இணைப்போ, பிரிப்போ நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாணமே நிரந்தரமான தீர்வு - மர்சூக் அஹ்மத் » Sri Lanka Muslim

இணைப்போ, பிரிப்போ நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாணமே நிரந்தரமான தீர்வு – மர்சூக் அஹ்மத்

MARSOOK

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

– ரி. தர்மேந்திரன் –


இணைந்த வடக்கு – கிழக்கும் சரி, பிரிந்த கிழக்கும் சரி முஸ்லிம்களுக்கான தீர்வாக அமைய போவதே இல்லை, முற்றிலும் நில தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் ஒன்று இணைந்த வடக்கு – கிழக்கிலோ, பிரிந்த கிழக்கிலோ அமைத்து கொடுக்கப்படுவதே நிரந்தர தீர்வு ஆகும், அரசியல் அமைப்பு திருத்தத்தில் முஸ்லிம்களுக்கான தனி அலகுத் தீர்வு கட்டாயம் உள்ளடக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், காத்தான்குடியின் முன்னாள் நகர பிதாவுமான மர்சூக் அஹ்மத் லெப்பை எமக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-

கேள்வி:- உங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான தொடர்பு என்ன?
பதில்:- எனது தந்தையார் அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை அவர்களுடைய தலைமையிலும், சிந்தனையிலுமே முஸ்லிம் அரசியல் இயக்கமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றது என்பது வரலாற்று உண்மை ஆகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவரால் 1980 ஆம் ஆண்டு காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் எம். எச். எம். அஷ்ரப் பங்கேற்று இருந்தார். அப்போது எனக்கு 19 வயது இருந்திருக்கும்.

எனது தந்தையார் முஸ்லிம்களின் தேசிய அரசியலிலும், மட்டக்களப்பு மாவட்ட அரசியலிலும் கிங் மேக்கராக விளங்கினார். காத்தான்குடியை தளமாக கொண்டு சமய, சமூக, கல்வி, அரசியல் பணிகளை முன்னெடுத்தார். 1958 ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியல் ஈடுபட்டு வந்த இவர் காத்தான்குடி பட்டின ஆட்சி மன்ற தலைவராக 1975 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை பதவி வகித்த கால பகுதியில் காத்தான்குடிப் பட்டினத்தை பல்துறைகளிலும் வளர்ச்சி பாதைக்கு இட்டு சென்றார். இவர் மறைந்து 30 வருடங்கள் ஆகின்றபோதிலும் இவற்றின் காரணமாகத்தான் இப்போதுகூட காத்தான்குடி மக்களால் இதயபூர்வமாக நினைவில் வைக்கப்பட்டு நேசிக்கப்படுகின்றார். பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் எனக்கு இவரே வழிகாட்டி ஆவார்.

கேள்வி:- சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக பதவி வகித்த கால பகுதியில் நீங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முக்கியஸ்தராக செயற்பட்டு இருந்தீர்களே?
பதில்:- நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மூலமாக 1994 ஆம் ஆண்டு நேரடி அரசியலில் கால் வைத்தேன். அதே வருடம் ஏ. எச். எம். பௌசி தலைமையில் உருவான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – முஸ்லிம் பிரிவில் அங்கம் வகித்து, முன்னணி செயற்பாட்டாளராக விளங்கினேன். 2000 ஆம் ஆண்டு முதல் சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராகவும் பதவி வகித்தேன்.

இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவராகவும், வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை அமைச்சராகவும் உள்ள ரிசாத் பதியுதீன் அரசியலில் எனக்கு மிக இளையவர் ஆவார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மூலமாக சிறிய புள்ளியாகத்தான் அரசியலில் அவர் பிரவேசித்தார். 2000 ஆம் ஆண்டு பொது தேர்தலில் சுதந்திர கட்சியில் வன்னி மாவட்டத்தில் திடீர் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அதே தேர்தலில் சுதந்திர கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட நான் பாராளுமன்றத்துக்கு தெரிவாகாதபோதிலும் இக்கட்சியில் தமிழ் வேட்பாளராக போட்டியிட்டு இருந்த சோ. கணேசமூர்த்தியை மட்டக்களப்பு முஸ்லிம்களின் பெருவாரி வாக்குகளுடன் பாராளுமன்றத்துக்கு அனுப்பி இருந்தேன். அத்தேர்தலில் நுஆவில் மர சின்னத்தில் இதே மாவட்டத்தில் போட்டியிட்ட ஹிஸ்புல்லா தோல்வி அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நான் சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக செயற்பட்ட காலத்தில் பல நூற்று கணக்கான இளையோருக்கு அரசாங்க தொழில் துறைகளில் வேலை வாய்ப்புகள் பெற்று கொடுத்தேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக அப்போது அஷ்ரப் விளங்கியபோதும் அக்கட்சிக்குள் ஹிஸ்புல்லாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது என்று நான் உணர்ந்த நிலையிலேயே சுதந்திர கட்சியில் சேர்ந்திருந்தேன். அரசியலில் நானும், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவும் இரு துருவங்கள் ஆவோம். ஆனால் இம்மாவட்ட இளையோருக்கு என்னளவுக்கு அவரால் வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதை அவரின் ஆதரவாளர்களே ஒப்பு கொள்வார்கள். அவரும் எனது சேவைகளை பொது தளங்களில் ரொம்பவே சிலாகித்து பாராட்டி உள்ளார்.

அஷ்ரப்பின் அகால மரணத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக நியமனம் பெற்ற ரவூப் ஹக்கீம் பிரமாண்ட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை கொழும்பில் நடத்தி என்னையும், ரிசாத் பதியுதீனையும் கட்சிக்குள் சம்பிரதாயபூர்வமாக உள்வாங்கி கொண்டார்.

கேள்வி:- பிரதிநிதித்துவ அரசியலில் உங்கள் வகிபாகம் என்ன?
பதில்:- நான் கடந்த காலங்களில் பொது தேர்தல்களிலும், முதலாவது கிழக்கு மாகாண சபை தேர்தலிலும் போட்டியிட்டபோதிலும் நான் சார்ந்த கட்சியின் வெற்றிக்காகவே பெரிதும் உழைத்து கிங் மேக்கராக சாதித்தேன். ஆனால் காத்தான்குடி நகர சபைக்கு 2006 ஆம் ஆண்டு போட்டியிட்டு அமோக வாக்குகளுடன் தெரிவான நான் அதே சபையின் காலத்தில் உறுப்பினராக, பின்னர் பிரதி தலைவராக, நிறைவாக நகர பிதாவாக பதவிகள் வகித்து காத்தான்குடி நகரத்தை பல துறைகளிலும் மேம்பாடு காண வைத்தேன்.

குறிப்பாக நான் நகர பிதாவாக பதவி வகித்து கொண்டிருந்தபோது ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது. இதை தொடர்ந்து வெளிநாட்டு நிதி உதவிகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. இதனால்தான் தங்க சுனாமி என்று நம்மவர்கள் கதைக்க தொடங்கினார்கள்.

நான் காத்தான்குடி நகர சபைக்கு கிடைத்த பெருந்தொகை நிதியை மிகவும் பக்குவமாகவும், மக்களுக்கு பயன் உள்ள வகையிலும் பயன்படுத்தி வாழ்வாதார மீட்சிக்கும், எழுச்சிக்குமான அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டேன்.
எனக்கு ஆரவார அரசியல் செய்வதில் ஈடுபாடு இல்லை. தந்தையாரை போல கிங் மேக்கராக விளங்குவதிலேயே அதிக நாட்டம் உள்ளது. ஆயினும் கட்சி தலைமையால் எனக்கு வழங்கப்படுகின்ற கடமைகள், பொறுப்புகள் ஆகியவற்றை மிக சரியாகவும், நேர்த்தியாகவும் செய்து கொடுப்பேன்.

