இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம்: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்! - Sri Lanka Muslim

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம்: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!

Contributors

இந்தோனேசியாத் தீவுகள், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் உள்ள ‘ரிங் ஆப் பயர்’ எனப்படும் எரிமலைகள் வரிசையின் மீது அமைந்துள்ளதால் இங்கு எப்போதும் எரிமலை சீற்றம் குறித்த அச்ச உணர்வு மக்களிடையே காணப்படும். ஜாவா தீவின் மத்திய பகுதியில் இருந்த மேர்பி என்ற எரிமலை கடந்த 2010 ஆம் ஆண்டில் வெடித்துச் சிதறியதில் 350க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கிழக்கு நுசா டெங்காரா மாகாணத்தின் சிறிய தீவு ஒன்றில் இருந்த எரிமலை வெடித்ததில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற நேர்ந்தது.

இந்நிலையில், சுமத்ரா தீவின் வடக்குப் பகுதியில் உள்ள சிநாபங் என்ற எரிமலை தற்போது குமுறத் தொடங்கியுள்ளது. இந்த மாத ஆரம்பத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவு வரை இந்த எரிமலை சிவப்பு நிற சூடான சாம்பலையும், பாறைகளையும், எரிமலைக் குழம்பையும் வெளியேற்றி வருகின்றது.

கடந்த 2010ஆம் ஆண்டிற்குப் பின் இப்போதுதான் இந்த எரிமலை மீண்டும் குமுறத் துவங்கியுள்ளது. பாதுகாப்பு காரணமாக இதன் அருகில் உள்ள கரோ மாவட்டத்தின் கிராமவாசிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

7 கிராமங்களிலிருந்து இதுவரை மொத்தம் 5,265 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக உள்ளூர் அரசின் செய்தித் தொடர்பாளரான ராபர்ட் பெரன்கினாங்கின் தெரிவித்துள்ளார். எரிமலை தணிவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை என்பதால் அவர்கள் மிகவும் பயந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். மூன்று கிலோமீட்டர் சுற்றளவிற்குள் இருப்பவர்களை வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் பாதுகாப்பு கருதி இந்த மக்கள் தேவாலயங்களிலோ, மசூதிகளிலோ தங்க விரும்புகின்றனர் என்றும் ராபர்ட் குறிப்பிட்டார்.

இன்று அதிகாலையிலும் சீறிய இந்த எரிமலையிலிருந்து வெப்பம் மிகுந்த வாயு வெளியேறியதாக தேசிய பேரழிவு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரஹோ தெரிவித்துள்ளார். ஆயினும், முன்பு காணப்பட்டதைவிட இது சிறிய அளவிலான சீற்றமாகவே இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team