இனவாதத்தைத் தூண்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது: ஜனாதிபதி - Sri Lanka Muslim

இனவாதத்தைத் தூண்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது: ஜனாதிபதி

Contributors

-தினகரன்-

வடக்கின் முன்னேற்றம் மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள பாரிய கல்வி வளர்ச்சி புலிகளினாலோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலோ ஏற்பட்டதல்ல. அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குக் கிடைத்த பிரதிபலனே அது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். யுத்தம் நடைபெற்ற யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கு நூற்றிபதினேழு வீதமாகக் கல்வி வளர்ச்சியடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி;

இந்த வளர்ச்சிக்கு புலிகளின் செயற்பாடுகளோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளோ காரணமல்ல. அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குக் கிடைத்த பிரதிபலனே அது என்பதை அனைவரும் உணர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பிபிலை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பிபிலை பிரதேச சபைக் கட்டிடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து அதனையொட்டி பிபிலை விஜித் விஜயமுனி சொய்சா கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் பேரணிக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அமைச்சர்கள் ஏ. எல். எம். அதாவுல்லா, ஜகத் புஷ்பகுமார, சுமேதா ஜி. ஜயசேன, விஜித் விஜயமுனிசொய்சா, ஊவா மாகாண முதலமைச்சர் சஷிந்ர ராஜபக்ஷ, ஆளுநர் நந்தா மத்தியூ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்:- மந்த போசனம், வறுமை, குறைந்த வருமானம் பெற்ற குடும்பங்கள் நாட்டில் ஏற்பட்டுவரும் அபிவிருத்தி விவசாயப் புரட்சியினால் அந்நிலையிலிருந்து மாற்றம் பெற்று தம்மை பலப்படுத்தி வரும் யுகம் இதுவாகும்.

இந்தியா, பாகிஸ்தான், வியட்நாம் என அலைந்த இந்த நாட்டு மக்களுக்கு அரிசி தேடிய யுகத்தை நாம் மறந்து விட முடியாது. அந்த நிலை மாற்றம் அடைந்து நாம் அரிசி, சோளம் போன்றவற்றில் தன்னிறைவு கண்டு அவற்றை வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யும் யுகத்தை உருவாக்கியுள்ளோம். கப்பலுக்கு காத்திருந்த யுகம் இன்றில்லை. குறிப்பாக வெல்லஸ்ஸ மக்கள் இப்பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் அபிவிருத்தியினால் தம்மைப் பலப்படுத்திக்கொண்டு செல்வதைக் காண முடிகின்றது.

மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் கிழக்கிலுள்ள மாகாணங்கள் அபிவிருத்தியில் இணைந்து செயல்படுவதால் அதன் பிரதிபலனை நாடு பெற்றுவருவதையும் குறிப்பிட முடியும். விவசாயத்தில் நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டு அதனை முன்னேற்றி வருகிறோம். அதற்கு வெல்லஸ்ஸ பிரதேசம் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.

விவசாயம், மின்சாரம், அதிவேக பாதைகள் குடிநீர், துறைமுகங்கள் என அபிவிருத்தி இடம்பெறும் போது அதன் பிரதிபலன் மக்களுக்குக் கிடைத்து வருகின்றது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் வேலை வாய்ப்பின்மை ஆறு வீதமாகக் குறைந்துள்ளது.

டந்த 4 வருடத்திற்கு முன்பு 100ற்கு 39 வீதமாக இருந்த மந்த போசனம் தற்போது 17 வீதமாகக் குறைவடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கை நிலை கட்டியெழுப்பப்படும் போது அபிவிருத்தி அதனுடன் நேருங்கிய தொடர்புபடுகிறது. எமது எதிர்கால சந்ததி மீது எமக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. வெல்லஸ்ஸ பிரதேசமும் கல்வியில் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டு வருவது மகிழ்ச்சிதருகிறது.

வடக்கில் யுத்தம் நடந்த பிரதேசங்களும் கல்வியில் பெரும் முன்னேற்றுத்தைக் கண்டு வருகின்றன. யாழ்ப்பாணம் கல்வியில் 117 வீத வளர்ச்சி கண்டுள்ளது. இது புலிகள் மூலம் கிடைத்த பிரதிபலனில்லை. அதேபோன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூலம் கிடைத்த பிரதிபலனுமல்ல. அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் ஏற்பட்டுள்ள பிரதிபலன் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.

இனவாதத்தை தூண்டிவிட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாடு என்ற ரீதியில் அனைவரும் இணைந்து இதனைக் கட்டியெழுப்ப வேண்டும். யுத்தத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மொனராகலை மாவட்டமும் ஒன்று. நாட்டின் முழு இயல்பு வாழ்க்கையும் சீரழிந்திருந்த காலம் அது.

பாடசாலைகளுக்குச் செல்ல பிள்ளைகளுக்கு சுதந்திரம் இருக்கவில்லை. இப்போது அந்த நிலை மாறி கல்வியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எமது பிள்ளைகளின் சுதந்திரமான செயற்பாடுகளைப் பார்த்து எம்மால் மகிழ்ச்சி அடைய முடிகிறது. பிள்ளைகளே எமது எதிர்காலத்தினைப் பொறுப்பேற்கப் போகின்றவர்கள். அவர்களின் திறமைகள் உள்நாட்டில் மட்டுமன்றி எங்கும் வெளிப்பட்டு வருகின்றன. பிள்ளைகளை கல்வியில் மட்டுமன்றி விளையாட்டிலும் ஊக்குவிக்க வேண்டும். உடற்பயிற்சி மிக அவசியமாகும். நீரிழிவு போன்ற நோய்கள் இவற்றின் மூலமே தவிர்க்கப்படும்.

சில குடும்பங்களில் பிள்ளைகள் விளையாடுவதில்லை. வியர்வை வெளி வருவதில்லை. உணவு உண்பது முதல் அனைத்தையும் தொலைக்காட்சிக்கு முன்னால் இருந்துகொண்டே செய்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். பெற்றோர்கள் இதில் அதிக கவனம் செலுத்துவது முக்கியமாகும். எமது பாடசாலை காலத்தில் நாம் சனி, ஞாயிறு தினங்களில் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தோம்.

கொழும்பு பகுதியில் இப்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பாதுகாப்புச் செயலாளர் உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ப பல வசதிகளை நகர்ப்புறத்தில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். ஆரோக்கியமான பிள்ளைகள் ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் அனைவரும் கவனம் செலுத்துவது முக்கியமாகும். நம் நாட்டில் அனைவருக்கும் சொந்த வீடு என்ற மஹிந்த சிந்தனைக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். 60,000 வீடுகள் என நாம் ஆரம்பித்தோம். எனினும் தற்போது குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன.

நகருக்கு மட்டுமே மட்டுப்படுத்தப் பட்டிருந்த அபிவிருத்தியை நாம் கிராமங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளோம். கிராமங்களின் பிரச்சினைகள் அந்தந்த கிராமங்களுக்குள்ளேய தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். நாடு அழகுபெரும் போதும் அபிவிருத்தியடையும் போதும் அதன் பெருமை நாட்டு மக்களுக்கே நாடும் மக்களின் வாழ்வும் அழகுபெற வேண்டும் அதுவே எமது எதிர்ப்பார்ப்பு எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். –

Web Design by Srilanka Muslims Web Team