கேள்வி:- கிழக்கில் தோற்றுவிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிழக்கை சேர்ந்த ஒருவரே தலைவராக இருக்க முடியும், ஏனென்றால் அவரால்தான் கிழக்கு முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து நடக்க முடியும் என்கிற கோஷம் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- இது யதார்த்தத்துக்கு முற்றிலும் புறம்பான கோஷம் ஆகும். ஏனென்றால் நிலம் சார்ந்துதான் மாகாணங்கள் பிரிக்கப்பட்டு உள்ளனவே ஒழிய மக்களின் வாழ்வியல், பண்பாடு, கலாசாரம், தேவைகள் போன்ற விடயங்களை சார்ந்து அல்ல. திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் ஒருவரால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் என்றால் திருகோணமலையை காட்டிலும் அம்பாறைக்கு கிட்டவாக உள்ள கண்டி மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் ஒருவரால் ஏன் புரிந்து கொள்ள முடியாது? என்று கேட்கின்றேன்.

மட்டக்களப்பு முஸ்லிம்களின் உணர்வுகளை அஷ்ரப் புரிந்து நடக்க தவறினார் என்று உணர்ந்தவர்களாக மட்டக்களப்பு முஸ்லிம்கள் அம்பாறையை மையப்படுத்திய தென்கிழக்கு அலகு கோரிக்கைக்கு எதிராக பாரிய போராட்டங்களை 1998 ஆம் ஆண்டு நடத்தினர். இப்போராட்டங்களை நானே முன்னின்று நடத்தினேன்.
என்னை பொறுத்த வரை அஷ்ரப்புக்கு பிற்பாடு கிழக்கில் இருந்து சரியான முஸ்லிம் தலைவர் ஒருவர் இன்னமும் உருவாகவே இல்லை.

கேள்வி:- பிரிந்த கிழக்கில்தான் முஸ்லிம்களுக்கான தீர்வு உள்ளது என்று நீங்கள் நம்புகின்றீர்களா?
பதில்:- தலைவர் அஷ்ரப்புக்கே இந்த நம்பிக்கை இருந்திருக்கவில்லை. அவருடைய காலத்தில் இணைந்த வடக்கு – கிழக்கு பிரிக்கப்படுவது என்பது கற்பனையான விடயமாகத்தான் இருந்தது.

கிழக்கு பிரிக்கப்படுவது முஸ்லிம்களுக்கான தீர்வு அல்ல, ஏனென்றால் இங்கு 40 சதவீதம் அளவில்தான் முஸ்லிம்கள் உள்ளனர், எனவே இங்கு முஸ்லிம்கள் ஆட்சி அமைக்க வேண்டுமானால் இங்கு உள்ள தமிழர்களிலோ அல்லது சிங்களவர்களிலோ முஸ்லிம்கள் தங்கி இருக்க வேண்டி உள்ளது என்று பிரிப்பு இடம்பெறுவதற்கு பல வருடங்களுக்கு முன்பே அஷ்ரப் தீர்க்கதரிசனத்தோடு சொல்லி இருந்தார்.

பிரிந்த கிழக்கில் முதலாவது மாகாண சபை தேர்தல் மூலமாக தமிழரும், சிங்களவரும் சேர்ந்து முதலமைச்சரை தீர்மானித்து கொண்டு வந்தனர். தற்போதைய மாகாண சபையில் தமிழர்களின் உதவியுடன்தான் நஸீர் அஹமட் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். இதனால்தான் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனால் தமிழ் முதலமைச்சர் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடிகின்ற அளவுக்கு நஸீர் அஹமட்டால் முஸ்லிம் முதலமைச்சர் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியாமல் உள்ளது. முற்றிலும் நில தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் ஒன்று இணைந்த வடக்கு – கிழக்கிலோ, பிரிந்த கிழக்கிலோ அமைத்து கொடுக்கப்படுவதே முஸ்லிம்களுக்கான நிரந்தர தீர்வாக அமையும்.

