இந்திய அணியில் ரஷீத் கான்: விட்டுத் தர ஆப்கானிஸ்தான் அதிபர் மறுப்பு - Sri Lanka Muslim

இந்திய அணியில் ரஷீத் கான்: விட்டுத் தர ஆப்கானிஸ்தான் அதிபர் மறுப்பு

Contributors
author image

A.M.Sulfikar - Akkaraipattu

ஹைதராபாத் அணிக்காக விளையாடும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை, இந்திய அணிக்கு விட்டுத் தர முடியாது என்று ஆப்கானிஸ்தான் அதிபர் கூறியுள்ளார்.
ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 19 வயதாகும் ரஷீத் கான். ஏற்கனவே சர்வதேச அளவில் தனது பவுலிங்கால் அவர் மிரட்டி வருகிறார்

இந்த நிலையில் ஐபிஎல்லிலும் அவர் கலக்கோ கலக்கு என்று கலக்குகிறார். கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று இரவு நடந்த 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் தனியாளாக ஹைதராபாத் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

பேட்டிங்கில் ஹைதராபாத் ஸ்கோர் மோசமாக இருந்தபோது, கடைசி கட்டத்தில் வந்த பவுலர் ரஷீத் கான் 10 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்தார். இதைத் தவிர 3 விக்கெட்களையும் வீழ்த்தினார். மேலும் 2 கேட்ச்களையும் பிடித்தார். இதனால் பைனல்ஸ்க்கு ஹைதராபாத் முன்னேறியது.

இந்த நிலையில், டுவிட்டரில் ரஷீத் கானை பலரும் பாராட்டி வருகின்றனர். அதில் சிலர், ரஷீத் கானுக்கு உடனடியாக இந்தியக் குடியுரிமை அளித்து, இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்த கோரிக்கை குறித்து உள்துறை அமைச்சகம்தான் பரிசீலிக்க வேண்டும் என்றார்.

இந்த டுவிட்களுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி டுவிட்டரில் பதிலளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியையும் அதில் அவர் டேக் செய்துள்ளார்.

எங்களுடைய ஹீரோ ரஷீத் கான் குறித்து ஆப்கானிஸ்தான் பெருமைபடுகிறது. அவருக்கு மிகச் சிறந்த வாய்ப்பை அளித்த இந்தியாவுக்கு நன்றி. ஆப்கானிஸ்தான் சிறப்பை ரஷீத் கான் வெளிப்படுத்தி வருகிறார். அவரை நாங்கள் விட்டுத் தர மாட்டோம் என்று டுவிட்டரில் கனி குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வீரருக்காக அந்த நாட்டு அதிபர் செய்தி வெளியிட்டுள்ளதன் மூலம், ரஷீத் கானின் முக்கியத்துவம், சிறப்பு தெரியவருகிறது.

Web Design by Srilanka Muslims Web Team