது அரசாங்கத்திற்கு மற்றுமொரு தலையிடியாக அமைந்துள்ளதுடன், அரசியல் பரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team