கேள்வி:- நல்லாட்சியின் போக்கு குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் பகலில் வெளிச்சத்தில் நடந்தன. ஆனால் நல்லாட்சியில் இரவில் இருட்டில் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. நல்லாட்சியை நடத்துபவர்களுக்கு கொஞ்சம் பயம் இருக்கின்றது என்பதை இது காட்டுகின்றது. இருப்பினும் முஸ்லிம்கள் தொடர்ந்தேச்சையாக நல்லாட்சியிலும் பலி கடாக்கள் ஆக்கப்படுகின்றனர் என்பதில் மாற்றம் இல்லை. இதற்காக மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர முடியாது.

இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து இது வரை காலமும் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றையே மாறி மாறி ஆட்சிக்கு கொண்டு வந்து ஏமாந்து உள்ளோம். மூன்றாவது பெரிய கட்சியான ஜே. வி. பியை ஒரு முறை ஆட்சி பீடத்துக்கு ஏற்றி அவர்களாவது நல்ல ஆட்சியை நடத்துகின்றார்களா? என்று பார்க்க வேண்டும். இதுவே நமக்கு முன்னால் உள்ள ஒரேயொரு மாற்று தெரிவாகும். 60 வருடங்களுக்கு மேலாக மாறி மாறி ஏமாந்து வந்த நாம் 05 வருடங்களுக்கு ஜே. வி. பியை ஆட்சி பீடம் ஏற்றுவதால் பெரிதாகவோ, புதிதாகவோ நஷ்டம் ஒன்றும் அடைய போவதில்லை.

கேள்வி: மட்டக்களப்பில் தமிழ் – முஸ்லிம் உறவு என்ன நிலையில் உள்ளது?
பதில்:- கடந்த காலத்தில் சில, பல கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றனதான். நிகழ்காலத்தில் மாவட்டத்தில் ஆங்காங்கு காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இரு இனங்களுக்கும் இடையில் காணப்படவே செய்கின்றன. ஆனால் சிங்களவர்களோடு சேர்ந்து அரசியல் செய்வதை முஸ்லிம் தலைவர்கள் விரும்புகின்றபோதிலும் தமிழர்களோடு சேர்ந்து வாழ்வதையே முஸ்லிம் மக்கள் விரும்புகின்றனர். தூரத்து தண்ணீர் குடிக்க உதவாது என்கிற யதார்த்தத்தை புரிந்து உள்ளனர்.

நான் இந்த இடத்தில் எனது தந்தையார் குறித்து மீண்டும் சொல்ல வேண்டி நேர்ந்து உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் – முஸ்லிம் ஐக்கியத்தை கட்டி எழுப்புகின்ற பகீரத முயற்சிகளில் இவர் ஈடுபட்டு, அதில் வெற்றி கண்டு வந்த நிலையிலேயே அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் ஆசியுடன் ஊர்காவல் படையினரால் 1988 ஆம் ஆண்டு சுட்டு கொல்லப்பட்டார்.

கொலையாளிகளை இந்திய அமைதி படையினர் கைது செய்து பின்னர் விடுவித்து விட்டனர். அக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் எனது தந்தையாரை போலவே தமிழ் – முஸ்லிம் ஐக்கியத்தை நிலைநாட்டுகின்ற முன்னெடுப்புகளில் ஈடுபட்ட தலைவர்கள் பலரும் திட்டமிடப்பட்ட வகையில் இவ்விதம் சுட்டு கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களில் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை பிரதி அமைச்சராக விளங்கிய ஏ. எல். அப்துல் மஜீத்தும் ஒருவர். இவர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப். ஏ. மஜீத்தின் தந்தை ஆவார்.

Web Design by The Design Lanka